search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyclone Michaung"

    • பொன்னேரி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட தாலுகாக்கள் மற்றும் நகர்புற பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 150 மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆவடி, திருநின்றவூர், பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றப் பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இந்தநிலையில் திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பெரியார் நகர், சுதேசி நகர் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் இன்னும் சூழ்ந்து உள்ளது. அருகில் உள்ள ஈசா ஏரி நிரம்பி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் வந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் இன்னும வெள்ள நீர் வடியவில்லை. இடுப்பு அளவுக்கு மேல் உள்ள தண்ணீரில் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே வரமுடியாமலும் அத்தியா வசிய பொருட்கள் வாங்க முடியாமலும் தவிக்கும் நிலை உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை நீடித்து வருகிறது.

    இந்தநிலையில் அந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட தாலுகாக்கள் மற்றும் நகர்புற பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டேர் சம்பா நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பழவேற்காடு மீனவர்களின் படகுகள் மீன்பிடி உபகரணங்கள் கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. கால்நடை உயிரிழப்பு மற்றும் 3 மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

    மழையினால் பூண்டி, புழல் பகுதிகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் ஆரணி ஆற்று உபரி நீர் ஆகியவை தேங்கி வடியாமல் இருந்த இடங்களில் தற்போது தண்ணீர் வடிந்து உள்ளது.

    மாவட்டம் முழுவதும் 172 முகாம்களில் 15 ஆயிரம் பேரை குறிப்பாக அதிகள வில் இருளர் இன மக்களை தங்க வைத்து தற்போது வரை உணவளித்து வருகி றோம். இதுவரை அதிகம் பாதித்த பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 99 சதவீதம் இயல்புநிலை திரும்பி உள்ளது. மாவட்டத்தில் காக்களூர், திருநின்றவூர் அருகே பெரியார் நகர் சுதேசிநகர் பூந்தமல்லி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    மாவட்டம் முழுவதும் 150 மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போது வரை தண்ணீர் வெளியேறாமல் இருப்பதற்கான வடிகால் இல்லாமல் கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட குடியிருப்புகளால் இந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் தேவையான இடங்களில் போர்க்கால அடிப்படையிலும் மற்ற இடங்களில் அரசின் விதி முறைகளை பின்பற்றியும் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ளை எடுத்தால் மட்டுமே நீர் வடியும் என்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை தவிர 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஆரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கினால் வஞ்சிவாக்கம் பகுதியில் கரை உடைப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் நிரந்தர தீர்வு காண திட்ட அறிக்கை தயார் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் அரசுக்கு சமர்ப்பித்து நிரந்தர தீர்விற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.

    • மழைநீரும், கழிவு நீரும் சூழ்ந்த பகுதிகளில் உணவும், உறக்கமும் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
    • திருப்புகழ் குழுவின் அறிக்கைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறி வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயலால் சென்னை மாநகரில் பெய்த தொடர்மழை ஓய்ந்து ஒரு வாரம் ஆகும் நிலையில் சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை. முழு இயல்பு நிலை திரும்பு விட்டதாக ஆட்சியாளர்களும், 99.50 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டதாக தலைமைச் செயலாளரும் கூறி வருவது குரூரமான நகைச்சுவை ஆகும். மழைநீரும், கழிவு நீரும் சூழ்ந்த பகுதிகளில் உணவும், உறக்கமும் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

    திருப்புகழ் குழுவின் அறிக்கைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறி வருகிறது. இது அப்பட்டமான பொய்.

    சென்னை மாநகருக்கான வெள்ளத்தடுப்புத் திட்டங்கள், வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

    அதுமட்டுமின்றி, திருப்புகழ் குழுவில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் எத்தனை? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நடவடிக்கை அறிக்கையையும் அரசு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஒன்றிய அரசின் சார்பில் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 450 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    • இதுவரை இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ள 133 படகுகளை மீட்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க.வின் நிர்வாகக் குழுக்கூட்டம், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில், இன்று தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, மணி, ஆடுதுறை முருகன், ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய 'மிச்சாங்' புயல் வீசியதால் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

    வெள்ளப் பாதிப்புகளை சரி செய்யவும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் இடைக்கால நிவாரணமாகரூ. 5,060 கோடியை உடனடியாக வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    ஒன்றிய அரசின் சார்பில் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 450 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    மேலும் நகர்ப்புற வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிதியாக 5000 கோடி ரூபாய் உடனே விடுவிக்குமாறு ம.தி.மு.க. நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

    தமிழ்நாட்டு மீனவர்களை எல்லைதாண்டி வந்து தாக்குவதும் கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன.

