search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "closed"

    ஜம்மு காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதி ஜாகீர் மூசாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதையடுத்து, பதற்றம் நீடிப்பதால், நான்காவது நாளாக இன்று பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கடந்த 23ம் தேதி போலீசார் மற்றும் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜாகீர் மூசா உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பின் தலைவரான ஜாகீர் மூசா கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

    நான்காவது நாளாக இன்றும் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பி.எட். தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    புல்வாமாவில் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அனந்த்நாக் மாவட்டத்தில் அனந்த்நாக் மற்றும் பிஜ்பெகரா நகரில் டிகிரி கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 
    இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    கொழும்பு:

    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் பலியானார்கள். இன்னும் இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்களை பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர்களை கைது செய்யக்கோரி அந்த சமுதாய பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் போராட்டம் நீடிக்கிறது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அமைதி திரும்பும் வகையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். #PonnamaravathiViolence

    கொடைக்கானலில் தேர்தலையொட்டி நாளை சுற்றுலா இடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை கவரும் வண்ணமாக 12 மைல் சுற்றளவில் சுற்றுலா இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினரிடம் தனியாக அனுமதி பெற வேண்டும்.

    தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் நாளை பாராளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    நாளை (18-ந் தேதி) தேர்தலையொட்டி அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு சுற்றுலா வருமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கும் அதிபர் நிகோலஸ் மதுரோ வெனிசூலா எல்லை பகுதிகளை மூடிவிட்டார். உதவி பொருட்கள் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வெனிசூலா மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கராக்கஸ் :

    வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

    அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் அந்த நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். இதற்கிடையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசூலா மக்களுக்கு தேவையான உதவி பொருட்களை வழங்க முன்வந்துள்ளன.

    ஆனால் வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கும் அதிபர் நிகோலஸ் மதுரோ வெனிசூலா எல்லை பகுதிகளை மூடிவிட்டார். இதனால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உதவி பொருட்களை ஏற்றி வந்த லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    உதவி பொருட்கள் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வெனிசூலா மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கடந்த ஒரு வாரமாக அரசு பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மதுரை மாவட்டத்தில் 650 பள்ளிகள் செயல்படவில்லை. #JactoGeo #Strike
    மதுரை:

    கடந்த ஒரு வாரமாக அரசு பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு எச்சரித்தும் இன்றும் அவர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 2 ஆயிரத்து 279 உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் மட்டும் 11 ஆயிரத்து 756 ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் 855 அரசு ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது வேலைநிறுத்தம் காரணமாக இதில் 650 பள்ளிகள் செயல்படவில்லை. ஆசிரிய-ஆசிரியைகள் வராததால் மாணவ-மாணவிகளின் வருகையும் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது சத்துணவு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மேலும் மூடப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிகிறது.   #JactoGeo #Strike
    மானாமதுரை பகுதியில் 4 வழிச்சாலை பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து மானாமதுரையில் இயங்கி வந்த ரெயில்வேகேட் விரைவில் மூடப்பட உள்ளது.
    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கி தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதி அனைத்திலும் உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது மானாமதுரையை அடுத்த கமுதக்குடி மற்றும் திருப்புவனம் பாலங்கள் தவிர்த்து மற்ற பாலங்கள் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலங்கள் கட்டப்பட்ட இடங்களில் உள்ள ரெயில்வே கேட்கள் விரைவில் மூடப்பட உள்ளன. அதன்படி மானா மதுரையில் இருந்து மதுரை செல்லும் அகல ரெயில் பாதையின் குறுக்கே தற்போது ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. தற்போது மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவிலில் இருந்து மானா மதுரை புதிய பஸ் நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை புதிய பாலம் கட்டப்பட்டு அந்த பாலத்தில் இரு பாதை வழியாக போக்குவரத்து அனுமதிக்கபட்டு வருகிறது. இதையடுத்து இனி மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நேரடியாக மானாமதுரை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விடும். இடையில் உள்ள மானா மதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காது.

    மேலும் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் மதுரை செல்லவும் மதுரையில் இருந்து மானாமதுரை நகருக்குள் வரவும் புதிய பஸ் நிலையம் வந்து தான் செல்ல முடியும். மேலும் ஏற்கனவே செயல்பட்டு வந்த மானாமதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் பஸ் நிறுத்தம் இனி பயன்பாட்டில் இருக்காது. வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மானாமதுரை நகர் பகுதிக்குள் வர வேண்டுமானால் சிவகங்கை செல்லும் பஸ்களில் பயணம் செய்தால் தான் நகருக்குள் வரமுடியும்.

