search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்: ம.தி.மு.க. நிர்வாக குழுக்கூட்டத்தில் தீர்மானம்
    X

    தமிழ்நாட்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்: ம.தி.மு.க. நிர்வாக குழுக்கூட்டத்தில் தீர்மானம்

    • ஒன்றிய அரசின் சார்பில் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 450 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    • இதுவரை இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ள 133 படகுகளை மீட்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க.வின் நிர்வாகக் குழுக்கூட்டம், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில், இன்று தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, மணி, ஆடுதுறை முருகன், ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய 'மிச்சாங்' புயல் வீசியதால் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

    வெள்ளப் பாதிப்புகளை சரி செய்யவும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் இடைக்கால நிவாரணமாகரூ. 5,060 கோடியை உடனடியாக வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    ஒன்றிய அரசின் சார்பில் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 450 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    மேலும் நகர்ப்புற வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிதியாக 5000 கோடி ரூபாய் உடனே விடுவிக்குமாறு ம.தி.மு.க. நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

    தமிழ்நாட்டு மீனவர்களை எல்லைதாண்டி வந்து தாக்குவதும் கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன.

    இந்திய அரசு இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், இதுவரை இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ள 133 படகுகளை மீட்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது.

    தமிழ்நாடு அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதுடன், ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு மேற்கொள்ள முயற்சிப்பதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×