என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thoranamalai murugan temple"

    • அன்றைய தினம் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது.
    • ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அகத்தியர், தேரையர் சித்தர்கள் வழிபட்ட தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருக்கிறது.

    அன்றைய தினம் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கல்யாணத்தை கணேச சிவாச்சாரியார், ஈஸ்வரன் சர்மா நடத்தி வைக்கின்றனர். அதனைத்தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு முத்துமாலைபுரம் மறைந்த ஆதி நாராயணன்-சந்திராலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது.


    • தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
    • தைப்பூச திருவிழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் பாதையில் பயணிக்கும்போது சற்று மேற்கு நோக்கி பார்த்தால், வெள்ளைப் பட்டை தீட்டியது போல் ஒரு அழகிய மலைக்குன்று நம் கண்களுக்கு தென்படும். யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் அந்த மலைதான், தோரணமலை. யானைக்கு 'வாரணம்' என்ற பெயர் உண்டு. அந்த வகையில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்ட இந்த மலை, காலப்போக்கில் மருவி, 'தோரணமலை' என்று அழைக்கப் படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தோரணமலையில் உள்ள முருகன் கோவில், பல்வேறு சிறப்புகளை தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.

    தல வரலாறு

    சிவன் - பார்வதி திருமணத்தின்போது வடக்குப் பகுதி தாழ்ந்து, தெற்குப் பகுதி உயர்ந்தது. அதை சமன் செய்ய சிவபெருமானின் உத்தரவின்பேரில், தென்திசை நோக்கி பயணித்தார், அகத்தியர். இங்குள்ள மலை வளத்தை கண்டு வியந்த அகத்தியர், சித்தர்களுக்கான பாடசாலை ஒன்றை அமைத்தார். அதில் மருத்துவம் உள்பட அனைத்துவிதமான பாடங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அங்கு பயின்ற சித்தர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிறருக்கும் பயிற்றுவித்தனர். அப்போது அவர்கள் வழிபட்ட முருகன்தான், தற்போது தோரண மலையில் குடிகொண்டு அருள்புரிகிறார்.

    அகத்தியர் இந்த மலையில் இருக்கும்போது, காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி ஏற்பட, குணம்பெற வேண்டி அகத்தியரிடம் வந்தார். அகத்தியர், மன்னனின் நாடி பார்த்தபோது, மன்னனின் தலையில் தேரை இருப்பது தெரியவந்தது. மன்னன் குளிக்கும்போது தவளையின் குஞ்சு நாசி வழியே தலைக்குச் சென்று வளர்ந்துள்ளதாக அகத்தியர் விளக்கினார். இதையடுத்து கபால அறுவை சிகிச்சை மேற்கொண்ட அகத்தியர், தலைக்குள் இருந்த தேரையை எப்படி வெளியே எடுப்பது என்று சிந்தித்தார்.

    அப்போது, அவரது சீடராக இருந்த வாய்பேச முடியாத ராமதேவன் என்ற சிறுவன், ஒரு கலசத்தில் தண்ணீரை வைத்து அலம்பினான். தண்ணீர் சத்தத்தை கேட்ட தேரை துள்ளிக் குதித்து வெளியே வந்தது. இதனால் அந்த சிறுவனுக்கு 'தேரையர்' என பெயர் சூட்டி, அவனை தோரணமலையில் தங்கி இருந்து மருத்துவ சேவை செய்யும்படி பணித்தார், அகத்தியர். அதன்படி தேரையர் இங்கேயே தங்கி இறுதியில் முக்தியும் அடைந்தார். காலப்போக்கில் இங்கு வழிபாடு நின்றதோடு, முருகன் சிலையும் காணாமல் போனது.

    பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், ஆதிநாராயணன் என்பவரின் மூதாதையர் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், தான் தோரணமலையில் இருப்பதாகவும், அங்குள்ள சுனையில் மறைந்து இருக்கும் தன்னுடைய சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி சுனையில் மறைந்து இருந்த முருகன் சிலையை மீட்டு, குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார்.