    இந்திய அரசு இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், இதுவரை இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ள 133 படகுகளை மீட்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது.

    தமிழ்நாடு அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதுடன், ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு மேற்கொள்ள முயற்சிப்பதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    • மிச்சாங் புயல் நிவாரணமாக 1011.29 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியதாக பா.ஜ.க.வினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
    • மிச்சாங் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்டது ரூ.5,060 கோடி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரிடர் நிவாரண நிதியாக 7,532 கோடி ரூபாயை கடந்த 13.6.2023 அன்று 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது . இதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 450 கோடி ரூபாய் மட்டுமே. 6 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை, ஏதோ புயல் பாதித்த பிறகு ஏதோ தமிழ்நாட்டுக்கு வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்தியில் ஆளும் மோடி அரசும், இங்குள்ள பா.ஜனதாவும் முனைந்திருக்கிறார்கள். 70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிக கனமழை பெய்து பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதி ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட 450 கோடி ரூபாயை மிச்சாங் புயல் நிவாரணத்துக்கு பொய் கணக்கு காட்டுகிறார்கள்.

    வழக்கமான மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி போன்று கணக்குக் காட்டி ஏமாற்றுகிறது மத்திய நிதித்துறை அமைச்சகம்.

    மிச்சாங் புயல் நிவாரணமாக 1011.29 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியதாக அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

    நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு. 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிச்சாங் புயல் நிவாரணம் ஆகும். 561.29 கோடி ரூபாய் என்பது இனி வரும் காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள வெள்ள அபாய தடுப்புப் பணி திட்டத்துக்கான நிதியாகும்.

    மிச்சாங் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்டது ரூ.5,060 கோடி. ஆனால் யானை பசிக்கு சோளப்பொறி போல் வெறும் 450 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாட்டை வழக்கம்போல் மத்திய அரசு வஞ்சித்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தென் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கலாம்.
    • சென்னையில் நடந்த இயற்கை சீற்றம் மிகப்பெரிய அளவில் நடந்ததாக அரசு சொல்கிறது.

    நெல்லை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் பாளை கே.டி.சி. நகரில் நேற்று மாலை நடந்தது.

    இதில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

    தொடர்ந்து இன்று காலை நெல்லையப்பர் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு 15 நாட்களுக்கு பிறகு கூடி வரும் தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பதை அறிவிப்போம்.

    பா.ஜ.க.வுடன் இணைந்து பயணிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால் இறைவன் நினைப்பது நடக்கும். மோடி நம் நாட்டின் தலைவர் என்பதை பார்க்க வேண்டும். மோடி ஒரு கட்சியைச் சார்ந்தவர் என்பதை மட்டும் நினைக்கக்கூடாது.

    தென் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கலாம். நெல்லை தொகுதியில் போட்டியிடுவதாகவும் இருக்கலாம்.

    எங்களது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான். அதற்காகத்தான் சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் தொகுதி வாரியாக சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்கி உள்ளேன்.

    தொகுதியில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளேன்.

    சென்னையில் நடந்த இயற்கை சீற்றம் மிகப்பெரிய அளவில் நடந்ததாக அரசு சொல்கிறது. 56 ஆண்டுகளாக இதைத்தான் நாம் சொல்கிறோம். வருமுன் காப்போம் திட்டம் என பல திட்டங்களை 2 திராவிட கட்சிகளும் வகுத்து உள்ளது. இலவசங்களை தவிர்த்து அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு பல கோடி செலவு செய்து பாதிப்பு ஏற்படாதவாறு சீர் செய்திருக்கலாம்.

    சதுப்பு நிலங்களில் 5,000 ஏக்கருக்கு மேல் பட்டா போட்டு கொடுத்து வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். சதுப்பு நிலங்கள், நீர்வழித்தடங்கள், வடிகால் உள்ளிட்டவைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த பிரச்சனையில் அரசை மட்டும் குறை சொல்லவில்லை. பொதுமக்களும் இதில் குற்றம் செய்தவர்கள்.

    ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை பொதுமக்கள் திருப்பி கொடுத்தால் தான் நீர் வழித்தடங்கள் சிறப்பாக இருக்கும். சென்னை மக்கள் அடிப்படை வசதிகள் பலதையும் இழந்துவிட்டனர்.

