என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "padmanabhaswamy temple"

    • பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.

    கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

    இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து பத்ம நாபசுவாமி கோவிலின் மேலாளர் ஸ்ரீகுமார் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி கோவிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், கடந்த 2021-ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கி நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றிருக்கிறது.

    இதனால் பத்மநாபசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடத்தப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், சன்னதியின் முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல் கோபுரத்தில் இருக்கும் கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.

    பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள பத்மநாபசுவாமி பக்தர்களுக்கு கும்பாபிஷேக சடங்குகளை காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவிலின் மரபுகளை பின்பற்றி புனித நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருஷ்ணருக்கு புடவை அணிவிக்கப்பட்டு மயக்கும் மோகினியாக அலங்கரிக்கப்படுவார்.
    • சந்தனம் அரைப்பதற்கான இயந்திரம் பழுது பார்க்க கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலில் ஏகாதசி தினத்தன்று கிருஷ்ணருக்கு மோகினி அலங்காரம் செய்யப்படும். அந்த அலங்காரத்தில் கிருஷ்ணருக்கு புடவை அணிவிக்கப்பட்டு மயக்கும் மோகினியாக அலங்கரிக்கப்படுவார். இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு இந்த நிகழ்வு நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சந்தன பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது.

    சந்தனம் அரைப்பதற்கான இயந்திரம் பழுது பார்க்க கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் ஏகாதசிக்கு தேவையான சந்தனம் முன்னதாகவே அரைத்து வைக்கப்பட்டது. ஆனால் அது போதுமானதாக இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிகழ்வு திடீரென நிறுத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் ஸ்ரீபத்ம நாபசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். சம்பவத் தன்றும் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசன நேரம் முடிந்ததும் கோவில் பணியாளர்கள் நடை சாத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவிலின் கருவறையில் இருந்த நைவேத்ய உருளி (வெண்கல பாத்திரம்) மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உருளியை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. கோவிலை சுற்றி வந்த போது அவர்கள் அதனை எடுத்து உடைக்குள் மறைத்து கொண்டு சென்ற தும் உறுதியானது.இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியபோது, அந்தக் கும்பல், திருவனந்த புரத்தில் இருந்து உடுப்பி சென்றதும், அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானா சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரி யானா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 3 பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டாக்டர் ஜெகனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைதானவர்கள் கூறுகையில், கோவிலில் இருந்து கப்பலை (வெண்கல பாத்திரம்) திருடியது பண ஆதாயத்திற்காக அல்ல. பூஜை அறையில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பியதால் தான் எடுத்து வந்ததாக கூறினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருவனந்தபுரம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பத்மநாபசுவாமி கோவிலில் குறிப்பிடத்தக்க பொக்கிஷங்கள் உள்ளதால், 2011-ம் ஆண்டு முதல் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் உள்ளது. இந்த நிலையில் கோவிலில் திருட்டு நடைபெற்றுள்ளது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

    • 1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது.
    • ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் அருகே அமைந்து உள்ளது. இந்த கோவில் புனித நிகழ்வுக்காக ஆண்டுக்கு 2 முறை இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படுகிறது.

    அதாவது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும் 'ஐப்பசி ஆறாட்டு' மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி விழாவுக்காக விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    அந்தவகையில் பத்மநாப சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி 'ஐப்பசி ஆறாட்டு' விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து சாமி சிலைகளை சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அங்கு ஆறாட்டு நிகழ்ச்சி (புனித குளியல்) நடத்தப்படுகிறது.

    இந்த சாமி ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையை கடந்து கடற்கரைக்கு செல்லும். எனவே அதற்காக விமான நிலையத்தில் விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம் ஆகும்.

