என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாடு"

    • காளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 13 நாட்கள் நடைபெற உள்ளது.
    • நான்கு மாட வீதிகளில் இரண்டு தேர்களில் காளஹஸ்தீஷ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான 10-ந் தேதி பகல் 3 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து கோவில் அருகில் உள்ள கண்ணப்பர் மலை மீது உள்ள கண்ணப்பர் கோவில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் மகாசிவராத்திரி விழா தொடங்குகிறது.

    11-ந் தேதி சிறப்பு வழிபாடு, அம்பாரிகளில் காலை, மாலையில் சாமி, அம்மையார்கள் ஊர்வலம் மற்றும் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடைபெறும். 12-ந் தேதி காலை 10 மணி முதல் சூர்ய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். இரவு 9 மணி முதல் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறும்.

    13-ந் தேதி காலை 10 மணி முதல் அன்ன வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு 9 மணிக்கு ராவண வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதி உலா நடக்கிறது.

    14-ந் தேதி காலையில் ஹம்சம், மயில் வாகனத்திலும், இரவு 9 மணி முதல் சேஷ, யாளி வாகனத்திலும், 15-ந் தேதி காலை 11 மணிக்கு இந்திர விமானம், சப்பரத்திலும், இரவு 11 மணி முதல் சிவபெருமானுக்கு உகந்த வாகனமான நந்தி வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் நள்ளிரவு வரை வீதி உலா வருகின்றனர்.

    16-ந் தேதி காலை 11 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. நான்கு மாட வீதிகளில் இரண்டு தேர்களில் காளஹஸ்தீஷ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இரவு 9 மணி முதல் கோவில் அருகில் உள்ள நாரதர் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

    8-ம் நாளான 17-ந் தேதி காலை 10 மணிக்கு அதிகார நந்தி, காமதேனு வாகனத்திலும், இரவு 10 மணி முதல் யானை, சிம்ம வாகனத்திலும் சாமி மற்றும் அம்மையார் திருக்கல்யாண அலங்காரத்தில் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து தேவஸ்தான திருமண மண்டபம் வரை சென்று அங்கு அதிகாலை 3 மணி முதல் சாமி, அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    18-ந் தேதி காலை 11 மணிக்கு புதுமண தம்பதிகளாக காளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோர் வெவ்வேறு ருத்ராட்ச அம்பாரிகளில் தேவஸ்தான திருமண மண்டபத்தில் இருந்து கோவில் வரை புதுமண தம்பதிகளாக ஊர்வலமாக கோவிலை சென்றடைவார்கள். 19-ந் தேதி காலை 8 மணி முதல் ஜனதா அம்பாரிகளில் கைலாச கிரிவலம் நடைபெறும். இரவு குதிரை வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    20-ந் தேதி கொடி இறக்குதல், காலை 9 மணி முதல் கேடிக வாகனங்களிலும், இரவு 9 மணி முதல் சிம்மாசன, காமதேனு வாகனங்களிலும், 21-ந் தேதி இரவு 9 மணி முதல் நான்கு மாட வீதிகளில் பல்லக்கு சேவை உற்சவம் நடைபெறும். மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 22-ந் தேதி இரவு 9 மணிக்கு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை சன்னதி எதிரில் உள்ள பள்ளியறையில் ஏகாந்த சேவை நடைபெறும்.

    மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்த நிலையில் மறுநாள் 23-ந் தேதி கோவிலில் சாந்தி அபிஷேகங்கள் நடைபெறும். மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவிலும், சாமி, அம்மையார் ஊர்வலத்திலும் தெரிந்தோ தெரியாமலோ கோவில் அர்ச்சகர்கள், வேதப்பண்டிதர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யாராயினும் செய்த பிழைகளை போக்கும் வகையில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்த பின்னர் இந்த சாந்தி அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    • கருப்புக் கல்லால் ஆன ஸ்ரீதேவி - பூதேவியுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் சிலை உள்ளது.
    • கருவறையை பார்த்தபடி, தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

    கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, மகாலட்சுமி கோவில். இந்த கோவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இக்கோவில் 'இரண்டாவது கோலாப்பூர்' என்றும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவராக மகாலட்சுமி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மகாலட்சுமி தேவியின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். ஒரு சமயம் அந்த பக்தர் ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து மகிழ்ந்த மகாலட்சுமி, சுயம்புவாக தோன்றி பக்தருக்கு காட்சி அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கிய சிறிய வரவேற்பு வளைவு உள்ளது. அதில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த நிலையில் மகாலட்சுமி தாயார் காட்சி தருகிறார். கருவறையின் வாசலில் துவாரபாலகிகள் மற்றும் அஷ்டலட்சுமிகளின் உருவங்கள் தங்க முலாம் பூசப்பட்டிருக்கின்றன.

