search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    27 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும்: கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடக்கம்
    X

    27 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும்: கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடக்கம்

    • உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
    • திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    அதிலும் குறிப்பாக அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசித்தவர்களும் ஏரி-கால்வாய் நீர்நிலைகள் அருகே வசித்தவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் 2 நாட்களில் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில் புயல்-வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்குவதாகவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம், உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.37 ஆயிரத்து 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு ரூ.50 ஆயிரம், சிறிது சேதம் அடைந்திருந்தால் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதால் எந்தெந்த ஏரியா கடுமையாக பாதிக்கப்பட்டது என்ற விவரம் தாலுகா அலுவலகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையையொட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளும் மழைநீரில் தத்தளித்ததால் அந்த பகுதிகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. அதில் தென் சென்னையில் 11 லட்சத்து 51 ஆயிரத்து 858 குடும்ப அட்டைதாரர்களும் வடசென்னையில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 463 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 22 லட்சத்து 18 ஆயிரத்து 121 குடும்ப அட்டைகள் உள்ளது.

    இதே போல் திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர். இவர்களில் சென்னையையொட்டி உள்ள புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவி தொகை கிடைக்கும் என தெரிகிறது.

    மொத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 95 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்கும். மற்ற 3 மாவட்டங்களுக்கு 60 சதவீதம் பேர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் மொத்தம் 27 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என தெரிகிறது.

    இது சம்பந்தமாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட உள்ளது. அதில் யார்-யாருக்கு பணம் கிடைக்கும் என்பது தெளிவுப்படுத்தப்படும். அரசாணையில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கை உயரவும் வாய்ப்பிருக்கிறது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் 16 தாலுகா அலுவலகம் உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ரூ.6 ஆயிரம் கிடைத்து விடும்.

    குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பெரும் தொழில் அதிபர்கள் தவிர்த்து மற்ற பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதே சமயம் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த சென்னைக்கு மிக அருகில் உள்ள பகுதிகள் அதில் வசிக்கக்கூடிய மக்கள் மட்டுமே புயல் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேல் மருவத்தூர், உத்தரமேரூர் போன்ற உள்புற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    எனவே அதுபோன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரண தொகை கிடைக்காது. எனவே யாரெல்லாம் உண்மையாக பாதிப்புகளை சந்தித்து வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்களோ அவர்களுக்கு மட்டுமே ரூ.6 ஆயிரம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

    எந்தெந்த பகுதிகள், தெருக்கள், பாதிக்கப்பட்டவை என வி.ஏ.ஓ., தாசில்தார்கள் பட்டியல் எடுத்து கலெக்டர்களிடம் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்க உள்ளனர். அதன் அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் பணம் வழங்கப்படும்.

    எந்த தேதியில் பணம் கொடுக்கப்படும் என்ற விவரம் விரைவில் அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×