search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹாசனாம்பா அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி முன்னிலையில் நடை மூடப்பட்டது
    X
    ஹாசனாம்பா அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி முன்னிலையில் நடை மூடப்பட்டது

    ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது

    தீபாவளியையொட்டி 9 நாட்களுக்கு மட்டுமே திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை நேற்று மூடப்பட்டது.
    ஹாசன் டவுனில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில். இக்கோவிலில் ஹாசனாம்பா அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளியையொட்டி 9 நாட்களுக்கு மட்டுமே நடை திறக்கப்படும்.

    பின்னர் நடை மூடப்படும்போது அம்மனுக்கு போடப்பட்டிருக்கும் மாலைகள், கோவிலில் வைக்கப்பட்ட மலர்கள், படையல்கள் ஆகியவை கெட்டுப்போகாமல் அடுத்த ஆண்டு கோவில் திறக்கப்படும் வரை அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கோவிலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகளும் அணையாமல் அடுத்த ஆண்டு வரை எரிந்து கொண்டே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

    இப்படி பல்வேறு சிறப்பு மிக்க ஹாசனாம்பா கோவில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்ட நாள் முதல் தினமும் காலை 5 மணியளவிலும், மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் ஹாசனாம்பா அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. மற்ற நேரங்களில் அம்மனை பக்தர்கள் தரிசித்து வந்தார்கள்.

    இப்படி ஹாசனாம்பா அம்மனை கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 25 லட்சம் பக்தர்கள் தரிசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இலவச தரிசன வரிசையில் மட்டும் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு கட்டணம் செலுத்தியும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தார்கள்.

    இவ்வாறாக சிறப்பு கட்டணம், அர்ச்சனை கட்டணம், பிரசாதம் விற்றது உள்ளிட்டவை மூலம் ரூ.21.45 லட்சம் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்தான் ஹாசனாம்பா கோவில் திறக்கப்பட்டு 8-வது நாள் ஆகும். அதனால் நேற்று முன்தினத்துடன் அம்மனை, பக்தர்கள் தரிசனம் செய்தது முடிவுக்கு வந்தது. பின்னர் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

    பின்னர் நேற்று காலை 5 மணியளவில் மீண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சரியாக 2 மணிக்கு அம்மனுக்கு மாலைகள் அணிவித்து, படையலிட்டு, விசேஷ பூஜைகள் செய்து, விளக்கேற்றி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் கோவில் நடை மூடப்பட்டது.

    பின்னர் கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பிரசித்திபெற்ற ஹாசனாம்பா கோவில் கடந்த 1-ந் தேதி அன்று திறக்கப்பட்டது. 8-வது நாளான நேற்று முன்தினம் வரை கோடிக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தார்கள். தினமும் காலை 5 மணியளவிலும், பின்னர் மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் அம்மனுக்கு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டி இருந்ததாலும் அந்த நேரங்களில் மட்டும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    நேற்று முன்தினம் மாலையோடு அம்மனை, பக்தர்கள் தரிசித்தது முடிவுக்கு வந்தது. கோவில் திறக்கப்பட்டு 9-வது நாளான(கடைசி நாள்) நேற்று பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் சரியாக 2 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும் பணி சித்தேஸ்வரா கோவில் வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. உண்டியல் காணிக்கை மூலம் கோவிலுக்கு கிடைத்த வருமானம் குறித்து தகவல்கள் வெளியிடப்படும்’’ என்று கூறினார்.

    Next Story
    ×