search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Bandh"

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார். #BharatBandh #PetrolDieselPrice #Thirunavukkarasar
    சென்னை:

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சியும், தோல்வி அடைந்ததாக பாஜகவும் கூறி வருகின்றன.



    அவ்வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ‘பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்திய முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது’ என்றார்.

    தமிழகத்தில் அதிமுக தவிர்த்து முழு அடைப்பில் பங்கேற்ற மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கட்சிகள், வணிகர் அமைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் திருநாவுக்கரசர் கூறினார். #BharatBandh #PetrolDieselPrice #Thirunavukkarasar
    முழு அடைப்பால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    இது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

    இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதைக் கட்டுப்படுத்தக்கோரியும் நேற்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதேபோல், சில வணிக அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியிருந்தது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க. மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் தமிழ்நாட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. அரசு - தனியார் அலுவலகங்களும், பள்ளி - கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கின. கடைகளும் அதிக அளவில் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    தலைநகர் சென்னையை பொறுத்தவரை, காலை முதலே வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. பஸ், ரெயில், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான கடைகள் மூடப்பட்டிருந்தன. வணிகப் பகுதிகளான தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டையில் கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இயங்கியது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒரு சில பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி வியா பாரிகளை வற்புறுத்தினர். ஆனாலும், வியாபாரிகள் கடைகளை அடைக்க வில்லை. சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அந்த வகையில், சென்னையில் 430 பேரும், காஞ்சீபுரத்தில் 550 பேரும், திருவள்ளூரில் 400 பேரும் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை என்ற போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு அலைகள் இருந்ததையும் காண முடிந்தது.  #BharathBandh #PetrolDieselPriceHike
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச பிரச்சினைகளே காரணம் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக மத்திய அரசும், பா.ஜனதாவும் கூறியுள்ளன.

    டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வியடைந்து விட்டது. இதற்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காததால், போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்காக வேறு வழிகளை கையாண்டனர். பாரத் பந்த் என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், அராஜக சம்பவங்களும் வேதனையை ஏற்படுத்தி உள்ளன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்து மோடி அரசுக்கும் நன்கு தெரியும். இதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக தொடர்ந்து முயன்று வருகிறோம். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    வெனிசூலாவில் அரசியல் நிலைத்தன்மை இல்லாமை, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது போன்ற காரணிகளால், எண்ணெய் உற்பத்தி செய்யும் இந்த நாடுகள் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அமெரிக்காவின் ஷேல் கியாஸ் உற்பத்தி இன்னும் தொடங்கவில்லை.

    எண்ணெய் இறக்குமதியை சார்ந்து வாழும் நாடு இந்தியா. ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், தங்கள் சொந்த பிரச்சினைகளால் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. எண்ணெய் வளக்குறைவு காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் உற்பத்தி சரிந்துள்ளது.

    இத்தகைய சர்வதேச பிரச்சினைகளே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கூட 2008-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அப்படி இது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஆனால் இதற்கான தீர்வு எங்கள் கைகளில் இல்லை.

    இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

    இதற்கிடையே பாரத் பந்த் மூலம் நாட்டில் குழப்பத்தையும், வதந்தியையும் பரப்ப முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பா.ஜனதா புகார் கூறியுள்ளது. காங்கிரஸ் ஒரு ஊழல் நிறைந்த கப்பல் எனவும், அதனுடன் இணையும் கட்சிகளும் காங்கிரசுடன் சேர்ந்து மூழ்கும் என்றும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.  #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #RaviShankarPrasad
    நாடு முழுவதும் நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தை சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. #BharathBandh #PetrolDieselPriceHike #ShivSena
    மும்பை:

    வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்கவும், விலை உயர்வை கண்டித்தும் காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பா.ஜ.க.வின் ஆதரவு கட்சியான சிவசேனா தனது பத்திரிகையில் விமர்சனம் செய்துள்ளது. அதில், பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிக்கான பொறுப்புகளை தாம் சுமந்து வந்ததாகவும், தற்போது விழித்துக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகள் பொதுமக்களின் நலனில் எவ்வாறு பங்காற்றும் என் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    மேலும், எதிர்க்கட்சிகள் அதன் பணியை முறையாக செய்யும்போது, மக்களின் விருப்பம் பாதுகாக்கப்படுவதாகவும் சாமனா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சிவசேனா கலந்து கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அதன் தலைவர் உத்தவ் தாக்ரே, எதிர்க்கட்சிகளின் பலம் அறியவே வேண்டி பங்கேற்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார் என சாமனாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  #BharathBandh #PetrolDieselPriceHike #ShivSena
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம், வதந்திகளையும், குழப்பத்தையும் பரப்புவதற்காக நடத்தப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #MukhtarAbbasNaqvi
    புதுடெல்லி:

    வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பாஜக அல்லாத பெரும்பாலான கட்சிகள் இணைந்து அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாரத்பந்த் குறித்து பேசிய மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, விலை உயர்வு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றில் பல்வேறு குற்றங்கள் இருப்பதாகவும், ஆனால் தற்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.



    மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் எதிர்மறையான சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க யாரோ காங்கிரஸ் கட்சியை தூண்டுகிறார்களோ என தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியுடன் இணையும் கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடையும் என்பதால்தான் பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த பாரத்பந்தில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த 11 சதவிகித பணவீக்கத்தை, மோடியின் திறம் மிக்க ஆட்சியால் 4 சதவிகிதமாக குறைந்துள்ளது, மேலும் இது குறையும் எனவும் கூறியுள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டம், வதந்திகளையும், குழப்பத்தையும் பரப்புவதற்காக நடத்தப்படுவதாக மத்திய மந்திரி அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #MukhtarAbbasNaqvi
    அண்ணா சாலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. எதிர்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்களும் நடந்தன.

    சென்னை அண்ணா சாலையில் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூட்டத்தில் தங்க வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் கூறும்போது, மோடி ஆட்சியில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உற்பத்தி வரியையும், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியை குறைத்தாலே போதும். பெட்ரோல் விலையும் டீசல் விலையும் குறையும் என்றார்.

    முத்தரசன் கூறும்போது, ‘‘மத்திய-மாநில அரசுகள் பெட்ரோலிய பொருள்கள் மீதான வரியை குறைந்தாலே போதும்’’ என்றார்.

    காசிமேடு சிக்னல் அருகே மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.   #BharathBandh #PetrolDieselPriceHike

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் பஸ், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங் களில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த பந்த் போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே ஆதரவு தெரிவித்திருந்தன. ஆளும்கட்சியான அ.தி.மு.க. மட்டும பந்தை ஆதரிக்கவில்லை.

    இருப்பினும் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்ததால் தமிழகத்திலும் முழு அடைப்புக்கு பெருமளவு ஆதரவு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய முழு அடைப்பால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    சென்னையில் இன்று காலையில் வழக்கம் போல பஸ்-ஆட்டோக்கள் ஓடின. ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. தனியார் பள்ளி வேன்களும், வழக்கம் போல ஓடின. தமிழகம் முழுவதும் இதே நிலையே நீடித்தது.

    சென்னையில் 38 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து புறப்பட்ட அனைத்து பஸ்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன.



    கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. இதனால் மார்க்கெட்டில் உள்ள 2400 கடைகளும் இன்று திறக்கப்பட்டு இருந் தன. கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரையில் நள்ளிரவு 2.30 மணியில் இருந்தே பரபரப்பாக செயல்பட தொடங்கி விடும். அதே பரபரப்பு இன்று காணப்பட்டது. மார்க்கெட்டில் உள்ள காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் என அனைத்தும் திறந்து இருந்தன.

    பந்த் போராட்டத்திற்கு வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கடைகளை மூடி இருந்தனர்.

    விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பு முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை மாநகர் முழுவதும் முழு அடைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். துணை கமி‌ஷனர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு பணியை முடுக்கிவிட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



    தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

    த.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. எனினும் தமிழகத்தில் இந்த முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை.  லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் சுமார் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்குகின்றன. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு அலுவலகம் முன்பு  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையைப் பொருத்தவரையில் அரசு பஸ்களை தடையின்றி இயங்கும் வகையில் 38 டெப்போக்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. பணிக்கு வந்துள்ள தொழிலாளர்களை பொறுத்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையம், பிராட்வே பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பால் விற்பனை நிலையம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் இந்த முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் மருந்தகம், பால் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. #BharathBandh #PetrolDieselPriceHike
    பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து நடைபெறும் பாரத் பந்தை முன்னிட்டு பெங்களூருவில் பள்ளி, கல்லூரிக்கு நாளை விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. #BharatBandh #Bengaluru #PublicHoliday
    பெங்களூரு:

    பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.

    இதனால் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்த நிலையில் நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.66 ஆகவும், 11 காசுகள் அதிகரித்து டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.76.75 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வர்த்தகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.



    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக, மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து நடைபெறும் பாரத் பந்தை முன்னிட்டு பெங்களூருவில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #BharatBandh #Bengaluru #PublicHoliday
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பை ஆதரிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா தெரிவித்துள்ளார். #devegowda #petroldiesel #BharatBandh
    புதுடெல்லி:

    பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 
     
    சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்த நிலையில் நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.66 ஆகவும், 11 காசுகள் அதிகரித்து டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.76.75 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்புக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வர்த்தகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா இன்று மாலை தெரிவித்துள்ளார். #devegowda #petroldiesel  #BharatBandh 
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராடத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. #FuelPrice #BharatBandh #DMK #Stalin
    சென்னை:

    பெட்ரோல் - டீசல் விலையை தினசரி நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம் எண்ணை நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டது.

    அன்று முதல் பெட்ரோல் - டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.62 ஆகவும், டீசல் ரூ.75.61 ஆகவும் விற்கிறது.