    கிழக்கு நோக்கிய கருவறையில் மகாலட்சுமி தாயார் அருள் வழங்குகிறார். அவர் அருகில் கருப்புக் கல்லால் ஆன ஸ்ரீதேவி - பூதேவியுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் சிலை உள்ளது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை நிலத்தில் சிக்கிக் கொண்டது. அந்த இடத்தை தோண்டும்போது, அதில் வெங்கடேசப் பெருமாள் சிலை கிடைத்தது. அந்த சிலையே கருவறையில் மகாலட்சுமியின் அருகில் காணப்படுகிறது. கருவறையை பார்த்தபடி, தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

    கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. இருப்பினும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். நவராத்திரி விழா இக்கோவிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மகாலட்சுமி தேவியை வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும், வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இக்கோவில், ராய்ச்சூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    3-ந் தேதி (செவ்வாய்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    4-ந் தேதி (புதன்)

    * திருமயம் ஆண்டாள் புறப்பாடு.

    * வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்து குமாரசுவாமி திருவீதி உலா.

    * திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    5-ந் தேதி (வியாழன்)

    * சங்கடகர சதுர்த்தி.

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    6-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    7-ந் தேதி (சனி)

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லட்சதீபம் உற்சவம் ஆரம்பம்.

    * திருமயம் ஆண்டாள் திருவீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    8-ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.

    * ராமநாதபுரம் செட்டித் தெரு அன்னை முத்தாலம்மன் விழா தொடக்கம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    9-ந் தேதி (திங்கள்)

    * ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • பராசக்தி பீடங்களுள் ஒன்றான கமலாம்பிகை கோவிலின் மேற்கு மூலையில் 'அக்சர' பீடம் உள்ளது.
    • துறவற வாழ்க்கையை விரும்பும் பக்தர்களுக்கு யோகாசனத்தில் வீற்றிருக்கும் கமலாம்பிகை அருள்பாலிக்கிறார்.

    பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. 'திருவாரூர் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரத்தில் புகழ்ந்து பாடியுள்ளார். திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் உலக அளவில் பிரபலமான, பிரமாண்டமான தேராகும். 'ஆழி' என்பதற்கு பரந்து விரிந்த அளவிட முடியாத என்பது பொருள். இதனால் கடலுக்கு 'ஆழி' என பெயர் வந்தது. இதில் அளவில் பெரியதும், புராணம், வரலாற்று சிறப்புடையதுமான தேர் என்பதால் திருவாரூர் தேருக்கு 'ஆழித்தேர்' என பெயர் வந்தது.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு என்று பல சிறப்பம்சங்கள் உள்ளன. அன்னை பராசக்தி இத்தலத்தில் வீற்றிருக்கும் திருக்கோலங்களுக்கு என்று தனி மகத்துவம் உண்டு. இங்கு அன்னை பராசக்தி கமலாம்பிகையாகவும், நீலோத்பலாம்பாளாகவும் இருவேறு திருக்கோலங்களில் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கிறார். திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது கமலாம்பிகையின் தனிக்கோவில். இங்கு அம்பிகை தனது தலையில் ஈசனைப் போன்று கங்கையையும், பிறையையும் தரித்து யோகாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

    பராசக்தி பீடங்களுள் ஒன்றான கமலாம்பிகை கோவிலின் மேற்கு மூலையில் 'அக்சர' பீடம் உள்ளது. இதில் பீடமும், 51 எழுத்துகள் எழுதப்பட்ட திருவாசியும் உள்ளன. இங்கு வந்தால் சில நிமிடங்கள் நின்று தியானித்து செல்ல வேண்டும். கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பாளுக்கு தனிக்கோவில் உள்ளது. அங்கு நின்ற கோலத்தில் அருள்புரியும் நீலோத்பலாம்பாள் திருக்கரத்தில் கருங்குவளை மலர் ஏந்தி உள்ளார்.