    இதுபற்றி கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் கூறும்போது, "எங்கள் மூதாதையர் வழியில் நாங்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறோம். எனது தந்தை ஆதிநாராயணன், பள்ளி ஆசிரியராக இருந்தபடியே மீதி நேரங்களில் இந்த மலையில் முருகனுக்கு தொண்டு செய்துவந்தார். கடையம் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டுமே தெரிந்த தோரணமலை ஆலயத்தை, சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர் மக்களும் அறியும்படி செய்ய நினைத்தார்.

    அந்த காலத்தில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே, அவர் தான் வைத்திருந்த சைக்கிளில் ஒவ்வொரு சினிமா தியேட்டராக சென்று, தோரணமலை பற்றிய பட காட்சியை தியேட்டரில் போடும்படி கேட்பார். இறைப் பணி என்பதால், அவர்களும் மனமகிழ்ச்சியோடு பணம் ஏதும் பெறாமல், படத்தின் இடைவேளையின்போது தோரணமலையை காட்டினார்கள். இப்படிதான் பல்வேறு மாவட்டங்களுக்கும் தோரணமலையின் புகழ் பரவியது.

     

    கிரிவலம் செல்லும் பக்தர்கள்

    மேலும், வைகாசி விசாகத்தை சிறப்பாக கொண்டாட எண்ணிய ஆதிநாராயணன், சிறப்பு பூஜையோடு நின்றுவிடாமல் விடிய விடிய பக்தர்களை அங்கேயே இருக்கவைக்க யோசித்தார். அதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் உதவியோடு கலையரங்கம் கட்டி, அதில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தார். இதனால் வைகாசி விசாகத் திருவிழா மக்கள் வெள்ளத்தில் களை கட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக தோரணமலையின் புகழ் பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

    இதனால் பலரிடம் உதவி கேட்டு, அவர்களே திருப்பணி செய்தனர். அப்படிதான் மலைமீது ஏற படிக்கட்டுகள், மலை அடிவாரத்தில் தார் சாலை, கிணறு, தங்குவதற்கு தாழ்வாரங்கள், அகன்ற மலைப்பாதை, ஆங்காங்கே இளைப்பாற ஆறு மண்டபங்களும் அமைக்கப்பட்டன. தந்தையின் வழியில் நானும் ஆன்மிகப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். தற்போது தோரணமலை ஆலயத்தில் தினமும் மதியம் அன்னதானம், ஞாயிறு மற்றும் கடைசி வெள்ளிக்கிழமை, பவுர்ணமி கிரிவல நாட்களில் காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.

    தோரணமலை முருகனின் பக்தர்களால், பல மாணவர்கள் தத்தெடுக்கப்பட்டு படிக்க வைக்கப்படுகிறார்கள். தோரணமலையில் நூலகம் ஒன்றும் உள்ளது. அதில் ஆன்மிகம் மட்டுமின்றி பொதுஅறிவு புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தோரணமலை பக்தர்கள் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

     

    தோரணமலையின் தோற்றம்

    தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பத்ரகாளி அம்மன் தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மலையில் முருகப்பெருமானின் பாதச்சுவடு உள்ளது. அதை பக்தர்கள் தொட்டு வணங்கி செல்கின்றனர். மலை அடிவாரத்தில் கன்னிமார்கள் சன்னிதி உள்ளது. மேலும் சிவபெருமான், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் சுதை சிற்பங்களும் காணப்படுகின்றன. மலையேறும் இடத்தில் பாலமுருகன் சிலை உள்ளது. மலையேற முடியாதவர்கள் இந்த முருகனை வழிபட்டுச் செல்கிறார்கள்.

