என் மலர்tooltip icon

    வழிபாடு

    தைப்பூசத் திருநாள் சிறப்புகள்
    X

    தைப்பூசத் திருநாள் சிறப்புகள்

    • பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் 'தைப்பூசம்' என்கிறார்கள்.
    • சிவாலயங்களில் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் மிக முக்கியமான தினங்களில் ஒன்று தைப்பூசத் திருநாள். தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளை தைப்பூசத் திருநாளாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் முருகப் பெருமானை போற்றி வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் பெறலாம். தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை, தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா என உலகம் முழுவதும் பல நாடுகளில் சிறப்பிக்கப்படுகிறது.

    தைப்பூசத் திருநாளுக்கு பல்வேறு புராணக் காரணங்கள் சொல்லப்படுகிறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி போர் ஏற்பட்டது. இதில் தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள், தேவர்களை சிறைப்படுத்தினர். இதனால் வருந்திய தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். இதையடுத்து, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகப்பெருமான். இவர் தேவர்களின் சேனாதிபதியாக இருந்து, அசுரர்களை அழித்து, தேவர்களை காத்தார். இதனைப் போற்றும் விதமாக தைப்பூசம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

    ஞானப் பழம் வேண்டி, முருகனுக்கும் விநாயகருக்கும் போட்டி ஏற்பட்டது. அதில் சிவன் - பார்வதியை சுற்றி வந்து விநாயகர் ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். இதனால் கோபம் கொண்ட முருகப் பெருமான், பழனி மலையில் ஆண்டி கோலத்தில் வந்து நின்றார். அந்த தினமே 'தைப்பூசம்' என்றும் கூறப்படுகிறது. மேலும், அன்னை பராசக்தி, பழனி மலையில் ஆண்டி கோலத்தில் நின்ற முருகனுக்கு ஞானவேல் கொடுத்த தினமே 'தைப் பூசம்' என்ற கருத்தும் உள்ளது.

    சிவபெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய திருநாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, மகாவிஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிவபெருமான், சிதம்பரத்தில் அரங்கேற்றினார். இந்த நடனத்தை ரசித்து பார்த்த பார்வதி தேவிக்கும், அதே போன்று நடனம் ஆட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    அதன்படி, பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் 'தைப்பூசம்' என்கிறார்கள். சிதம்பரத்தில் சிவன் - பார்வதியாக இணைந்து நடனம் ஆடியதும் இந்த தைப்பூசம் திருநாளில் தான் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த நாள், சிவன் மற்றும் அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாளாக உள்ளது. அன்றைய தினம் சிவாலயங்களில் சிவபெருமானுக்கும், நடராஜருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    இந்த உலகத்தில் முதன்முதலில் நீர்தான் உருவானதாக கருதப்படுகிறது. அதன்பின்பு, அதில் இருந்து நிலம், உலக உயிர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. அவ்வாறு, உலகம் உருவாகத் (நீர் உருவாக) தொடங்கிய தினமே 'தைப்பூசம்' என்பது நமது முன்னோர்களின் கருத்து. இதன் நினைவாக தான், பல சிவாலயங்களில் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    முருகப்பெருமான், அகத்திய முனிவருக்கு தமிழ் கற்றுக்கொடுத்ததும், வள்ளி தேவியை மண முடித்ததும் இந்த தைப்பூச நாளில் தான் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு தைப்பூசத் திருநாள், தை மாதம் 18-ந்தேதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

    தைப்பூசத் நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதிலும் குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அறுபடை வீடுகளிலும் பழனியில் தான் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

    முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும். இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலமாக பழனி உள்ளது. பழனியில் தைப்பூச விழா 10 நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றையை தினம் லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.

    Next Story
    ×