    இந்த அம்பிகையின் அருகே தோழி ஒருத்தி தமது தோள் மீது பாலமுருகனை சுமந்திருக்க முருகனின் சுட்டு விரலை தனது இடது கரத்தால் பற்றி நிற்கிறார் அம்பிகை. வேறு எந்த தலத்திலும் அம்பிகையின் இந்த அற்புத கோலத்தை தரிசிக்க முடியாது. நீலோத்பலாம்பிகை தன் இளைய பிள்ளையோடு எழுந்தருளி உள்ள காட்சியானது இல்லற வாழ்வின் மாண்பை உணர்த்துகிறது. இந்த அன்னை, இல்லற வாழ்வு அமைதியாக, ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அருள்புரிகிறார்.

    அதேபோல துறவற வாழ்க்கையை விரும்பும் பக்தர்களுக்கு யோகாசனத்தில் வீற்றிருக்கும் கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். தனிக்கோவிலில் தவக்கோலத்தில் காட்சி தரும் கமலாம்பிகை பாசம், தாமரை, அபயம் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். திருவாரூரில் அன்னை பராசக்தி இருவேறு திருக்கோலங்களில் காட்சி தருவதற்கு காரணம் உண்டு.

    குழந்தை பாலமுருகனுடன் காட்சி தரும் நீலோத்பலாம்பாள் இம்மை வாழ்க்கையின் தத்துவ விளக்கமாகும். கமலாம்பிகை தவத்திருக்கோலத்தில் காணப்படுவது மறுமைக்கு வழிகாட்டும் தத்துவமாகும். இம்மைக்கும், மறுமைக்கும் அருளதிகாரியாக அன்னை பராசக்தி திகழ்கிறாள் என்ற தத்துவ விளக்கமாகவே அன்னை பராசக்தி திருவாரூரில் இருவித கோலங்களுடன் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம்.

    • நாளை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு பூஜை நடக்கிறது.
    • மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது.

    தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நாளை நடக்க இருக்கிறது. நாளை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். 9 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

    முதலில் அபிஷேகமும் அதன்பின் அலங்காரம் நடைபெறும். இதனை அடுத்து மண மகன், மணமகள் ஊர்வலம், எதிர்சேவை, சீர்வரிசை தட்டு கொண்டு வருதல் நடைபெறும். அதன்பின் மேடையில் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது.

    மதியம் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், இரவில் வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. காலை முதல் மாலை வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்து வருகிறார்.

    • மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
    • பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதி உள்ளது.

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மேற்கே வெள்ளைப் பட்டை தீட்டியது போல் ஒரு அழகிய மலைக்குன்று நம் கண்களுக்கு தென்படும். யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் அந்த மலைதான், தோரணமலை. யானைக்கு 'வாரணம்' என்ற பெயர் உண்டு. அந்த வகையில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்ட இந்த மலை, காலப்போக்கில் மருவி, 'தோரணமலை' என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

    2 நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது. தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.

     

    இந்த 2 நதிகளுக்கு இடையேதான் தோரண மலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும் தோரணமலைக்கு மாலையிட்டது போல் காணப்படுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நம்மை அறியாமல் உடல் நம் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.

    வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம். இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.

     

    சுனை

    மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான். அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.

    அடிவாரத்தில் வல்லப விநாயகர், கன்னிமார் அம்மன், வியாழ பகவான் மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதி, சிவபெருமான், சரஸ்வதி, மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன. அரச மரத்தடியில் வீற்றிருக்கும் சப்த கன்னியரை வணங்கி வளையல்களும் தொட்டில்களும் பிராத்தனையாக கட்டினால் வேண்டுதல் நிறைவேறுகிறது. மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும்.

     

    துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பாவம் போக்கும் புண்ணியமலை, யானை முகம் கொண்ட மலையின் மேல் வீற்றிருக்கும் இம்முருகனின் திருவீடு ஏழாம் படை வீடு என்று சொன்னால் மிகை அல்ல. பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.

    பல சித்தர்கள் அரூபமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் சித்தர்கள் அரூபமாக உலாவும் இந்த மலையில் பல அபூர்வ மூலிகைகளும், நோய் தீர்க்கும் சுனைகளும், அரியவகை உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்கு வந்து சென்றாலே எல்லா வகை உடல்-மன வியாதிகளும் நீங்குவதாக பல அன்பர்கள் கூறுகிறார்கள்.

