என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு"

    • திருப்பத்தில் செல்லும்போது, ​​பள்ளிப் பேருந்து எதிரே வந்துள்ளது.
    • ஆட்டோ ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றபோது இந்த விபத்தை ஓட்டுநர் ஏற்படுத்தியுள்ளார்

    பெங்களூருவின் தனிசந்திரா பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியதில், 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்டி ஆர்ம்டு ரிசர்வ் பிரிவில் காவலராகப் பணியாற்றும் நாகனாகவுடா என்பவர் நான்கு நாட்களுக்கு முன்புதான் ராய்ச்சூரில் இருந்து தனது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக மாமாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மகள் மற்றும் அண்ணன் மகளை அழைத்துக்கொண்டு கடைக்கு பால்வாங்கச் சென்றுள்ளார். அப்போது தனிசந்திரா காவல் குடியிருப்பு அருகே, திருப்பத்தில் செல்லும்போது, பள்ளிப் பேருந்து எதிரே வந்துள்ளது. இதனால் ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார் நாகனாகவுடா. ஆனால் பேருந்து ஓட்டுநர் ப்ரேக் போடாமல் அதேவேகத்தில் வந்து எதிரே நின்ற ஸ்கூட்டர்மீது மோதினார்.

    இதில் ஸ்கூட்டரில் முன்பகுதியில் நின்றுக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளும் பேருந்தின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தனர். மேலும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் முழுவதும் அருகிலுள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் நாகனகவுடாவுக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தொடர்ந்து ஹென்னூர் போக்குவரத்து போலீசார் பேருந்து ஓட்டுநர் மாரப்பாவை கைது செய்துள்ளனர். ஆட்டோ ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றபோது இந்த விபத்தை அவர் ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன், பல் மருத்துவரான தனது மனைவியுடன் வசித்து வந்தார்
    • தங்களால் அவ்வளவு பணத்தைத் தர முடியாது என்று கூறினர்.

    ஸ்டார்ட்அப் தொழிலுக்குப் பணம் தராததால் பெற்ற தாய் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரங்கேறி உள்ளது.

    பெங்களூரு விஞ்ஞான் நகர் பகுதியில் ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திர பட் (60), பல் டாக்டரான அவரது மனைவி ஷியாமளா பட் (55) உடன் வசித்து வந்தார்.

    இவர்களின் மகன் ரோகன் சந்திர பட் (33), அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு திரும்பினார்.

    பெங்களூருவிலேயே புதிதாக ஸ்டார்ட்அப் தொழில் தொடங்க விரும்பிய அவர் முதலீட்டைத் திரட்ட முடியாமல் இருந்த நிலையில் பெற்றோரிடம் நிதி உதவி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

    ஆனால் தங்களால் அவ்வளவு பணத்தைத் தர முடியாது என்று பெற்றோர் கூறியதால் ஆத்திரத்தில் இருந்த ரோகன், அவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    இதனால் சில காலத்திற்கு முன்பு ரோகன் சந்திர பட், வர்த்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று,  தாய், தந்தை வீட்டுக்கு சென்ற ரோகன் சந்திர பட், காலை 8 மணியளவில் அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், காயமடைந்த தம்பதியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ரோகன் சந்திர பட்-ஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மகள் ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார்.
    • குடும்பத்தினர் தடுத்தும் கேட்காத அந்தப் பெண், வருணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மைசூரு ரோடு பகுதியில் பிபிஏ பட்டதாரியான 23 வயது இளம்பெண் ஒருவர் தனது தாய் தந்தை மற்றும் இளைய சகோதரி உடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் 49 வயதுடைய அந்த தாய், தனது மூத்த மகள் மீது பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் போலீசாரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, வேலை தேடுவதற்காக கூறி, தனது தந்தையிடம் கேட்டு ஒரு ஸ்மார்ட்போனை அந்தப் பெண் வாங்கியுள்ளார்.