    அரசு நிவாரணம் மக்களுக்கு தற்காலிக உதவியாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வாக இருக்காது. வருங்கால தொலைநோக்கு திட்டத்தை அடுத்த தலைமுறைக்காக சிந்தித்து இப்போது செயல்படுத்தினால் தான் நன்றாக இருக்கும். மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக அரசு செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

    சென்னை மழை வெள்ள பாதிப்பில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளத்தின் தகவல்களை வைத்து இனிமேல் வரும் காலங்களில் தவறு நடந்திருக்காமல் இருக்க நான் முதலமைச்சராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன்.

    சென்னை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு செய்த திட்டத்தை மீண்டும் ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    2026-ம் ஆண்டு நான் தான் முதலமைச்சர் வேட்பாளர். நான் முதலமைச்சரானால் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவேன். குக்கிராமங்களிலும் கழிவுநீர் செல்வதற்கான பாதைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.

    அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம், தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுப்பேன். தகுதி உள்ளவர்களையும் அறிவாளிகளையும், என்னுடன் சேர்த்துக்கொண்டு சிறந்த திட்டங்களை செயல்படுத்துவேன்.

    முதலமைச்சராக பதவியேற்று ஒரு வருட காலம் மக்களுக்கு தேவையான என்னென்ன திட்டங்களை செய்யலாம் என்பதையே ஆய்வு மேற்கொள்வேன். அதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன்.

    எதையும் மக்களுக்காக ஒரு ஆண்டுக்கு பிறகு செய்யவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்து சென்று விடுவேன்.

    தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளில் எது நல்ல அரசியல் கட்சி என தேர்ந்தெடுங்கள். அதுதான் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த், முன்னாள் மாவட்ட செயலாளர் அழகேசன், பகுதி செயலாளர் அழகேச ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக பாளை மத்திய சிறை அருகே உள்ள காது கேளாதோர் பள்ளியில் குழந்தைகளுடன் சரத்குமார் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.

    தொடர்ந்து சரத்குமாருடன் அங்குள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    • சேதமடைந்த சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும்.
    • ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 17 ஆயிரம் வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, கடந்த வாரம் மிக்ஜம் புயல் மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத்தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று இந்த தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளம் சாக்கடையுடன் கலந்து, பொதுமக்கள் அவர்களுடைய வீடுகளை விட்டும், குடியிருப்பு பகுதிகளை விட்டும் வெளியேற முடியாத நிலையில், கடந்த ஒருவார காலமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை.

    இன்னும் சகஜ நிலைக்கு திரும்ப ஒருவார காலம் ஆகும். ஏழை, எளிய, தினசரி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், நடுத்தர மக்கள் இரண்டு வார காலம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில், வேலை செய்ய முடியாமல் தங்களது 15 நாள் வருமானத்தை இழந்துள்ளதுடன், தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

    எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான ரூ. 6 ஆயிரம் என்பதை உயர்த்தி ரூ.12 ஆயிரமாக வழங்குவதுடன், எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த மழை வெள்ளத்தால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதை உடனடியாக அரசு, அந்தந்த வாகனங்களுக்குண்டான நிறுவனங்கள் மூலமாக, பகுதி வாரியாக சிறப்பு வாகன பழுது நீக்கும் முகாம்களை ஏற்பாடு செய்து அந்த வாகனங்களை அரசு செலவில் பழுது நீக்கி, பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிந்த பிறகு கழிவு நீர் உட்புகுந்ததால், வீடுகள் மற்றும் வீதிகள் சேறும் சகதியுமாக தேவையற்ற குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு அடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு போர்க்கால அடிப்படையில் சேறு, சகதி, குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், கிருமிநாசினிகளைத் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

    சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழை நீருடன் அப்பகுதியில் இயங்கிவரும் ஆலைகளின் ஆயில் கழிவுகளால் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தகுந்த தொழில் நுட்ப உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணியினையும் செய்துதர வலியுறுத்துகிறேன்.

    மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கும் சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும்.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் மழை நீர் உட்புகுந்து இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் முற்றிலுமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்து, உரிய இழப்பீடுகள் வழங்கி, மீண்டும் அத்தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு தக்க நட வடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

    சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வலியுறுத்துகிறேன்.

    மேலும், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும், நஞ்சை நிலங்களில் பயிர் செய்திருந்த நெற்பயிர்கள் தற்போது பெய்த கன மழையால் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 17 ஆயிரம் வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன்.

    பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, மேற்கண்ட நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.
    • பள்ளி-கல்லூரி கட்டிட சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாத அளவுக்கு தடுப்புகளை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    மழை வெள்ள பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ந் தேதி முதல் மூடப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் வடிந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து ஒரு வார விடுமுறைக்கு பிறகு நாளை (11-ந் தேதி) பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

    இதையொட்டி கடந்த 2 நாட்கள் 4 மாவட்டங்களிலும் பள்ளி-கல்லூரிகளை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களை வரவழைத்து பள்ளி வளாகத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. லாரிகள் மூலமாக இந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

    பள்ளி தலைமை ஆசிரி யர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் அமரும் இருக்கைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.

    இப்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மின்சாதன பெட்டிகளும் சரிபார்க்கப்பட்டு மின்கசிவு ஏதும் ஏற்படுகிறதா? என்பதையும் பள்ளி கல்லூரி ஊழியர்கள் சரிபார்த்துள்ளனர். இது தொடர்பாக தேவையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனது பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி-கல்லூரிகளை திறப்பதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக பள்ளி கல்வி துறை சார்பில் சுற்றறிக்கையும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    பள்ளி-கல்லூரி கட்டிட சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாத அளவுக்கு தடுப்புகளை அமைக்க வேண்டும். கதவு, ஜன்னல், பெஞ்ச் போன்றவற்றை கிருமி நாசினிகள் மூலமாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி மேற்கண்ட பணிகளில் பெரும்பாலானவற்றை பள்ளி-கல்லூரி நிர்வாகத்தினர் முடித்துள்ளனர். இதை தொடர்ந்து ஒருவார விடுமுறை முடிந்து பள்ளி-கல்லூரிகள் நாளை வழக்கம் போல் செயல்பட உள்ளன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து கீழ் தளத்தில் வெள்ளம் புகுந்ததால் பாட புத்தகங்கள், சீருடைகள் சேதமடைந்துவிட்டன.

    இப்படி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள், சீருடைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நாளை நடைபெற உள்ளது. தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • உதயநிதி ஸ்டாலின் 600 பேர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார்.
    • அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், கவுன்சிலர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 600 பேர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் இன்று வழங்கினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை எப்போது வழங்கப்படும்?

    பதில்:- இன்னும் ஒரு வாரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கத்தொடங்கி விடுவோம். முதலில் அதற்கான டோக்கனை கொடுக்க வேண்டும். சில இடங்களில் ரேஷன் கடைகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த பொருட்களும் சேதம் அடைந்தது. அதை சரி செய்த பிறகு ஒரு வாரத்தில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன் பிறகு வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.

    கேள்வி:- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்களே?

    பதில்:- எதிர்க்கட்சிகள் அப்படி சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். நாம் நமது வேலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    கேள்வி:- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திருப்புகழ் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளதே?

    பதில்:- அப்படி அமைத்ததால் தான் இவ்வளவு மழை பெய்தும் 3 நாளில் மழைநீர் வடிந்து மின்சாரம் வந்துள்ளது. இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.

    கேள்வி:- மழை சேதத்தை பார்வையிட வரும் மத்திய குழுவிடம் என்னென்ன விஷயங்களை வலியுறுத்த இருக்கிறீர்கள்?

    பதில்:- ஏற்கெனவே மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்து வெள்ள சேதத்தை பார்வையிட்டார். அவரிடம் எவ்வளவு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் விளக்கி கூறியுள்ளார். தற்போது முதல் கட்ட நிதி கொடுத்து இருக்கிறார்கள். விரைவில் அடுத்த கட்ட நிதியை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

    கேள்வி:- சென்னையில் வெள்ளம் பாதித்த ஒரு சில இடங்களில் கவுன்சிலர்கள் வந்து ஆய்வு செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

    பதில்:- அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், கவுன்சிலர்கள் ஆய்வு செய்துள்ளனர். மக்கள் மத்தியில் சின்ன அதிருப்தி இருக்கத்தான் செய்யும். இவ்வளவு மழை பெய்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கடந்த 50 வருடங்களில் பெய்யாத மழையாகும். ஓரளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை களத்தில் இருந்து செய்து இருக்கிறோம். முதலமைச்சர், மேயர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் எல்லோருமே களத்துக்கு வந்தனர். தன்னார்வலர்கள் கூட களத்துக்கு வந்துள்ளனர். யாரையுமே நான் குறை சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
    • திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    அதிலும் குறிப்பாக அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசித்தவர்களும் ஏரி-கால்வாய் நீர்நிலைகள் அருகே வசித்தவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் 2 நாட்களில் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில் புயல்-வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்குவதாகவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம், உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.37 ஆயிரத்து 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு ரூ.50 ஆயிரம், சிறிது சேதம் அடைந்திருந்தால் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதால் எந்தெந்த ஏரியா கடுமையாக பாதிக்கப்பட்டது என்ற விவரம் தாலுகா அலுவலகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையையொட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளும் மழைநீரில் தத்தளித்ததால் அந்த பகுதிகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. அதில் தென் சென்னையில் 11 லட்சத்து 51 ஆயிரத்து 858 குடும்ப அட்டைதாரர்களும் வடசென்னையில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 463 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 22 லட்சத்து 18 ஆயிரத்து 121 குடும்ப அட்டைகள் உள்ளது.