    இங்கு வந்து குகை முருகப்பெருமானை தரிசித்தால் திருமண வரம், குழந்தை பாக்கியம் உடனே கிடைப்பதாகவும் பலரும் கூறுகிறார்கள். கடுமையான மூட்டு வலி கொண்டவர்கள் கூட இங்கு வந்தால், நெட்டுக்குத்தாக அமைந்துள்ள இந்த மலை மீது ஏறத்துவங்கி விடுகிறார்கள் என்று ஆச்சர்யமாக சொல்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இங்கு வந்து எந்த வேண்டுதலை வேண்டிக் கொண் டாலும் அவை உடனே நிறைவேறி விடுவதாகவும், அந்த அன்பர்களே இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ள தாகவும் கூறுகிறார்கள். நலம் தரும் தோரணமலை தைப்பூச நாயகனை வணங்கி அருள் பெறலாம்.

    • முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.

    தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் மிக முக்கியமான தினங்களில் தைப்பூசத் திருநாள் ஒன்று. தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளை தைப்பூசத் திருநாளாக கொண்டாடுகிறோம்.

    தைப்பூச நாளில் முருகப் பெருமானை போற்றி வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் பெறலாம். இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

     

    முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும். இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலமாக பழனி உள்ளது. பழனியில் தைப்பூச விழா 10 நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றையை தினம் லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.

    தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து நீராடிவிட்டு, திருநீறு அணிந்து விரதத்தை தொடங்கலாம். பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபடலாம். கந்தசஷ்டி கவசம், திருமுருகாற்றுப் படை, திருப்புகழ் போன்ற முருகப் பெருமானுக்கு உகந்த பாடல்களை பாட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் 'ஓம் சரவணபவ' எனும் ஆறெழுத்து திருமந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பது நல்லது.

    காலை மற்றும் மதியம் இரு வேளைகளிலும் உணவு உண்ணாமல், பால், பழம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்வது சிறப்பு. முருகப்பெருமானை மனதார நினைத்து, அவன் அருள் வேண்டி விரதம் இருக்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    தைப்பூச விரதத்தை 48 நாட்கள், 21 நாட்கள் அல்லது அன்று ஒரு நாள் மட்டும் என அவரவர் விருப்பத்திற்கேற்பவும், உடல்நிலைக்கு ஏற்பவும் மேற்கொள்ளலாம். சிலர், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக சென்றும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். தீராத நோயால் அவதிபடுபவர்கள், முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி நோய் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெற்றதும் தைப்பூசத்தன்று காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கிறார்கள்.

     

    27 நட்சத்திரங்களில், பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பவர், குரு பகவான். எனவே, தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிட்டும்.

    தைப்பூச நாளில் தொட்டது துலங்கும் என்பார்கள். எனவே அன்றைய தினம், குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல், திருமணப் பேச்சுக்கள், புதிய தொழில் ஒப்பந்தம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். தைப்பூசத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கும், தீராத பகை மாறும், ஒற்றுமை அதிகரிக்கும், தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் 'தைப்பூசம்' என்கிறார்கள்.
    • சிவாலயங்களில் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் மிக முக்கியமான தினங்களில் ஒன்று தைப்பூசத் திருநாள். தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளை தைப்பூசத் திருநாளாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் முருகப் பெருமானை போற்றி வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் பெறலாம். தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை, தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா என உலகம் முழுவதும் பல நாடுகளில் சிறப்பிக்கப்படுகிறது.

    தைப்பூசத் திருநாளுக்கு பல்வேறு புராணக் காரணங்கள் சொல்லப்படுகிறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி போர் ஏற்பட்டது. இதில் தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள், தேவர்களை சிறைப்படுத்தினர். இதனால் வருந்திய தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். இதையடுத்து, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகப்பெருமான். இவர் தேவர்களின் சேனாதிபதியாக இருந்து, அசுரர்களை அழித்து, தேவர்களை காத்தார். இதனைப் போற்றும் விதமாக தைப்பூசம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

    ஞானப் பழம் வேண்டி, முருகனுக்கும் விநாயகருக்கும் போட்டி ஏற்பட்டது. அதில் சிவன் - பார்வதியை சுற்றி வந்து விநாயகர் ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். இதனால் கோபம் கொண்ட முருகப் பெருமான், பழனி மலையில் ஆண்டி கோலத்தில் வந்து நின்றார். அந்த தினமே 'தைப்பூசம்' என்றும் கூறப்படுகிறது. மேலும், அன்னை பராசக்தி, பழனி மலையில் ஆண்டி கோலத்தில் நின்ற முருகனுக்கு ஞானவேல் கொடுத்த தினமே 'தைப் பூசம்' என்ற கருத்தும் உள்ளது.