    ஒரு மாதத்திற்கு முன்பு, மகள் ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார். மகளின் மொபைல் போனை வாங்கிச் சோதித்தபோது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    தனது தாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது அந்தரங்க உறுப்புகளைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, வருண் என்ற நபருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

    மேலும், தனது தாயின் அக்கா (பெரியம்மா) குளித்துக்கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதே நபருக்கு அனுப்பியுள்ளார்.

    மொபைல் சாட்களை ஆராய்ந்தபோது வருண் என்ற அந்த நபரே இது போன்ற புகைப்படங்களை அனுப்புமாறு அப்பெண்ணைத் தூண்டியது தெரியவந்தது.

    குடும்பத்தினர் தடுத்தும் கேட்காத அந்தப் பெண், கடந்த வாரம் வருணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    இந்நிலையில் தனது மகள் குறித்தும், புகைப்படங்கள் குறித்தும் அச்சத்தில் இருந்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

    வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வருணையும், அப்பெண்ணையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • அந்தப் பெண் தனது திருமணப் பத்திரிகை மற்றும் திருமணப் புடவையை கிரணிடம் காட்டியுள்ளார்.
    • சம்பவத்தன்று மாலை தனது தாயிடம் பேப்பர் மற்றும் பேனா கேட்டு வாங்கி அறைக்குள் சென்றுள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் வசித்து வந்தவர் 26 வயது ஜிம் பயிற்சியாளர் கிரண்.

    பாடிபில்டரான இவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    கிரண் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். ஆனால், அந்தப் பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அந்தப் பெண் தனது திருமணப் பத்திரிகை மற்றும் திருமணப் புடவையை கிரணிடம் காட்டியுள்ளார். இதனால் கிரண் கடந்த இரண்டு வாரங்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கிரண் எழுதியுள்ள கடிதத்தில், தனது மரணத்திற்குத் தனது காதலியும் அவரது தாயாருமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கிரண் தனது காதலியின் கடன்களை அடைக்கத் தனது சம்பாத்தியத்தைச் செலவு செய்துள்ளதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    சம்பவத்தன்று மாலை தனது தாயிடம் பேப்பர் மற்றும் பேனா கேட்டு வாங்கி அறைக்குள் சென்றுள்ளார்.

    நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    கிரண் பல பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்றுள்ளார்.

    அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மகாலட்சுமி லேஅவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜெமிமா ரோட்ரிக்ஸின் மூன்றாவது அரைசதம்
    • மும்பை அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது

    மகளிர் ப்ரீமியர் லீக் 2026 தொடர் ஜன.9ஆம் தேதி தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், மற்றும் உ.பி.வாரியர்ஸ் என ஐந்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 22 லீக் சுற்றுகள் நடைபெற்றது.

    சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் டெல்லி மற்றும் குஜராத் மோதியது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி டெல்லி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.  

    இந்நிலையில் இன்று (பிப். 5 ) வதோதராவில் உள்ள பி.சி.ஏ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. லிசெல் லீ, சஃபாலி வர்மா 37, 20 ரன்கள் முறையே ஆட்டமிழக்க நான்காவதாக களமிறங்கிய அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பவுண்டரிகளாக அடித்து அரைசதம் கடந்து அணியின் ஸ்கோருக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்களில் ஆட்டமிழக்க அணி 16 ஓவரில் 148 ரன்களில் இருந்தது. இது இறுதிப்போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் மூன்றாவது அரைசதமாகும். அதனைத்தொடர்ந்து லாரா களமிறங்கினார். முதல் இரண்டு ஓவர்களில் பெரிதாக ஆடவில்லையென்றாலும், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸ்ர் என அதிரடி காட்டினார். கடைசி ஓவரில், கடைசிப் பந்தில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பெங்களூரு தரப்பில் சயாலி சத்காரே, அருந்ததி ரெட்டி, நதின் டெ கிளெர்க் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு பேட்டிங்கை தொடரும். இப்போட்டியில் ஒருவேளை டெல்லி வெற்றிப் பெற்றால் முதல்முறையாக தொடரை கைப்பற்றி, கோப்பையை வெல்லும். பெங்களூரு வெற்றிப் பெற்றால் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும். மும்பை அணி இரண்டு முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • லின்க்டுஇன் இன்னும் தயாராக இல்லை போலிருக்கிறது.
    • சிறந்த பொருட்களை கண்டறிய உதவி செய்கிறோம்.