    இதே நிலை நீடித்தால் விரைவில் லிட்டர் ரூ.100-ஐ எட்டிவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக விலைவாசி உயர்வும் ஏற்பட்டு வருகிறது.

    எனவே பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய உற்பத்தி வரியையும், மாநில வாட் வரியையும் குறைக்கவும் வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி ‘பந்தை’ வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

    பந்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. ஆட்சி யில், மக்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி எண்ணெய் நிறுவனங்களின் அபரிமிதமான லாப நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு, லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை வேகமாக நெருங்கி வருவது, மிகுந்த கவலையளிப்பதாகவும், வேதனையளிப்பதாகவும் இருக்கிறது.

    கச்சா எண்ணை விலை சர்வதேச சந்தையில் குறைந்த போதெல்லாம் அடுத்தடுத்து “கலால் வரி” விதித்து வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தீவிரமாக கவனம் செலுத்தியதே தவிர, மக்களின் வருவாய், வாங்கும் சக்தி ஆகியவற்றைப் பற்றி, எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.

    பா.ஜ.க.விற்குச் சாதக மான மாநிலங்களில் தேர்தல் வந்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் எண்ணெய் நிறுவனங்கள், தேர்தல் முடிந்ததும் மீண்டும் எவ்விதத் தடையுமின்றி தாராளமாக வி‌ஷம் போல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

    வரலாறு காணாத பெட்ரோல்-டீசல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவோ குறைக்கவோ, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தவோ, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வேதனைத் தீயில் வெந்து கருகிக் கொண்டிருக்கும் இந்திய மக்களை வீதியில் நின்று போராடும் நிலைக்கு இறக்கியிருப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குரிய அடிப்படை இலக்கணமாக அறவே இல்லை.

    ஆகவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சார்பில், செப்டம்பர் 10-ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய “பாரத் பந்திற்கு”, தி.மு.க. மனப்பூர்வமான ஆதரவினை நல்கி, அந்த பந்த் முழு அளவில் வெற்றி பெற ஆர்வத்துடன் பங்கேற்று, அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். பந்த் நடைபெறும் தேதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறு குறு வணிகர்கள், பொது போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்குத் தக்க பாடம் புகட்டிட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    வரலாறு காணாத அளவு பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. உலகின் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு விலை உயர்வு இல்லை. கச்சா எண்ணை விலை குறைந்து உள்ள நிலையில் லிட்டர் ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்க முடியும். ஆனால் மத்திய அரசு 2 மடங்கு விலையை உயர்த்தி மக்களின் பணத்தை பறிக்கிறது.

    இதை கண்டித்து அகில இந்திய அளவில் பாரத் பந்த் வருகிற 10-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும், வணிக அமைப்புகளும், பொதுமக்களும் முழு ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. மறைமுகமாக விலை உயர்வுக்கு வழி வகுக்கிறது. அகில இந்திய அளவில் மக்கள் பாதிக்கும் போது அகில இந்திய அளவிலான எதிர்க்கட்சி என்ற நிலையில் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    த.மா.கா.வை பொறுத்த வரை மக்களின் எண்ணங்களை என்றும் பிரதிபலிக்கும். அதன் அடிப்படையில் இந்த முழு அடைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்:-

    பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் தங்கள் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் மத்திய - மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.

    இதை கண்டித்து 10-ந் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த்துக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. வணிக பெருமக்கள், பொதுமக்கள் அனைவவரும் முழு ஆதரவு அளித்து முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    முழு அடைப்பு போராட்டம் பற்றி ஆலோசிப்பதற்காக இடது சாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நான், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மு. வீரபாண்டியன், சி.பி.ஐ.எம்.எல். சார்பில் குமார், குமரேஷ், எஸ்.யூ.சி.ஐ. (கம்யூனிஸ்டு) சார்பில் சிவகுமார், சுருளி ஆண்டவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து 10-ந்தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு இடது சாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இந்த பந்தை வெற்றிகரமாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கும் என்று திருமாவளவன் கூறினார்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது:-

    தொடர்ந்து நாள் தோறும் பெட்ரோ-டீசல் விலை உயர்வால் சாமானியர்கள், ஊழைக்கும் மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசின் தவறான பொருளாதார அணுகு முறையே இதற்கு காரணம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நல்ல முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி நடத்தும் முழு அடைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறது.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன்:-

    10-ந்தேதி நடைபெறும் பந்துக்கு முழு ஆதரவு. அனைத்து மக்களும் தங்கள் எதிர்ப்பை ஒட்டு மொத்தமாக தெரிவிக்கும் வகையில் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #PetrolDieselPrice #FuelPrice #BharatBandh #DMK
    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct
    புதுடெல்லி:

    எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

    வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்து இருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது.



    இந்த நிலையில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளன. உயர்ஜாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் டயர்களை சாலையில் கொளுத்திப்போட்டும், மரங்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பதற்றம் நிறைந்த 35 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிற்பகல் 2 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    உத்தரபிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பீகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் டெர்மினல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct

    ×