     

    சிவபெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய திருநாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, மகாவிஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிவபெருமான், சிதம்பரத்தில் அரங்கேற்றினார். இந்த நடனத்தை ரசித்து பார்த்த பார்வதி தேவிக்கும், அதே போன்று நடனம் ஆட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    அதன்படி, பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் 'தைப்பூசம்' என்கிறார்கள். சிதம்பரத்தில் சிவன் - பார்வதியாக இணைந்து நடனம் ஆடியதும் இந்த தைப்பூசம் திருநாளில் தான் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த நாள், சிவன் மற்றும் அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாளாக உள்ளது. அன்றைய தினம் சிவாலயங்களில் சிவபெருமானுக்கும், நடராஜருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    இந்த உலகத்தில் முதன்முதலில் நீர்தான் உருவானதாக கருதப்படுகிறது. அதன்பின்பு, அதில் இருந்து நிலம், உலக உயிர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. அவ்வாறு, உலகம் உருவாகத் (நீர் உருவாக) தொடங்கிய தினமே 'தைப்பூசம்' என்பது நமது முன்னோர்களின் கருத்து. இதன் நினைவாக தான், பல சிவாலயங்களில் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    முருகப்பெருமான், அகத்திய முனிவருக்கு தமிழ் கற்றுக்கொடுத்ததும், வள்ளி தேவியை மண முடித்ததும் இந்த தைப்பூச நாளில் தான் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு தைப்பூசத் திருநாள், தை மாதம் 18-ந்தேதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

     

    தைப்பூசத் நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதிலும் குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அறுபடை வீடுகளிலும் பழனியில் தான் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

    முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும். இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலமாக பழனி உள்ளது. பழனியில் தைப்பூச விழா 10 நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றையை தினம் லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.

    • அகத்தியர், முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றி தன் கையில் வைத்திருக்கும் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்றை ஏற்படுத்தினார்.
    • வள்ளி, தெய்வானை, வேல் ஆகியவை முறையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை குறிக்கிறது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் கதித்தமலை என்று அழைக்கப்படும் மலை மீது முருகப்பெருமான், வெற்றி வேலாயுதசுவாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அகத்தியர் வழிபட்ட தலம், அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம் என பல சிறப்புகளை இக்கோவில் பெற்றுள்ளது.

    தல வரலாறு

    முருகப்பெருமான் மீது அதிக பக்தி கொண்ட அகத்திய முனிவர், அவர் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி, ஒரு சமயம் அகத்தியர் முருகனை தரிசிக்க சென்றார். உடன் நாரதர் மற்றும் தேவர்கள் இருந்தனர். ஓரிடம் வந்ததும், அகத்தியர் முருகனுக்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால் அங்கு நைவேத்தியம் செய்ய நீர் கிடைக்கவில்லை. மேலும், அவருக்கும் மிகுந்த தாகம் எடுத்தது.

    இதனால் அகத்தியர், முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றி தன் கையில் வைத்திருக்கும் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்றை ஏற்படுத்தினார். இதையடுத்து, நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியரும் மகிழ்ச்சி அடைந்து பூஜைகளை முடித்து, தன் தாகத்தையும் தீர்த்துக் கொண்டார். முருகனால் தோன்றுவிக்கப்பட்ட ஊற்று, இன்றுவரை வற்றாமல் நீரை கொடுத்து வருகிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் இப்பகுதி 'ஊத்துக்குளி' என அழைக்கப்பட்டது. பின்னர், இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோவிலும் எழுப்பப்பட்டது.