    தொழில்முறை உலகில் தொடர்புகளை வளர்க்க, வேலை வாய்ப்புகளை தேட மற்றும் தொழில் சார்ந்த விவாதங்களில் ஈடுபட லின்க்டுஇன் (LinkedIn) தளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இப்போது, அந்த தளத்தில் மனிதர்கள் மட்டுமல்ல, ஒரு நான்கு கால் நண்பரும் கவனம் ஈர்த்துள்ளார்.

    பெங்களூருவைச் சேர்ந்த "ட்ரோகோ" என்ற காக்கர் ஸ்பேனியல் நாய், தனது தனித்துவமான லின்க்டுஇன் புரொஃபைல் மூலம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புரொஃபைலை உருவாக்கியவர், "thePack.in" என்ற செல்லப்பிராணி பராமரிப்பு கல்வி தளத்தின் நிறுவனர் ஷோபித் மொஹாந்தி.

    ட்ரோகோவின் லின்க்டுஇன் பயோவில், "Top dog at thePack.in" என்று பெருமையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமான தொழில்முறை வார்த்தைகள் இல்லாமல், மகிழ்ச்சியான புகைப்படமும் விளையாட்டுத்தனமான விளக்கங்களும் இந்த புரொஃபைலில் இடம்பெற்றுள்ளன.

    இந்த நிலையில், ட்ரோகோவின் புரொஃபைல் நேற்று முதல் லின்க்டுஇன் தளத்தில் ஷேடோ பேன் (shadow-ban) செய்யப்பட்டுள்ளதாக ஷோபித் மொஹாந்தி தெரிவித்துள்ளார். "தொழில்முறை நாய்களை தங்களின் தளத்தில் ஏற்க லின்க்டுஇன் இன்னும் தயாராக இல்லை போலிருக்கிறது," என்று அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

    மேலும், thePack.in தொடங்குவதற்கு ட்ரோகோவே தனது ஊக்கமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். "2020ஆம் ஆண்டு, பலர் நாய்களை வளர்க்க தொடங்கிய காலகட்டத்தில், பயிற்சியாளர்கள், நடத்தை நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், ஊட்டச்சத்து ஆலோசகர்கள் போன்றோரிடம் அணுகல் இல்லாததால் பலர் சிரமப்பட்டனர். அந்த குறையை சரி செய்யவே thePack தொடங்கப்பட்டது," என்றார்.

    இந்த சம்பவம், பெங்களூருவில் வளர்ந்து வரும் செல்லப்பிராணி நட்பு கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது. பல நிறுவனங்கள், பணியிடங்களில் செல்லப்பிராணிகளை அனுமதித்து, மனஅழுத்தத்தை குறைத்து, நட்பு சூழலை உருவாக்கி வருகின்றன. இதற்கிடையில், ஐதராபாத் நகரைச்சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், டென்பர் என்ற கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever) நாயை தனது தலைமை மகிழ்ச்சி அலுவலர் (Chief Happiness Officer-CHO) ஆக நியமித்த சம்பவமும் சமீபத்தில் கவனம் பெற்றது.

    • அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.
    • ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார்.

    பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கொரிய நாட்டு பெண்ணிடம் ஊழியர் அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கடந்த ஜனவரி 19-ஆம் தேதி, தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது நாட்டுக்குத் திரும்புவதற்காக விமான நிலையம் வந்திருந்தார்.

    இமிக்ரேஷன் சோதனைகளை முடித்துவிட்டு அவர் டெர்மினல் நோக்கிச் சென்றபோது ஏர் இந்தியா நிறுவனத்தின் தரைதள ஊழியராக பணிபுரியும் 25 வயது முகமது அபான் என்பவர் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

    அந்தப் பெண்ணின் பயணச்சீட்டைப் பரிசோதித்த ஊழியர், அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.