    மேலும் சிவகங்கை செல்லும் பஸ்கள் அனைத்தும் மானாமதுரை அண்ணாசிலை வழியாக சர்வீஸ் ரோட்டில் சென்று அதன் பின்னர் இடது புறத்தில் ஏறி பாலத்தை கடந்து தான் புதிய பஸ் நிலையம் செல்லும். மேலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை செல்லும் வாகனங்கள் அனைத்தும் தல்லாகுளம் முனியாண்டி கோவிலை சுற்றி வந்து வலது புறமாக திரும்பி சர்வீஸ் ரோடு, அண்ணாசிலை, தேவர் சிலை, காந்தி சிலை, சிப்காட் வழியாக சிவகங்கைக்கு செல்ல வேண்டும்.

    மேலும் சரக்கு வாகனங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கைக்கு செல்ல வேண்டுமானால் மானா மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பை-பாஸ் பாலம் வழியாகத்தான் செல்ல முடியும். இந்த புதிய வழி போக்குவரத்து நடைமுறை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த புதிய வழித்தட பயணத்திற்கான கருத்து கேட்பு நடத்துவதற்காக தற்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்த புதிய வழித்தடம் குறித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதும் மானாமதுரையில் உள்ள ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பை-பாஸ் அண்ணாசிலை பஸ் நிறுத்தமும் மூடப்பட உள்ளது. அத்துடன் சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட 7 ரெயில்வே சந்திப்புகளில் ஒன்றான மானாமதுரை சந்திப்பில் இருந்து மதுரை செல்லும் பாதையில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டும் மூடப்பட உள்ளது.
    ஐகோர்ட்டு உத்தரவுப்படி வல்லூர் அனல்மின் நிலையம் இன்று மூடப்பட்டது. இதனால் 1500 மெகாவாட் மின்உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. #VallurThermalPowerPlant
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வல்லூரில் அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் தமிழகத்துக்கும், 30 சதவீதம் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

    அனல்மின் சாம்பல் கழிவு எண்ணூர் சதுப்புநில பகுதிகளில் கொட்டப்பட்டு வந்தன. இதனால் சுற்றுச்சுழல் மாசு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாம்பல் கழிவு கொட்டப்படும் இடத்தை நடிகர் கமல்ஹாசன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்வையிட்டு சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் சதுப்பு நில பகுதியில் அனல்மின் நிலைய கழிவுகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை விசாரித்த நீதிபதி மத்திய அரசின் விதிமுறையை மீறி சதுப்பு நில பகுதியில் சாம்பலை கொட்ட அனல்மின்நிலையம் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே வல்லூர் அனல்மின்நிலையம் செயல்படுவதற்கான மத்திய அரசின் அனுமதியும் கடந்த ஆண்டு மார்ச் 18-ந் தேதியுடன் முடிவடைந்து இருந்தது. இதனை புதுப்பிக்க கோரும் மனுவும் நிலுவையில் உள்ளது.

    இதனால் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்படாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 3 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு அனல்மின் நிலையம் இன்று மூடப்பட்டது. இதனால் 1500 மெகாவாட் மின்உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அனல்மின் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சதுப்பு நில பகுதியில் சாம்பல் கழிவை கொட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம். விரைவில் அனல்மின் நிலையம் செயல்படும்’’ என்றார். #VallurThermalPowerPlant

    கஜா புயலால் பாதிப்பு அடைந்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    சென்னை:

    கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.



    இந்நிலையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுபான கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவிலில் வேறு மதத்தினர் நுழைந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். #PadmanabhaswamyTemple #Purification
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவில், புகழ்பெற்ற ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் ஆகும். அங்கு இந்து அல்லாத வேற்று மதத்தினர் வழிபட அனுமதி கிடையாது.

    இந்நிலையில், கடந்த 9-ந் தேதி, ஒரு பக்தர்கள் குழு பத்மநாப சாமி கோவிலுக்கு வந்தது. குழுவில் இடம்பெற்றிருந்த சில பெண்கள், தலையை முக்காடு போட்டு மறைத்து இருந்தனர். பிறகு அவர்கள் உடை மாற்றும் அறையில், பாரம்பரிய இந்து உடைகளை அணிந்து கொண்டு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக, அவர்கள் தலையில் முக்காடுடன் இருந்தபோது, அவர்களை சில பக்தர்கள் படம் பிடித்தனர். அந்த படங்களை தந்திரிகளிடம் காண்பித்து, “அவர்கள் இந்துக்கள்தானா?” என்று சந்தேகம் எழுப்பினர்.