    கோவில் அமைப்பு

    கோவில், மலைமீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ஒரு அழகிய மண்டபத்தில் முருகப் பெருமான் தனியாக அருள்பாலிக்கிறார். வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோர் தனிச் சன்னிதியில் காட்சி தருகின்றனர். இதற்கு காரணமும் கூறப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் தனிமையில் இருந்தார். அப்போது முருகப்பெருமானை மணம் முடிக்க விரும்பிய இரு பெண்கள், இம்மலைக்கு வந்து தங்களை ஆட்கொள்ளும்படி வேண்டினர். இதையடுத்து, முருகப் பெருமானும் அருளாசி வழங்கினார். அதன்படி, இந்திரனின் மகளாக தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். இங்குள்ள முருகப்பெருமான், திருமணத்துக்கு முந்தைய நிலையில் எழுந்தருளி இருப்பதால் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனிச் சன்னிதியில் காட்சி தருகின்றனர்.

    மற்றொரு காரணமாக, வள்ளி, தெய்வானை, வேல் ஆகியவை முறையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை குறிக்கிறது. இவை மூன்றும் ஆசை, செயல், அறிவு ஆகிய மூன்று சக்திகளை குறிக்கின்றன. இவை மூன்றும் பரபிரம்மாவாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. இதன் காரணமாகவே பெரும்பாலான கோவில்களில் இச்சாசக்தியும், கிரியா சக்தியும் முருகனுக்கு இருபுறமும் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படுகிறது. இம்மூன்றில் மிக முக்கியமான ஞான சக்தியை, இச்சையும், கிரியையும் இருந்தால் தான் பெற முடியும். இருப்பினும் இவ்வாலயத்தில் இருக்கும் முருகப்பெருமான், இவ்விரண்டும் இல்லாமலேயே ஞான சக்தி பெற்றவர் என்பதை இது குறிக்கிறது.

    கோவிலில் இடும்பனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. கோவிலுக்கு கீழே தென்கிழக்கில் சுப்பராயர் சன்னிதி எனும் பாம்பு புற்றுக்கு தனிக் கோவில் உள்ளது. வள்ளி, தெய்வானை சன்னிதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் சுக்குமலையான் சன்னிதி காணப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுக்குமலையானை வழிபட்டு செல்கிறார்கள்.

     

    கோவில் தோற்றம்

    வழிபாடு

    திருமணத் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவிலில் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூச விழாவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

    கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் கதித்த மலை முருகன் கோவில் உள்ளது.

    • இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன.
    • பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது.

    பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விரதம் இருந்து பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.

    விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.

    அந்த வகையில், இன்று ஜனவரி மாதத்தின் கடைசி பிரதோஷ விரதம். அதிலும் இன்று வெள்ளிக்கிழமையும் கூட. அதனால்தான் இந்த விரதம் சுக்கிரவார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வளர்பிறையில் வரும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.

    அதன்படி, இன்றைய பூஜையின் முழு மனதுடன் உங்களின் வேண்டுதலை சிவனுக்கு சில பொருட்களை காணிக்கையாக செலுத்துவதன் மூலம் நிறைவேறும். அதாவது உங்களுக்கு ஏதேனும் பணி நிலுவையில் இருந்தால் இதனை செய்யலாம்.

    இன்றைய பூஜைக்கான நல்ல நேரம் மற்றும் இந்த நாளில் சிவ பெருமானுக்கு என்ன பிரசாதம் செய்வது பொருத்தமானது என்று பார்ப்போம்...

    இன்று சுக்கிரவார பிரதோஷ விரதத்தை வழிபடுவதற்கு உகந்த நேரம்:

    இன்றைய பிரதோஷ காலம் மாலை 5:01 மணிக்கு தொடங்கி 6:45 மணி வரை. வழிபாட்டிற்கான நல்ல நேரம் மாலை 5:59 மணி முதல் இரவு 8:37 மணி வரை. தோராயமாக இரண்டரை மணி நேரம் கொண்ட இந்த நல்ல நேரத்தில் நீங்கள் மனதார சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கினால், உங்களின் வேண்டுதல் நிறைவேறும்.

    சிவ பெருமானுக்கு உகந்தவை:

    உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தாலோ அல்லது சில வேலைகள் பாதியில் நின்றாலோ இன்று இந்த பரிகாரத்தை முயற்சி செய்யலாம். சுக்கிர வார பிரதோஷ விரதத்தில், சிவபெருமான் சிவலிங்கத்தில் சில சிறப்புப் பொருட்களை படைத்தால் மகிழ்வார். அதாவது, சிவ பெருமானுக்கு பச்சைப் பால் மற்றும் குங்குமப்பூ படைத்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன், காதல் வாழ்க்கையில் உள்ள தடைகளும் குறையும். இது தவிர, நீங்கள் மற்றொரு எளிய பரிகாரத்தையும் முயற்சி செய்யலாம். வில்வத்தில் சிறிது தேன் தடவி சிவ பெருமானுக்கு சமர்ப்பித்தால், உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் நிறைவடையத் தொடங்கும்.