    இதே போல் திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர். இவர்களில் சென்னையையொட்டி உள்ள புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவி தொகை கிடைக்கும் என தெரிகிறது.

    மொத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 95 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்கும். மற்ற 3 மாவட்டங்களுக்கு 60 சதவீதம் பேர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் மொத்தம் 27 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என தெரிகிறது.

    இது சம்பந்தமாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட உள்ளது. அதில் யார்-யாருக்கு பணம் கிடைக்கும் என்பது தெளிவுப்படுத்தப்படும். அரசாணையில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கை உயரவும் வாய்ப்பிருக்கிறது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் 16 தாலுகா அலுவலகம் உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ரூ.6 ஆயிரம் கிடைத்து விடும்.

    குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பெரும் தொழில் அதிபர்கள் தவிர்த்து மற்ற பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதே சமயம் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த சென்னைக்கு மிக அருகில் உள்ள பகுதிகள் அதில் வசிக்கக்கூடிய மக்கள் மட்டுமே புயல் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேல் மருவத்தூர், உத்தரமேரூர் போன்ற உள்புற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    எனவே அதுபோன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரண தொகை கிடைக்காது. எனவே யாரெல்லாம் உண்மையாக பாதிப்புகளை சந்தித்து வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்களோ அவர்களுக்கு மட்டுமே ரூ.6 ஆயிரம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

    எந்தெந்த பகுதிகள், தெருக்கள், பாதிக்கப்பட்டவை என வி.ஏ.ஓ., தாசில்தார்கள் பட்டியல் எடுத்து கலெக்டர்களிடம் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்க உள்ளனர். அதன் அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் பணம் வழங்கப்படும்.

    எந்த தேதியில் பணம் கொடுக்கப்படும் என்ற விவரம் விரைவில் அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மிச்சாங் புயல் இயற்கை பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • திருமாவளவன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 'மிச்சாங்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிச்சாங் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதன் தொடக்கமாக தன்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

    * புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டி.வி.எஸ். நிறுவனம் ரூ.3 கோடி வழங்கி உள்ளது.

    * அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஷேணு அகர்வால், மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    * PSG குழுமத்தின் லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் கார்த்திகேயன் மற்றும் முதன்மை செயல் அலுவலர் தேவ் ஆனந்த் ஆகியோர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

     * விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், கட்சியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கான பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

    • மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் கழுத்து அளவிற்கு நின்றதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.
    • கற்பகத்திற்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்ட நிலையில் 4 வருட காத்திருப்புக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.

    சென்னை மடிப்பாக்கத்தில் மிச்சாங் புயல் கரையை கடந்தபோது கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் ஆர்ப்பரித்துச் சென்றது.

    இதனால் மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் கழுத்து அளவிற்கு நின்றதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கித்தவித்த 9 மாத கர்ப்பிணியான கற்பகம் என்பவரை மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ரப்பர் படகில் அழைத்துச் சென்று காமாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அவருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

    கற்பகத்திற்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்ட நிலையில் 4 வருட காத்திருப்புக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.

    மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த கர்ப்பிணிக்கு உதவிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

    • பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது.
    • சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையால் தேங்கிய வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியாமலேயே உள்ளது.

    பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனால் மின்தடை ஏற்பட்டதுடன் மக்கள் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தண்ணீரை வெளியேற்ற தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என்றும் கேட்டனர்.

    இதையடுத்து மேயர் பிரியா அவர்களை சமாதானப்படுத்தினார். உங்கள் பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பால் தண்ணீர் கிடைப்பதற்கும் வழி ஏற்படுத்தி தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    இதையடுத்து முற்றுகை போராட்டத்தை வாபஸ் வாங்கிய பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×