    மீண்டும் ஸ்கிரீனிங் கவுண்டருக்குச் சென்றால் விமானத்தைத் தவறவிட நேரிடும் என்றும், தான் தனியாகச் சோதனை செய்து அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.

    பின்னர் அந்தப் பெண்ணை ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். அந்தப் பெண் எதிர்த்தபோது அவரைக் கட்டிப்பிடித்து தேங்க் யூ என்று கூறிவிட்டு ஊழியர் அங்கிருந்து நழுவி உள்ளார்.

    அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்தார்.

    சிசிடிவி காட்சிகளைப் ஆராய்ந்ததில் அந்த ஊழியரின் தவறான நடத்தை உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, போலீசார் முகமது அபானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • இந்த சம்பவம் காரின் கேமராவில் பதிவாகியுள்ளது
    • இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை கத்தியை காட்டி இளைஞர் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    காரின் கேமராவில் பதிவான இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், காரில் உள்ள நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் ஏன் எங்களை திட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு கோவமான அந்த இளைஞர் பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு காரின் அருகே வந்து பாக்கெட்டில் உள்ளே இருந்த கத்தியை எடுத்து சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் சையத் அர்பாஸ் கான் என்று அவர் ஒரு மீன் கடையில் வேலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், "பெங்களூரு நகரக் காவல்துறை, சாலையில் மோசமாக நடந்து கொள்வதையோ அல்லது பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடத்தைக்கோ பொறுத்துக்கொள்ளாது. வன்முறைச் செயல்கள், ஆயுதங்களைக் காண்பித்தல், மிரட்டல்கள் அல்லது பொது இடங்களில் அநாகரிகமான நடத்தை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது அமைதியைப் பேணுவதற்கும், பெங்களூரு நகரக் காவல்துறை சாலையில் மோசமாக நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும், பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும், சட்டத்திற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்திய சந்தையில் டெஸ்லா தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
    • குருகிராமில் 3 ஆவது டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட்டது.

    உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.

    கடந்தாண்டு மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த ஒரு மாதத்திற்குள், தேசிய தலைநகர் டெல்லியில் தனது இரண்டாவது ஷோரூமை டெஸ்லா திறந்தது. அடுத்ததாக குருகிராமில் 3 ஆவது ஷோரூம் திறக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி, மும்பையை தொடர்ந்து பெங்களூருவில் ஷோரூம் திறப்பதாக டெஸ்லா நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

    • ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.
    • இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பணி முடித்து வீடு திரும்பிய பெண் மருத்துவரை நபர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏஜிபி லேஅவுட்பகுதியில், நள்ளிரவில் வேலை முடிந்து விடுதிக்குத் நடந்து சென்று கொண்டிருந்த 28 வயது பெண் மருத்துவரிடம் ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.

    பின்னர் மருத்துவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார். மருத்துவர் சத்தமிடவே, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சோலதேவனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  

    • இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
    • இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.

    அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.

    அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.

    ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது. 

    குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  

    • 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    • பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா பகுதியில் உள்ள கோகிலு லேஅவுட், பக்கீர் காலனி மற்றும் வசீம் லேஅவுட் ஆகிய பகுதிகளில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

    இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், "வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் புல்டோசர் கலாச்சாரம் இப்போது தென்னிந்தியாவிலும், அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல்" என்று விமர்சித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்து டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் கள நிலவரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் குப்பை கிடங்கு மற்றும் கல் குவாரி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவை. அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றது மற்றும் சுகாதார சீர்கேடு நிறைந்தது.

    நில மாஃபியாக்கள் இது போன்ற குடிசைப்பகுதிகளை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். பெங்களூருவை மும்பை போல குடிசை நகரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    கேரளாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற பினராயி விஜயன் அரசியல் நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே இந்த நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தகுதியுள்ளவர்களுக்கு ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. 

    ×