    பிரதோஷத்தில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்:

    இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன. இன்று, தவறுதலாக கூட இறைச்சி மற்றும் மது உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ளக்கூடாது. மேலும், இந்த நாளில் ஒருவர் தனது பேச்சின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இன்று, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும், கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம். மேலும், பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது. மேலும், சிவபெருமானுககு உடைந்த எந்தப் பொருளையும் படைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குங்குமப்பூவை படைத்தால், அதன் இழைகள் உடைக்கப்படக்கூடாது.

    • இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும்.
    • மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி தங்கம் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் அரச மரமும், வேப்ப மரமும் அடுத்தடுத்து, ஒன்றாக வளர்ந்துள்ளது.

    கடந்த 20 ஆண்டு காலமாக இந்த மரங்கள் உள்ளன. இந்நிலையில் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும், அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க பக்தர்கள் முடிவு செய்தனர்.

    இதற்கு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு நேற்று அரச, வேப்ப மரங்களுக்கு திருமண வைபோகம் நடந்தது. இதையொட்டி 2 மரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து அரச மரம் ஆணாகவும், வேப்ப மரம் பெண்ணாகவும் கருதப்பட்டு, 2 மரங்களுக்கும் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க வேம்பு மரத்திற்கு தாலி அணிவிக்கப்பட்டது. அதன் பின் விஷேச தீபாராதனைகளும் நடத்தப்பட்டது.

    இந்த விநோத வழிபாட்டில் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், 'அரச மரம் ஆண் மரம் ஆகும். அது போல வேப்ப மரம் பெண் மரமாகும்.

    இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும். ஆனால் மூலைக்கரைப்பட்டி செல்வவிநாயகர் கோவிலில் 2 மரங்களும் ஒன்றாகவே வளர்ந்து வருவது அதிசயமாகும்.

    இவ்வாறு வளரும் மரங்களில் தெய்வாம்சம் பொருந்தி இருக்கும். இறைவன் மரங்களில் குடியிருந்து வேண்டிய வரங்களை அருளுவார் என்பது எங்களது நம்பிக்கை.

    அதிலும் மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும். இதனை காண்போர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும். திருமண காட்சியை கண்டு வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்றனர்.

    • பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்ததாகவும், அதனால் தான் இந்த மலைக்கு ‘ஐவர் மலை' எனப் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
    • மலையை சுற்றியுள்ள எட்டு பாறைகளுக்கு நடுவில் ஒன்பதாவது பாறையில் சுயம்பு மூர்த்தியாக ரெத்தின கிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சுரும்பார் குழலி சமேதி ரெத்தின கிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழநாட்டின் காவிரி தென்கரை தலங்களில் முதல் தலமாகவும், தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும் இக்கோவில் திகழ்கிறது.

    தல வரலாறு

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வைராக்கிய பெருமாள் என்பவர், ஒரு முறை இத்தலம் வந்து, "தன் தங்கைக்கு குழந்தை பேறு கிடைத்தால், தன் சிரசை காணிக்கையாக தருவதாக" வேண்டிக்கொண்டார். வேண்டுதலின்படி, தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததால், தன்னுடைய சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார். இந்த ஆலய அடிவாரத்தில் வைராக்கிய பெருமாள் பாதமும், மலை உச்சியில் அவரின் முழு உருவ திருமேனியும் உள்ளது. இவருக்கு தேங்காய் பால், தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. இறைவனுக்கு போடப்படும் மாலையும், பின்னர் இவருக்கே அணிவிக்கப்படுகிறது.