    அதன்படி இந்த ஆண்டும் வருகிற 9-ந்தேதி 5 மணி நேரம் விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக விமான நிலையம் அறிவித்து உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விமான இயக்க நிறுத்தம் அமலில் இருக்கும் என கூறியுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பத்மநாப சுவாமி கோவில் ஊர்வலம் கடந்து செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓடுபாதை ஆண்டுதோறும் 2 முறை மூடப்படுகிறது. சிலைகள் புனித நீராடுவதற்காக சங்குமுகம் கடற்கரையை அடைய தற்போதைய ஓடுபாதையில் ஊர்வலம் செல்லும் நடைமுறை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

    1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது. இதற்காக ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.

    இது இந்த பிராந்தியத்தின் கலாசாரம் மற்றும் மரபுகள் அப்படியே தொடர்வதை உறுதி செய்கிறது.

    இவ்வாறு விமான நிலையத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    முன்னதாக இந்த விமான நிலையம் கட்டப்பட்டபோது, இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 363 நாட்கள் மக்களுக்காகவும், 2 நாட்கள் பத்மநாப சுவாமிக்காகவும் திறந்திருக்கும் என அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் கூறியிருந்தார்.

    அதன்படி இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மன்னர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறைகள் தற்போது அதானி குழுமம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஏற்றபிறகும் கூட தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கோவிலில் ரூ.92.22 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். #PMModi #PadmanabhaswamyTemple
    திருவனந்தபுரம்:

    கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. விஷ்ணு பகவானின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கேரளா வந்தார். அவர் கொல்லத்தில் 13 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு உள்ள புறவழிச்சாலையை திறந்து வைத்தார்.



    அதைத்தொடர்ந்து அவர் பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு மத்திய அரசின் சுவதேஷ் தரிசன் திட்டத்தின் கீழ் ரூ.92.22 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்தார். சுமார் 20 நிமிடம் அங்கே அவர் செலவிட்டார்.

    பிரதமர் மோடியுடன் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் உள்பட பலர் சென்றனர். அத்துடன் கேரள பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் டெல்லி திரும்பினார்.

    முன்னதாக கொல்லத்தில் புறவழிச்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் மாநில அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த நாடும் சபரிமலை பற்றித்தான் பேசி வருகிறது. சபரிமலை விவகாரத்தை ஆளும் இடதுசாரி முன்னணி அரசு கையாளும் முறையானது, வரலாற்றிலேயே எந்த ஒரு அரசோ, கட்சியோ செய்திராத மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும்’ என குற்றம் சாட்டினார்.

    அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை கம்யூனிஸ்டுகள் மதிக்கமாட்டார் கள் என்பது நமக்கு தெரியும். ஆனாலும் இத்தகைய வெறுப்பு செயலானது யாரும் கற்பனை செய்திட முடியாதது. இதைப்போல காங்கிரஸ் கட்சியும் சபரிமலை விவகாரத்தில் இரட்டை நிலையை கொண்டிருக்கிறது. அந்தவகையில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்’ எனவும் குறிப்பிட்டார்.

    பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மோடி கண்டனம் தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது என கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

    இதைப்போல சபரிமலை விவகாரத்தை அரசியல் வாய்ப்பாக பா.ஜனதா பயன்படுத்துவதையே பிரதமரின் பேச்சு எடுத்துரைப்பதாக காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது.
    கேரள மாநிலம் கொல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை திறப்புவிழாவில் கலந்து கொள்ள வருகிற 15-ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி பத்மநாபசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திறப்புவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

    விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொல்லம் புற வழிச்சாலையை திறந்து வைக்கிறார். இதையொட்டி டெல்லியில் இருந்து விமானம் மூலம் 15-ந்தேதி புறப்படும் நரேந்திர மோடி மாலை 5 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைகிறார்.

    விமான நிலையத்தில் வைத்து பிரதமருக்கு கேரள கவர்னர் சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் செல்லும் பிரதமர், கொல்லம் புறவழிச்சாலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் விமானநிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடி கார் மூலம் பிரசித்திபெற்ற பத்மநாபசாமி கோவிலுக்கு செல்கிறார்.