    இதையடுத்து, அப்பெண்கள் வேற்று மதத்தினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். அதன்படி, பரிகார பூஜை நடத்தி முடிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். #PadmanabhaswamyTemple #Purification
    தீபாவளியையொட்டி 9 நாட்களுக்கு மட்டுமே திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை நேற்று மூடப்பட்டது.
    ஹாசன் டவுனில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில். இக்கோவிலில் ஹாசனாம்பா அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளியையொட்டி 9 நாட்களுக்கு மட்டுமே நடை திறக்கப்படும்.

    பின்னர் நடை மூடப்படும்போது அம்மனுக்கு போடப்பட்டிருக்கும் மாலைகள், கோவிலில் வைக்கப்பட்ட மலர்கள், படையல்கள் ஆகியவை கெட்டுப்போகாமல் அடுத்த ஆண்டு கோவில் திறக்கப்படும் வரை அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கோவிலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகளும் அணையாமல் அடுத்த ஆண்டு வரை எரிந்து கொண்டே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

    இப்படி பல்வேறு சிறப்பு மிக்க ஹாசனாம்பா கோவில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்ட நாள் முதல் தினமும் காலை 5 மணியளவிலும், மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் ஹாசனாம்பா அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. மற்ற நேரங்களில் அம்மனை பக்தர்கள் தரிசித்து வந்தார்கள்.

    இப்படி ஹாசனாம்பா அம்மனை கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 25 லட்சம் பக்தர்கள் தரிசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இலவச தரிசன வரிசையில் மட்டும் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு கட்டணம் செலுத்தியும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தார்கள்.

    இவ்வாறாக சிறப்பு கட்டணம், அர்ச்சனை கட்டணம், பிரசாதம் விற்றது உள்ளிட்டவை மூலம் ரூ.21.45 லட்சம் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்தான் ஹாசனாம்பா கோவில் திறக்கப்பட்டு 8-வது நாள் ஆகும். அதனால் நேற்று முன்தினத்துடன் அம்மனை, பக்தர்கள் தரிசனம் செய்தது முடிவுக்கு வந்தது. பின்னர் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

    பின்னர் நேற்று காலை 5 மணியளவில் மீண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சரியாக 2 மணிக்கு அம்மனுக்கு மாலைகள் அணிவித்து, படையலிட்டு, விசேஷ பூஜைகள் செய்து, விளக்கேற்றி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் கோவில் நடை மூடப்பட்டது.

    பின்னர் கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பிரசித்திபெற்ற ஹாசனாம்பா கோவில் கடந்த 1-ந் தேதி அன்று திறக்கப்பட்டது. 8-வது நாளான நேற்று முன்தினம் வரை கோடிக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தார்கள். தினமும் காலை 5 மணியளவிலும், பின்னர் மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் அம்மனுக்கு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டி இருந்ததாலும் அந்த நேரங்களில் மட்டும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    நேற்று முன்தினம் மாலையோடு அம்மனை, பக்தர்கள் தரிசித்தது முடிவுக்கு வந்தது. கோவில் திறக்கப்பட்டு 9-வது நாளான(கடைசி நாள்) நேற்று பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் சரியாக 2 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும் பணி சித்தேஸ்வரா கோவில் வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. உண்டியல் காணிக்கை மூலம் கோவிலுக்கு கிடைத்த வருமானம் குறித்து தகவல்கள் வெளியிடப்படும்’’ என்று கூறினார்.

    பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சென்னை விமான நிலைய ஓடுபாதை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 6 மணி நேரம் மூடி வைக்க முடிவு செய்யப்பட்டது. #ChennaiAirport #Runway
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் பிரதான ஓடுபாதை 3,658 மீட்டர் நீளமும், 2-வது துணை ஓடுபாதை 2,890 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த ஓடுபாதையில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு தினமும் 426 விமானங்கள் வந்து செல்லும்.

    முதல் பிரதான ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 6 மணி நேரம் பிரதான ஓடுபாதையை மூடி வைக்க முடிவு செய்யப்பட்டது.

    பராமரிப்புக்காக 6 மணி நேரம் ஓடுபாதை மூடினாலும் எந்தவித பாதிப்பின்றி விமான போக்குவரத்து சேவை 2-வது ஓடுபாதையில் செயல்படும். பெரிய ரக விமானங்கள் பயன்பாட்டுக்கு மட்டும் முதல் பிரதான ஓடுபாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விமான சேவைக்கு அனுமதிக்கப்படும்.

    இந்த ஓடுபாதை பராமரிப்பு பணிகள் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்
    ×