    இங்குள்ள விநாயகர், 'வல்லப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். அவர் தேவியுடன் காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. முகூர்த்த நாட்களில் இவரது சன்னிதியில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. தோரணமலை முருகனை வேண்டுபவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி, உடல் ஆரோக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, விவசாயம் செழிக்க 'வருண கலச பூஜை' நடத்தப்படுகிறது. தைப் பூச திருவிழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் விருட்சபூஜை நடைபெறுகிறது. இதுதவிர, சுனை நீர், கோவில் வளாகத்தில் நடப்பட்டுள்ள 27 நட்சத்திரத்திற்குரிய செடிகள் ஆகியவற்றிற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். முருகன் கோவில் அமைந்திருக்கும் தோரணை மலையைச் சுற்றி தற்போது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் நிகழ்வும் நடக்கிறது. தற்போது கரடுமுரடாக இருக்கும் 6 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையை, புனரமைக்கும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

    தோரணமலையை அலங்கரிக்கும் சுனைகள்

    தோரணமலையில் மொத்தம் அறுபத்து நான்கு சுனைகள் இருப்பதாக இங்கே தங்கி பாடசாலை நடத்திய சித்தர்களின் பாடல் வாயிலாக அறிகிறோம். அவற்றில் சில மட்டுமே நம் கண்ணுக்கு புலப்படுகின்றன. மலை அடிவாரத்தில் இரண்டு சுனைகள், மலைக்கு போகும் வழியில் இடதுபுறம் 'லட்சுமி தீர்த்தம்' என்ற சுனை, மலையில் முருகப்பெருமானுக்கு இடதுபுறம் சற்று மேலே ஒரு பெரிய சுனை போன்றவை முக்கியமான சுனைகளாக இருக்கின்றன.

    • கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில்.
    • பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர தொடர் சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது.

    கடையம்:

    கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில்.

    நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலில், பெண்கள் முன்னேற்றம் காணவும், மாணவர்கள் கல்வியில் செழிக்கவும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர தொடர் சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது.

    அன்னதானம்

    தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த கோவில் பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் முன்னோர்களுக்கு, 1930-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் வழங்கப்பட்ட மணி மூலம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மணி அடிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதில் கடையம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • இந்த முருகன் கோவிலுக்கு 1100-க்கும் மேற்பட்ட அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
    • விழாவின் சிறப்பு அம்சமாக பக்தி இன்னிசை பாடகர் சீர்காழி சிவசிதம்பரத்தின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அகஸ்தியர் மற்றும் சித்தர்கள் வழிபட்ட புராண வரலாற்றுச் சிறப்புடைய ஆலயமாகும்.

    ஆடிப்பெருக்கு விழா

    இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலையடி வாரத்தில் உள்ள விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பின்பு மலைமீது குகையில் அமைந்திருக்கும் இந்த முருகன் கோவிலுக்கு 1100-க்கும் மேற்பட்ட அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

    மலைமேல் உள்ள கோவிலில் உள்ள முருகனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தத்தங்கள் எடுத்துவரப்பட்டு கீழே உள்ள உற்சவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.படி பூஜையும் நடைபெற்றது

    பக்தி கச்சேரி

    விழாவின் சிறப்பு அம்சமாக பக்தி இன்னிசை பாடகர் சீர்காழி சிவசிதம்பரத்தின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. காலை முதல் நாள் முழுவதும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்தி ருந்தார்.

    சீர்காழி சிவசிதம்பரத்தின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றபோது எடுத்தபடம்

    முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. நெல்லை மாவட்டத்தில் இப்புண்ணிய மலை அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது. நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும். இந்த தோரணமலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான்.

    இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?

    தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் தேரையர் சித்தர் இருவரும் பல நூறு ஆண்டுகளாக வழிபட்ட பெருமை, மகிமையும் இந்த முருகப் பெருமானுக்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான முருகத் தலங்களில் அறுபடை வீடுகள் உள்பட எந்த ஒரு தலத்துக்கும் இல்லாத மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாக இது கருதப்படுகிறது.

    பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். நீங்கள் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் சரி... தொழில் விருத்தி ஆகவேண்டுமா? குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளா? கடன் தொல்லையா? நல்ல வேலை வேண்டுமா? பதவி உயர்வு வேண்டுமா? திருமணம் நடக்க வேண்டுமா? புத்திரப் பாக்கியம் வேண்டுமா? இப்படி நீங்கள் என்ன கேட்டாலும் தோரண மலை முருகன் வாரி வழங்க தயங்குவதே இல்லை.

    அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார். அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது.

    அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார். அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார். மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்த நா.பெருமாள் என்பவர் கனவில் ஒருநாள் முருகப்பெருமான் தோன்றினார்.

    “நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்” என்றான். மறுநாள் விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்றார். சுனையில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினார்கள். சொன்னபடி தோரணமலைமுருகன் அங்கே இருந்தார்.

    அந்த சிலையை எடுத்து மலை அடி வார குகையில் வைத்து வழிபட்டனர். இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளார். பெருமாளின் மகனும் ஆசிரியருமான ஆதிநாராயணன், தோரணமலை முருகன் பற்றிய சிறப்புகளை பரப்பச் செய்தார். தற்போது அவருக்கு 84 வயது ஆகிறது. 60 ஆண்டுகளாக தோரணமலை முருகனுக்கு சேவை செய்த சிறப்பு அவருக்கு உண்டு.

    தற்போது அவரது குமாரர் செண்பகராமன், தோரணமலை முருகனின் சிறப்புகளை உலகம் முழுமைக்கும் பரவச்செய்யும் தன்னலமற்ற பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதனால் தோரணமலை முருகனை வழிபட வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.

    தோரணமலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டு விழா மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    தோரணமலை முருகன் பற்றிய கூடுதல் தகவல்களை செண்பகராமனிடம் 99657 62002 என்ற எண்ணில் பெறலாம்.

    பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிர்ப்பதை உணர முடியும்.

    மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.

    இத்தகைய சிறப்புடைய இந்த புண்ணியமலை உச்சியில் முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறைவாக உள்ளது. முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.
    திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார்.
    உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது.

    கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர். தென்திசை புறப்பட்ட அகத்தியருக்கு ஆதி மொழியாம் தமிழ் மொழியை உபதேசித்தார் சிவபெருமான்.

    தென்தமிழகத்தில் உள்ள பொதிகை மலை வந்ததும் உலகம் சமநிலை அடைந்தது. அதன்பின் அகத்தியர் தமிழ் கடவுளான முருகப்பெருமானிடமும் தமிழை கற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதினார்.

    தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின் அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மருத்துவம் என்றால் இந்த காலத்தைப்போல உடல்கூறுகளையும் மருந்துகளை மட்டும் படிப்பது அல்ல. இந்த மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான் அவன் முழு மருத்துவன் ஆக முடியும். இதற்காக அகத்தியர் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிராந்தங்கள் வகுத்துள்ளார். தான் கண்டறிந்த சித்த மருத்துவ குறிப்புகளை கொண்டு அகத்திய வைத்திய சேகரம் என்ற நூல் படைத்துள்ளார்.

    அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின் படி பாடத்திட்டங்களை அகத்தியர் வகுத்தார். அந்த பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது.

    தொடர்ந்து கணிதமும், மருத்துவ ஆய்வு வகைகளும், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாடகம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், இரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், இரணவாடகம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்று கொடுக்கப்பட்டது.

    இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்தப் பின்னர் அகத்தியர் தோரணமலை பகுதியில் பாடசாலையை தொடங்கினார். தோரணமலை பயிற்சி கூடத்தில் சீனா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பயில சித்தர்கள் பலர் வந்தனர். பின்னர் சிவபெருமான் நடனம் புரிந்த ஐந்து சபைகளில் அதாவது திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன. இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி(பழனி), கொள்ளிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும்.