    இரவு 7.20 மணிக்கு பத்மநாபசாமி கோவிலின் வடக்கு பகுதியில் நடைபெறும் எளிமையான நிகழ்ச்சியில் ‘சுதேசிதர்சன்’ என்ற திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கவர்னர், முதல்வர், கேரள மந்திரிகள் பங்கேற்கிறார்கள். அதன் பிறகு பத்மநாபசாமி கோவில் சென்று அவர் சாமி தரிசனம் செய்கிறார். 7.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் விமானம் நிலையம் செல்லும் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி கேரளா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #PMModi #ModiKeralaVisit
    திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவிலில் வேறு மதத்தினர் நுழைந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். #PadmanabhaswamyTemple #Purification
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவில், புகழ்பெற்ற ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் ஆகும். அங்கு இந்து அல்லாத வேற்று மதத்தினர் வழிபட அனுமதி கிடையாது.

    இந்நிலையில், கடந்த 9-ந் தேதி, ஒரு பக்தர்கள் குழு பத்மநாப சாமி கோவிலுக்கு வந்தது. குழுவில் இடம்பெற்றிருந்த சில பெண்கள், தலையை முக்காடு போட்டு மறைத்து இருந்தனர். பிறகு அவர்கள் உடை மாற்றும் அறையில், பாரம்பரிய இந்து உடைகளை அணிந்து கொண்டு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக, அவர்கள் தலையில் முக்காடுடன் இருந்தபோது, அவர்களை சில பக்தர்கள் படம் பிடித்தனர். அந்த படங்களை தந்திரிகளிடம் காண்பித்து, “அவர்கள் இந்துக்கள்தானா?” என்று சந்தேகம் எழுப்பினர்.

    இதையடுத்து, அப்பெண்கள் வேற்று மதத்தினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். அதன்படி, பரிகார பூஜை நடத்தி முடிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். #PadmanabhaswamyTemple #Purification
    பிரசித்திப்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ள பொக்கி‌ஷங்களை கேரள வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்துவது குறித்து திருவிதாங்கூர் மன்னர் கருத்து தெரிவித்துள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் ஏராளமான ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த அறைகளை திறந்து பார்த்தபோது தங்கம், வைரம் என்று விலை மதிக்க முடியாத பொக்கி‌ஷம் அந்த அறைகளில் நிறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொக்கி‌ஷங்களை கணக்கெடுத்து பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, அந்த பொக்கி‌ஷங்கள் இருந்த 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவை கணக்கெடுக்கப்பட்டது. மேலும் சில அறைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு இன்னும் அனுமதி வழங்காததால் அவை திறக்கப்படவில்லை.

    அந்த அறைகளிலும் ஏராளமான பொக்கி‌ஷம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பத்மநாபசுவாமி கோவிலுக்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த பொக்கி‌ஷம் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.


    கேரளாவில் தற்போது வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து கேரளம் மீண்டு வர அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் தேவைப்படும் என்று மாநில அரசு கூறி உள்ளது. பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கி‌ஷங்களை கேரள வெள்ளப்பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்ற கருத்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுபற்றி பத்மநாபசுவாமி கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் மன்னர் ஆதித்தயவர்மா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பொக்கி‌ஷங்களின் மொத்த மதிப்பு பற்றி எனக்கு தெரியாது. அவசர கால தேவைக்காக எனது முன்னோர் இவற்றை சேகரித்து வைத்துள்ளனர்.

    கேரள இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த பொக்கி‌ஷங்களை நிவாரண பணிக்களுக்கு பயன்படுத்துவது பற்றி நான், எதுவும் கூற முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தான் எதையும் செய்ய முடியும்.

    கேரள மாநில அரசும் இதில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். பத்மநாபசுவாமி கோவில் மட்டுமல்ல அனைத்து மத வழிபாட்டு தலங்களில் இருந்தும் உதவிகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods #PadmanabhaswamyTemple
    ×