என் மலர்
வழிபாடு

ரெத்தினகிரீஸ்வரர் - சுரும்பார் குழலி
அற்புதங்கள் நிறைந்த அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர்
- பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்ததாகவும், அதனால் தான் இந்த மலைக்கு ‘ஐவர் மலை' எனப் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
- மலையை சுற்றியுள்ள எட்டு பாறைகளுக்கு நடுவில் ஒன்பதாவது பாறையில் சுயம்பு மூர்த்தியாக ரெத்தின கிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சுரும்பார் குழலி சமேதி ரெத்தின கிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழநாட்டின் காவிரி தென்கரை தலங்களில் முதல் தலமாகவும், தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும் இக்கோவில் திகழ்கிறது.
தல வரலாறு
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வைராக்கிய பெருமாள் என்பவர், ஒரு முறை இத்தலம் வந்து, "தன் தங்கைக்கு குழந்தை பேறு கிடைத்தால், தன் சிரசை காணிக்கையாக தருவதாக" வேண்டிக்கொண்டார். வேண்டுதலின்படி, தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததால், தன்னுடைய சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார். இந்த ஆலய அடிவாரத்தில் வைராக்கிய பெருமாள் பாதமும், மலை உச்சியில் அவரின் முழு உருவ திருமேனியும் உள்ளது. இவருக்கு தேங்காய் பால், தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. இறைவனுக்கு போடப்படும் மாலையும், பின்னர் இவருக்கே அணிவிக்கப்படுகிறது.
ஒரு முறை ரெத்தின கிரீஸ்வரர், வட நாட்டின் மங்கலமா நகரில் ஆட்சி செய்த மன்னனின் நவரத்தின கிரீடத்தை காணாமல் போகும்படி செய்தார். இதனால் வருந்திய மன்னன் முன்பாக தோன்றிய வேதியன் ஒருவன், "உன்னுடைய கிரீடம் ரெத்தின -ரெத்தினகிரீஸ்வரர் கிரீஸ்வரர் வசம் உள்ளது" என்று கூறினான். உடனே மன்னன், ரெத்தினகிரீஸ்வரரிடம் வந்து மணிமுடி வேண்டி நின்றான்.
அப்போது சிவாச்சாரியார் வடிவில் வந்த இறைவன், "காவிரி நீர் கொண்டு இங்குள்ள கொப்பரை முழுவதையும் நிரப்ப வேண்டும். அப்போதுதான் உன்னுடைய மணி முடி கிடைக்கும்" என்றார். ஆனால் மன்னன் எவ்வளவு முயன்றும் கொப்பரையை நிரப்ப முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த மன்னன், சிவாச்சாரியாரை நோக்கி வாளை வீசினான். அப்போது சிவாச்சாரியார் சிவலிங்கத்துக்கு பின்னால் சென்று மறைய, வாள் சிவலிங்கத்தின் மீது பட்டு ரத்தம் பீறிட்டது. பின்னர், தன் தவறை உணர்ந்த மன்னன், தான் செய்த தவறுக்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தான். அப்போது மன்னனை தடுத்த இறைவன், மணிமுடியை வழங்கி அருளினார். இதற்கு சாட்சியாக இப்போதும் சிவலிங்கத்தின் மீது வெட்டு தழும்பு உள்ளதை காண முடியும்.
இந்நிகழ்வுக்கு பின்னர் ரெத்தினகிரீஸ்வரரை வழிபட்ட மன்னன், தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் நடைமுறையை கொண்டுவந்தான். இன்றளவும், தினமும் இறைவனின் அபிஷேகத்திற்காக சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்ததாகவும், அதனால் தான் இந்த மலைக்கு 'ஐவர் மலை' எனப் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். பின்பு, அதுவே மருவி 'அய்யர்மலை' என்றானது. பாண்டவர்கள் தங்கி இருந்ததற்கு சான்றாக, மலையின் நடுப்பகுதியில் சிறிய குகையில் ஐந்து படுக்கைகள் உள்ளன.
கோவில் அமைப்பு
1500 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில், 2-ம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகும். நான்கு கிலோமீட்டர் சுற்றளவும், 1178 அடி உயரமும் கொண்ட மலையின் மீது இக்கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள சுவாமியை தரிசிக்க 1017 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலை ஏறும் வழியில் இரண்டு பாறைகளுக்கு இடையில் சப்த கன்னியர்கள் இருக்கிறார்கள். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் சன்னிதிகள் உள்ளன.
இங்குள்ள 'பொன்னிடும் பாறை'யில் இருந்து 103 படிகள் ஏறிச் சென்றால் பதினெட்டு படிகள் வரும். மிகவும் விசேஷமான இந்த பதினெட்டு படிகளின் நடுவில் ஒரு மலர் செதுக்கப்பட் டுள்ளது. வழக்கு, பிரச்சனை ஏற்படும்போது, இந்த படிகளில் தீபம் ஏற்றி 'நான் குற்றமற்றவன், என் பிரச்சனையை தீர்த்து வை இறைவா' என வேண்டிக்கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
மலையை சுற்றியுள்ள எட்டு பாறைகளுக்கு நடுவில் ஒன்பதாவது பாறையில் சுயம்பு மூர்த்தியாக ரெத்தின கிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவர் வாட்போக்கிநாதர், ராஜலிங்கமூர்த்தி, மாணிக்கமலையான், மலை கொழுந்தீஸ்வரர் என்ற பெயரிலும், அம்பாள் சுரும்பார் குழலி, பொன்னும் சுரும்பாயி, ஆராளகேஸ்வரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். குல தெய்வம் யார் என தெரியாதவர்கள், ரெத்தினகிரீஸ்வரரை வழிபடலாம்.
மாசி மாதம் சில தினங்கள் சூரிய கதிர்கள் சுவாமியின் மீது விழுவது சிறப்பாகும். திருவண்ணாமலை கிரிவலம் போல, பவுர்ணமி தோறும் மலையை சுற்றி சுமார் 2.5 கி.மீ. தூரம் கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது. கோவில், காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அய்யர்மலை உள்ளது.