    ஒரு முறை ரெத்தின கிரீஸ்வரர், வட நாட்டின் மங்கலமா நகரில் ஆட்சி செய்த மன்னனின் நவரத்தின கிரீடத்தை காணாமல் போகும்படி செய்தார். இதனால் வருந்திய மன்னன் முன்பாக தோன்றிய வேதியன் ஒருவன், "உன்னுடைய கிரீடம் ரெத்தின -ரெத்தினகிரீஸ்வரர் கிரீஸ்வரர் வசம் உள்ளது" என்று கூறினான். உடனே மன்னன், ரெத்தினகிரீஸ்வரரிடம் வந்து மணிமுடி வேண்டி நின்றான்.

    அப்போது சிவாச்சாரியார் வடிவில் வந்த இறைவன், "காவிரி நீர் கொண்டு இங்குள்ள கொப்பரை முழுவதையும் நிரப்ப வேண்டும். அப்போதுதான் உன்னுடைய மணி முடி கிடைக்கும்" என்றார். ஆனால் மன்னன் எவ்வளவு முயன்றும் கொப்பரையை நிரப்ப முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த மன்னன், சிவாச்சாரியாரை நோக்கி வாளை வீசினான். அப்போது சிவாச்சாரியார் சிவலிங்கத்துக்கு பின்னால் சென்று மறைய, வாள் சிவலிங்கத்தின் மீது பட்டு ரத்தம் பீறிட்டது. பின்னர், தன் தவறை உணர்ந்த மன்னன், தான் செய்த தவறுக்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தான். அப்போது மன்னனை தடுத்த இறைவன், மணிமுடியை வழங்கி அருளினார். இதற்கு சாட்சியாக இப்போதும் சிவலிங்கத்தின் மீது வெட்டு தழும்பு உள்ளதை காண முடியும்.

    இந்நிகழ்வுக்கு பின்னர் ரெத்தினகிரீஸ்வரரை வழிபட்ட மன்னன், தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் நடைமுறையை கொண்டுவந்தான். இன்றளவும், தினமும் இறைவனின் அபிஷேகத்திற்காக சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

    பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்ததாகவும், அதனால் தான் இந்த மலைக்கு 'ஐவர் மலை' எனப் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். பின்பு, அதுவே மருவி 'அய்யர்மலை' என்றானது. பாண்டவர்கள் தங்கி இருந்ததற்கு சான்றாக, மலையின் நடுப்பகுதியில் சிறிய குகையில் ஐந்து படுக்கைகள் உள்ளன.

    கோவில் அமைப்பு

    1500 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில், 2-ம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகும். நான்கு கிலோமீட்டர் சுற்றளவும், 1178 அடி உயரமும் கொண்ட மலையின் மீது இக்கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள சுவாமியை தரிசிக்க 1017 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலை ஏறும் வழியில் இரண்டு பாறைகளுக்கு இடையில் சப்த கன்னியர்கள் இருக்கிறார்கள். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் சன்னிதிகள் உள்ளன.

    இங்குள்ள 'பொன்னிடும் பாறை'யில் இருந்து 103 படிகள் ஏறிச் சென்றால் பதினெட்டு படிகள் வரும். மிகவும் விசேஷமான இந்த பதினெட்டு படிகளின் நடுவில் ஒரு மலர் செதுக்கப்பட் டுள்ளது. வழக்கு, பிரச்சனை ஏற்படும்போது, இந்த படிகளில் தீபம் ஏற்றி 'நான் குற்றமற்றவன், என் பிரச்சனையை தீர்த்து வை இறைவா' என வேண்டிக்கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

    மலையை சுற்றியுள்ள எட்டு பாறைகளுக்கு நடுவில் ஒன்பதாவது பாறையில் சுயம்பு மூர்த்தியாக ரெத்தின கிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவர் வாட்போக்கிநாதர், ராஜலிங்கமூர்த்தி, மாணிக்கமலையான், மலை கொழுந்தீஸ்வரர் என்ற பெயரிலும், அம்பாள் சுரும்பார் குழலி, பொன்னும் சுரும்பாயி, ஆராளகேஸ்வரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். குல தெய்வம் யார் என தெரியாதவர்கள், ரெத்தினகிரீஸ்வரரை வழிபடலாம்.

    மாசி மாதம் சில தினங்கள் சூரிய கதிர்கள் சுவாமியின் மீது விழுவது சிறப்பாகும். திருவண்ணாமலை கிரிவலம் போல, பவுர்ணமி தோறும் மலையை சுற்றி சுமார் 2.5 கி.மீ. தூரம் கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது. கோவில், காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அய்யர்மலை உள்ளது.

    ×