    இந்த பாடசாலையில் ஆறு ஆறு ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில்தான் மன்னன் காசிவர்மனுக்கு தீராத தலைவலிக்காக அகத்தியர் கபால அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்த சீடர் தேரையரை மூலிகை ஆராய்ச்சிக்காக பணித்தார். அவரும் தோரணமலையில் தங்கி இருந்து மூலிகைகள் மூலம் மருத்துவ சேவை செய்து வந்தார். அகத்தியரும் தேரையரும் தோரணமலையில் இருக்கும்போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர். அவர் இங்கேயே சமாதி நிலையை அடைந்தார்.

    காலப்போக்கில் அங்கு வழிபாடு நின்றுபோனதோடு முருகன் சிலையும் காணாமல் போனது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஆதிநாராயணன் அவர்களது மூதாதையர் ஒருவர் கனவில் முருகப்பெருமான் வந்து தான் தோரணமலையில் இருப்பதாகவும் அங்கு சுனையில் மறைந்து கிடக்கும் சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி அவர் அங்கு வந்து சுனையில் மறைந்திருந்த முருகனை மீட்டு குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார்.

    சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது ஐதீகமாகும்.
    இந்த நிலையில்தான் 1970 ஆம் ஆண்டு ஆதிநாராயணன் அவர்கள் கோயில் பொறுப்புகளை ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரிய ரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலையிலேயே கழித்தார். கடையம் சுற்றுவட்டாரத்திற்கு மட்டும் தெரிந்த அந்த கோயிலை பிரபல படுத்த எண்ணினார். அதற்கு என்னவழி என்று சிந்தித்தார். அப்போதெல்லாம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே சினிமா தியேட்டர்களில் தோரணமலை முருகன் பற்றிய சிலேடுகளை போட ஏற்பாடு செய்தார்.

    அப்படித்தான் தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. இந்த நிலையில் தோரணமலையின் வனப்பை கண்ட சினிமா கலைஞர்கள் அங்கு சினிமா படம் எடுக்க வந்தனர். அவர்களுக்கு ஆதிநாராயணன் அவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் தங்களுக்கு இடம் கொடுத்து உதவியும் செய்ததற்காக ஒரு கணிசமான தொகையை ஆதிநாராயணனன் அவர்களிடம் கொடுத்தனர்.

    ஆனால் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். மாறாக, எனக்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டுமானால் படத்தில் எழுத்துப்போடும் போது தோரணமலை என்ற பெயரை போடும்படி கேட்டுக்கொண்டார். அதனை புனிதமாக கருதிய படக்குழுவினர் தோரணைமலை என்ற பெயரை படத்தில் சேர்த்தனர். மறைந்த இயக்குனர் பரதனின் சாவித்திரி என்ற சினிமாப்படம் (இந்த படத்தில் கதாநாயகியாக நடத்தவர் பிரபல நடிகை கீர்த்திசுரேசின் தாயார் மேனகாதான்) இங்கு அதிக அளவில் படமாக்கப்பட்டது.

    அந்த படத்தின் வசனத்தில் தோரணமலை என்று குறிப்பிட்டு பேசுவார்கள். அதேபோல் டெலிவிஷன் தொடர்களும் இங்கே படமாக்கப்பட்டன. அதிலும் தோரணமலை பெயர் இடம்பெறும்.

    இப்படி தோரணமலையில் பெயர் நாலாபுறமும் பரவியதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வரத்தொடங்கினர். கிராமவாசிகள் மட்டும் வந்தகாலம் போய் நகரவாசிகளும் வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்களால் மலையில் எளிதாக ஏறமுடியவில்லை. அப்போதுதான் ஆதிநாராயணன் அவர்கள் பக்தர்கள் எளிதாக மலைமீது ஏற படிக்கட்டுக்கள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக பலரை சந்தித்து உதவி கேட்டார். அப்போதும் பணத்தை தாருங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. உங்களால் இயன்ற படிக்கட்டுகளை கட்டித்தாருங்கள் என்றுதான் வேண்டினார்.

