search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரு வாரத்தில் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    ஒரு வாரத்தில் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • உதயநிதி ஸ்டாலின் 600 பேர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார்.
    • அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், கவுன்சிலர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 600 பேர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் இன்று வழங்கினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை எப்போது வழங்கப்படும்?

    பதில்:- இன்னும் ஒரு வாரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கத்தொடங்கி விடுவோம். முதலில் அதற்கான டோக்கனை கொடுக்க வேண்டும். சில இடங்களில் ரேஷன் கடைகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த பொருட்களும் சேதம் அடைந்தது. அதை சரி செய்த பிறகு ஒரு வாரத்தில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன் பிறகு வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.

    கேள்வி:- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்களே?

    பதில்:- எதிர்க்கட்சிகள் அப்படி சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். நாம் நமது வேலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    கேள்வி:- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திருப்புகழ் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளதே?

    பதில்:- அப்படி அமைத்ததால் தான் இவ்வளவு மழை பெய்தும் 3 நாளில் மழைநீர் வடிந்து மின்சாரம் வந்துள்ளது. இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.

    கேள்வி:- மழை சேதத்தை பார்வையிட வரும் மத்திய குழுவிடம் என்னென்ன விஷயங்களை வலியுறுத்த இருக்கிறீர்கள்?

    பதில்:- ஏற்கெனவே மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்து வெள்ள சேதத்தை பார்வையிட்டார். அவரிடம் எவ்வளவு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் விளக்கி கூறியுள்ளார். தற்போது முதல் கட்ட நிதி கொடுத்து இருக்கிறார்கள். விரைவில் அடுத்த கட்ட நிதியை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

    கேள்வி:- சென்னையில் வெள்ளம் பாதித்த ஒரு சில இடங்களில் கவுன்சிலர்கள் வந்து ஆய்வு செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

    பதில்:- அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், கவுன்சிலர்கள் ஆய்வு செய்துள்ளனர். மக்கள் மத்தியில் சின்ன அதிருப்தி இருக்கத்தான் செய்யும். இவ்வளவு மழை பெய்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கடந்த 50 வருடங்களில் பெய்யாத மழையாகும். ஓரளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை களத்தில் இருந்து செய்து இருக்கிறோம். முதலமைச்சர், மேயர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் எல்லோருமே களத்துக்கு வந்தனர். தன்னார்வலர்கள் கூட களத்துக்கு வந்துள்ளனர். யாரையுமே நான் குறை சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×