என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம்.
- நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலை சந்தித்தது. இதில் கெஜ்ரிவால் கட்சியால் 22 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால் 10 வருடத்திற்கு மேலாக டெல்லியில் 10 ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் அரசு முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி இதை மறுத்தது.
அதேவேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாஸ் விகாஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டு பேசிய கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரே இன்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
அரசுகள் வரும் போகும். ஆனால் உறவுகள் தொடரும். நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம். நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை. அதேபோல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
ஆதித்யா தாக்கரே உடன் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்கள் கெஜ்ரிவால் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது டெலலி தேர்தல் மற்றும் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அரிவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ராகுல் காந்தியையும் ஆதித்யா தாக்கரே சந்தித்து பேசினார்.
- அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் நான் உள்பட அனைவருக்கும் தாழ்வுதான்.
- அ.தி.மு.க. ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார்.
தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் நான் உள்பட அனைவருக்கும் தாழ்வுதான்.
அ.தி.மு.க. யாரால் உருவாக்கி நிறுவி காப்பாற்றப்பட்டது என்பதை மனசாட்சியுடன் எடப்பாடி பழனிசாமி நினைக்க வேண்டும்.
கழக சட்ட விதிப்படி ஜெயலலிதா கட்சியை நடத்தினார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்கள் ஏற்பின் மூலமே பொதுச் செயலாளர் தேர்வு இருக்க வேண்டும் என்ற விதியை யாரும் மாற்ற முடியாது. ஜெயலலிதா அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார். எந்த சட்டத்தை திருத்தக் கூடாது என்று இருந்ததோ அந்த விதியை மீறி எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.
அ.தி.மு.க. ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார். அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததன் விளைவுதான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இல்லையென்றால் ஆட்சிக்கு வந்திருப்போம்.
அ.தி.மு.க. ஒன்றிணைந்துவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதுதான் நல்லது என்ற மனப்பான்மையோடு தான் நான் இருக்கிறேன்.
எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம்.
டெல்லியில் நிலைமை என்ன ஆனது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ளது. பாரத பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் எதை விரும்புகிறார்களோ அதை அடிப்படை அ.தி.மு.க.வினர் செய்து காட்டுவார்கள்.
திராவிட கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.
- நிலவுக்கு மனிதனை அனுப்பும் ராக்கெட்டும் கடந்த ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது.
- நிலவில் மனிதன் அமர்ந்து செல்லும் வாகனமும் (ரோவர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பீஜிங்:
விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சீனா, நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதற்கான முயற்சியில் அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
2030-ம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனித வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலவுக்கு செல்லும் மனிதன் அணியும் உடையை சீன விண்வெளி மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உடைக்கு வாங் யு என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் நிலவில் மனிதன் அமர்ந்து செல்லும் வாகனமும் (ரோவர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு டான்சுவோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பெயர்கள் 9 ஆயிரம் பேரிடம் கருத்துகள் பெற்று சூட்டப்பட்டதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலைவனத்தில் நிலவை போன்ற தன்மையை செயற்கையாக உருவாக்கி அங்கு இவ்வாகனம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது விண்வெளி உடை மற்றும் ரோவரின் முன்மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன, மேலும் ஆராய்ச்சி பணிகள் சீராக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சீன விண்வெளி மையத்தின் ஆராய்ச்சியாளரான ஜாங் வான்ஸ் கூறும்போது, நிலவில் தரையிறங்கும் விண்வெளி உடைகள் கச்சிதமாகவும், இலகுவாகவும் இருக்கும். நிலவின் மேற்பரப்பில் கடுமையான சூழலைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்றார்.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் ராக்கெட்டும் கடந்த ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்லில் கை வைப்பதற்கு கூட அண்ணாமலையால் முடியாது.
- பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க கலகலத்து போயுள்ளது.
* தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது.
* தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது.
* 2026 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டம் தான் ஈரோடு கிழக்கு வெற்றி
* கருத்துக்கணிப்புகளில் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுவது கண்கூடாக தெரிகிறது.
* இப்போது தேர்தல் வைத்தாலும் திமுக கூட்டணி வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
* எதிரிகள் ஒன்று சேர்ந்தாலும் எங்களுடைய வாக்கு வங்கியை வீழ்த்த முடியாது.
* எதிரிகளே இல்லை என்று திமுக அரசு என்றுமே சொல்லவில்லை. எதிரிகளுக்கும் வாக்கு வங்கியுள்ளது என்றே சொல்கிறோம்.
* அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்து நம்பிக்கை இழந்து வருகிறது.
* சில சம்பவங்களை மிகைப்படுத்தி கூறினாலும் மக்கள் தமிழகத்தில் மகிழ்ச்சியாக உள்ளது தெளிவாகிறது.
* ஆட்சியில் தவறுகள் தெரியவந்தால் உடனுக்குடன் முதலமைச்சர் சரிசெய்து வருகிறார்.
* ஆட்சியில் உள்ளோர் மீது குற்றம்சாட்டுவது இயல்புதான். ஆனால் முதலமைச்சர் மக்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறார்.
* செங்கோட்டையன் அதிமுகவின் சீனியர்தானே அதனால்தான் அவ்வாறு பேசியுள்ளார்.
* அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்லில் கை வைப்பதற்கு கூட அண்ணாமலையால் முடியாது.
* பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
- சிவலிங்கம் அருகே மாமிசத்துண்டு ஒன்று இருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
- பாஜக கட்சியினர் இப்பிரச்னையை கையில் எடுத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தப்பாசபுத்ரா பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. கடந்த 11ம் தேதி இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டு ஒன்று இருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, கோவில் கமிட்டி உறுப்பினர்களுக்கு இதை பற்றி தெரிவித்துள்ளார்.
கோவிலுக்குள் இறைச்சி துண்டு இருந்ததாக பரவிய செய்தியை கேட்டதும் பாஜக கட்சியினர் இப்பிரச்சனையைக் கையில் எடுத்தனர். இதனால் அபபகுதியில் மதரீதியான பிரச்சனை எழுமா என பொதுமக்கள் அஞ்சினர்.
இதனையடுத்து, சிவ லிங்கம் சிலை அருகே மாமிசத்துண்டு எப்படி வந்தது எனக் கண்டறிவதற்காக 4 குழுக்கள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கோவில் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, இது ஒரு பூனையின் வேலை எனத் தெரியவந்தது. இறைச்சி துண்டை கோவிலுக்கு உள்ளே பூனை எடுத்துச் சென்றது சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்தது.
- இனியாவது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
- அரசு நிர்வாகம் திட்டமிட்டு அறுவடை எந்திர தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். 505 வாக்குறுதிகளில் 328 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக முதலமைச்சர் பொய் சொல்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 3.5 லட்சம் வேலைவாய்ப்புகள் நிறைவேற்றப்படும். மாணவர்களின் கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படும். சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்பட்டு அவை நேரலை செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடை 13 சதவீதம் உயர்த்த முடிவெடுத்துள்ளது. தெலுங்கானாவில் இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த இடதுக்கீடு 66 சதவீதமாக உயரும். இதற்கான சட்ட முன் வரைவு வரும் மார்ச் மாதம் கொண்டுவர உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இனியாவது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
புதிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமான பி அண்டு சி பள்ளியை திறக்க தமிழக அரசு மறுத்துவிட்டதால் ரூ.2,151 கோடி தொகையை மத்திய அரசு வழங்க மறுத்து விட்டது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கிட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.
காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்பட கூட்டம் நடத்தவேண்டும். கோதாவரி ஆற்றிலிருந்து 1100 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி.தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளது. அரசு நிர்வாகம் திட்டமிட்டு அறுவடை எந்திர தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 39 ஆயிரத்து 393 களப்பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். இரண்டாம் நிலை காவலர்கள் 7 ஆண்டுகளில் முதல்நிலை காவலர்களாகவும் 10 ஆண்டுகளில் தலைமை காவலராகவும், 20ஆண்டுகளில் சிறப்பு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அடுத்த நிதிநிலை அறிக்கையில் பதவி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
15-ந்தேதி: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு பேசியுள்ளார்.
இந்த சந்திப்பானது சென்னையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. கமல்ஹாசன் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்ததாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:- மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியிருந்தார். இதனை தொடர்ந்து, தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- இந்திய ராணுவத்தில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் தரப்பில் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
- இந்த சம்பவம் இந்தாண்டின் இது முதல் போர்நிறுத்த மீறல் ஆகும்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் தரப்பில் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று தகவல் தெரியவவில்லை. இந்த சம்பவம் இந்தாண்டின் இது முதல் போர்நிறுத்த மீறல் ஆகும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் 2021 பிப்ரவரியில் தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பித்தன. இதன் பின்னர் போர்நிறுத்த மீறல் நடைபெறுவது வெகுவாக குறைந்தது
சில நாட்களுக்கு முன்பு ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ஒரு கேப்டன் உட்பட இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வயநாட்டில் கடந்த டிசம்பர் 27 முதல் வனவிலங்குகளால் 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
- இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய , மாநில அரசுகள் வயநாடு தொகுதிக்கு நிதி அனுப்ப வேண்டும்.
புதுடெல்லி:
கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலத்தில் கடலோரம் மற்றும் வனப் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தினர்.
வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி இதுகுறித்து கூறும்போது 'வயநாட்டில் கடந்த டிசம்பர் 27 முதல் வனவிலங்குகளால் 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது . இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய , மாநில அரசுகள் வயநாடு தொகுதிக்கு நிதி அனுப்ப வேண்டும். இந்தப் பிரச்சனையை மக்களவையில் இன்று எழுப்புவேன்' என்றார்.
- இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
- ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் பார்க்கின்ற பொழுது, தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் தொடங்கி, நீதிக் கட்சி பரிணாம வளர்ச்சியில் திராவிட இயக்கம் தந்தை பெரியார் தலைமையில் தொடர்ந்து, தேர்தல் அரசியல் என்கிற அடிப்படையிலே பேரறிஞர் அண்ணா கொட்டுகிற மழையில் ராவிட்சன் பூங்காவிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் உருவாக்கினார்.
அதனைத் தொடர்ந்து அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கேள்விக்குறியான திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த மிகப்பெரிய பங்கு வகித்த புரட்சித்தலைவர், ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாய மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தர மக்களையும் வாழ்வில் ஒளியேற்ற 1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார்.
அப்போது அவர் சந்தித்த விமர்சனம், அவமானங்களை எல்லாம் தூள், தூளாக்கி மன வலிமையோடு, மக்கள் பேராதரோடு ஆட்சியை அமைத்தார். எம்.ஜி.ஆர். இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதா இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பினையும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்ற பொறுப்பையும் ஏற்றார்.
அத்தனை வேதனைகளையும், கஷ்டங்களையும் தனதாக்கிக் கொண்டு, ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி, மூன்றாம் பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். எங்களைப் போன்ற சாமானிய தொண்டர்களை எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக உருவாக்கி சேவை செய்யும் அரிய வாய்ப்பினை அளித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவிடு, பொடியாக்கி அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.
இன்றைக்கு தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார்.
அ.தி.மு.க. என்று சொன்னாலே சோதனையை சந்தித்த இயக்கம். அ.தி.மு.க. என்று சொன்னாலே அது எல்லோருடைய கண் திருஷ்டி பெற்று சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றிய இயக்கம். இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், அ.தி.மு.க.வை அசைத்துப் பார்க்க முடியாது. எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அ.தி.மு.க.வுக்கு எந்த சேதாரமும் இல்லை, இது மக்களால் பாதுகாக்கப்படுகிற இயக்கம்.
ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனால் தற்போது அ.தி.மு.க.வில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதில் கூறும் வகையில் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளதாக கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.
- என்ன நடந்தாலும் ரசிகர்கள் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
- ரஜத்துடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.
ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆர்சிபியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். ஆர்சிபி அணியில் நீங்கள் விளையாடிய விதம், வளர்ந்து வந்த விதம் எல்லாம் உங்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள ஆர்சிபி ரசிகர்கள் உங்களது விளையாட்டை ரசித்துள்ளார்கள்.
உங்களுக்கு உதவியாக நான் உள்பட ஆர்சிபி வீரர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். இது மிகப்பெரிய பொறுப்பு. நான் இதைப் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளேன். ஃபாப் டு பிளெஸ்ஸி கடந்த சில வருடங்கள் செய்துள்ளார். தற்போது, இந்தப் பொறுப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது கவுரமாக கருதுகிறேன். உங்களுக்காக மகிழ்கிறேன் ரஜத். சரியான இடத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் நீங்கள் வலுவடைவீர்கள் என நம்புகிறேன்.
கடந்த சில வருடங்களாக ரஜத் ஒரு வீரராக சிறப்பாக முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கும் விளையாடியுள்ளார். அவரது பேட்டிங் தரம் பல மடங்கு முன்னேறியுள்ளது. மாநில அணியையும் நன்றாக வழிநடத்தியுள்ளார்.
ரஜத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் நல்லதாக நடக்க ரஜத்துக்கு வாழ்த்துகள்.
என்ன நடந்தாலும் ரசிகர்கள் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு அணியாக நாம் அவருடன் இருக்க வேண்டும். ரஜத்துடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.
என விராட் கோலி கூறியுள்ளார்.