    இந்த நிலையில்தான் ஆவுடையானூர் டாக்டர் முருகனின் அருளால் ஈர்க்கப்பட்டார். அவர் அடிக்கடி தோரணமலைக்கு வருவார். அவரது திருப்பணி மிகவும் மகத்தானது. அவரது முயற்சியால் பல படிக்கட்டுகள் முழுமை அடைந்தன. அதோடு வழியில் உள்ள லட்சுமி தீர்த்தத்தை புதுப்பித்து அங்கே பக்தர்கள் நீராட வசதி செய்து கொடுத்தார். இதற்காக அந்த டாக்டரே தன் தலையில் செங்கற்களை சுமந்த சம்பவங்களும் உண்டு. அதோடு பண உதவி செய்ய இயலாத பாமர ஏழை பக்தர்களும் திருப்பணி செங்கற்களை கொண்டு சென்றனர்.

    ஆதிநாராயணன் அவர்கள் இந்த திருப்பணியை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. இந்த வயதிலும் அவருடைய எண்ணங்கள் அனைத்தும் தோரணமலை முருகனையே வலம் வந்து கொண்டிருக்கிறது. மோட்டார் சைக்கிள்களும், கார்களும் பெருகி விட்ட இந்த காலத்திலும் தனது திருப்பணிக்கு உதவிய மிதிவண்டியை அவர் இன்றும் மறக்கவில்லை. இயக்குவார் யாரும் இல்லை என்றாலும் அந்த மிதிவண்டி முருகனின் பெயரை சொல்லும் காட்சி பொருளாக அவரது வீட்டில் நின்று கொண்டிருக்கிறது.

    வயது முதுமை காரணமாக ஆதி நாராயணன் அவர்களுக்கு அவரது மூத்த மகன் செண்பகராமன் உதவியாக இருக்கிறார். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தோரணமலையின் பெருமையை பறைசாற்றி வருகிறார். அவரது சீரிய முயற்சியின் பேரில் வருகிற 21&ந்தேதி (திங்கட்கிழமை) தைபூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று வள்ளி&தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு (உற்சவர்) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் வீதிஉலாவும் நடத்தப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து கோயில் திருப்பணி தொடங்க உள்ளது. இதில் கற்களால் ஆன புதிய கட்டிடங்கள், அலங்கார தோரணங்கள் இடம் பெறும். பணி நிறைவு அடைந்தவுடன் குடமுழுக்கும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதில் பக்தர்களும் தொழில் அதிபர்களும் உதவி செய்து முருகப்பெருமானின் அருளை பெறலாம். கடந்த காலத்தில் திருப்பணியில் உதவியவர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து தொடர்ந்து மலைக்குகை நாயகனாம் தோரணமலை முருகப்பெருமானை வந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். அதேபோல் திருப்பணிக்கு உதவி செழுமையாய் வாழ முருகப்பெருமான் அருள்புரிவார்.

    (தொடர்புக்கு - செண்பகராமன்,
    கைபேசி எண் 76959 62002, 9965762002)
    கடையம் பாலன்
    நெல்லை மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
    நெல்லை மாவட்டம் கடையத்திற்கு அருகே தென்றல் தவழும் தென் பொதிகை மலைத்தொடரில் வீற்றிருக்கும் தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா வரும் 21-ந் தேதி நடக்க உள்ளது. தோரணம் போல் மலை அமைந்த காரணத்தால் தோரணமலையாக ஸ்தலம் விளங்குகிறது. அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இம்மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.

    926 படிகளை ஏறி, மலை உச்சியை அடைந்தால், முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த தலத்தில் முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்தில் குன்றுக்குள் இருக்கும் முருகனை வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கடையத்தில் சிறிது காலம் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

    இத்தகைய சிறப்புக்குரிய தோரணமலை முருகன் கோவில் தைப்பூச விழா வரும் 21-ந் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.

    அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், விவசாயம் தழைக்க அகத்திய பூஜை, மதியம் 2 மணிக்கு ஊட்டி படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனம், இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு தோரணமலையானின் ஆவணப்படம், பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன், கே.ஏ.செண்பகராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ×