search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ள நிவாரண தொகையை ரூ.12 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
    X

    வெள்ள நிவாரண தொகையை ரூ.12 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    • சேதமடைந்த சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும்.
    • ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 17 ஆயிரம் வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, கடந்த வாரம் மிக்ஜம் புயல் மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத்தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று இந்த தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளம் சாக்கடையுடன் கலந்து, பொதுமக்கள் அவர்களுடைய வீடுகளை விட்டும், குடியிருப்பு பகுதிகளை விட்டும் வெளியேற முடியாத நிலையில், கடந்த ஒருவார காலமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை.

    இன்னும் சகஜ நிலைக்கு திரும்ப ஒருவார காலம் ஆகும். ஏழை, எளிய, தினசரி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், நடுத்தர மக்கள் இரண்டு வார காலம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில், வேலை செய்ய முடியாமல் தங்களது 15 நாள் வருமானத்தை இழந்துள்ளதுடன், தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

    எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான ரூ. 6 ஆயிரம் என்பதை உயர்த்தி ரூ.12 ஆயிரமாக வழங்குவதுடன், எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த மழை வெள்ளத்தால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதை உடனடியாக அரசு, அந்தந்த வாகனங்களுக்குண்டான நிறுவனங்கள் மூலமாக, பகுதி வாரியாக சிறப்பு வாகன பழுது நீக்கும் முகாம்களை ஏற்பாடு செய்து அந்த வாகனங்களை அரசு செலவில் பழுது நீக்கி, பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிந்த பிறகு கழிவு நீர் உட்புகுந்ததால், வீடுகள் மற்றும் வீதிகள் சேறும் சகதியுமாக தேவையற்ற குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு அடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு போர்க்கால அடிப்படையில் சேறு, சகதி, குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், கிருமிநாசினிகளைத் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

    சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழை நீருடன் அப்பகுதியில் இயங்கிவரும் ஆலைகளின் ஆயில் கழிவுகளால் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தகுந்த தொழில் நுட்ப உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணியினையும் செய்துதர வலியுறுத்துகிறேன்.

    மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கும் சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும்.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் மழை நீர் உட்புகுந்து இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் முற்றிலுமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்து, உரிய இழப்பீடுகள் வழங்கி, மீண்டும் அத்தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு தக்க நட வடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

    சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வலியுறுத்துகிறேன்.

    மேலும், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும், நஞ்சை நிலங்களில் பயிர் செய்திருந்த நெற்பயிர்கள் தற்போது பெய்த கன மழையால் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 17 ஆயிரம் வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன்.

    பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, மேற்கண்ட நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×