என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்.
- கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து மத்திய அரசு வழங்க வேண்டும்.
சென்னை அடையாற்று மேம்பாலம் அருகே மெட்ரோ பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தலைவர் கலைஞர் முதலமைச்சராகவும் - நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன.
முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம்.
2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி– போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும்.
மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்!
நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
- தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.
'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான மாயா மாயா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்தது.
- மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்துடன் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 440 மில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தம் போட்டது. ஆனால் சந்தை விலையைவிட 70 சதவீதம் அதிக விலைக்கு வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்வதாக, அனுர குமார திசா நாயக தலைமையிலான இலங்கை அரசு கடந்த மாதம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இந்த நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "இலங்கையின் RE காற்றாலை மின்சார திட்டம் மற்றும் இரண்டு மின் பரிமாற்ற திட்டங்கள் ஆகிவற்றில் இருந்து விலகுகிறோம் என்ற முடிவை உயர்மட்ட குழுவால் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அரசு விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்பிற்காக தயாராக இருக்கிறோம் என்பதில் தொடர்ந்து உறுதி பூண்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.
அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்திற்கு மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
- ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் இரண்டாம் பாடலான Celebration Of Death வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை.
- பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி.
அரசுப் பேருந்துகளில் அதிக மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், அரசுப் பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் அரசுப்பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு அதிக அளவில் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- ஹொண்டா மோட்டார் நிறுவனம், நிசான் மோட்டார் நிறுவனமும் வணிக ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிப்பு.
- இரு நிறுவனங்களும் தாங்களும் இணைவது குறித்து பரிசீலனை செய்வதாக மிட்சுபிஷி தெரிவித்திருந்தது.
ஜப்பானின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹோண்டா, நிசான், மிட்சுபிஷி ஆகியவை வணிகத்தில் ஒருங்கிணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்த நிலையில், இந்த பேச்சுவார்த்தையை கைவிட்டுள்ளன.
ஹொண்டா மோட்டார் நிறுவனம், நிசான் மோட்டார் நிறுவனமும் கடந்த டிசம்பர் மாதம் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தது.
ஹோண்டா, நிசான் நிறுவனத்துடன் நாங்களும் தாங்களும் இணைவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தை கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
- பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு சில நாட்களாக வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலிற்கு தலைப்பு ரங்கம்மா என வைத்துள்ளனர். இப்பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சாண்டி மாஸ்டர் மற்ரும் ரியோ இணைந்து ஆடியுள்ளனர். இப்பாடலை தெருகுரல் அறிவு பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சியை இழந்தது.
- பாஜக ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அதிஷி குற்றச்சாட்டு.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை (10 வருடங்கள்) ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சியால் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இதனால் டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளது. தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், முதல்வராக இருந்த அதிஷி கடந்த 9-ந்தேதி தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் வழங்கினார்.
இந்த நிலையில ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து விலகிய 3 நாட்களுக்குள் டெல்லியில் பல்வேறு நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. டெல்லியை உ.பி.யாக மாற்ற பாஜக விரும்புகிறது என அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்த நிலையில் டெல்லி மின்தடையை எதிர்கொண்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் பலமணி நேரம் மின்தடையை எதிர்கொண்டு வருகிறது. பாஜக டெல்லியை உத்தர பிரதேசம் போன்று மாற்ற விரும்புகிறது.
40-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள மக்கள் தற்போது இன்வெர்ட்டர்களை வாங்க தொடங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி அரசின் கீழ், மின்சாரத்துறை தொடர்ந்து கவனித்து வந்த நிலையில், பாஜக வெற்றி பெற்ற 3 நாட்களிலேயே சீர்குலைந்து விட்டது.
எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது பாஜக-வுக்கு தெரியாது. உத்தர பிரதேசம் போன்று டெல்லியில் நீண்ட நேர மின்தடை சூழ்நிலையை பாஜக உருவாக்கும்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. 8-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் அடுத்த முதல்வர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் புதிய முதல்வர் பதவி ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
- சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
- 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி 2 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
- கூட்டுக்குழுவின் அறிக்கை ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
- மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
வக்பு மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கூட்டுக்குழுவின் அறிக்கை ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய வருமான வரி மசோதாவை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரந்துரைத்தார்.
வருமான வரி சட்டமானது வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
நிதி அமைச்சரின் பரிந்துரையை தொடர்ந்து நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மக்களவை மார்ச் 10ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?
- த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.
* எடப்பாடியார் நல்லதை செய்வார். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆட்சியை 2026-ல் கொண்டு வரப்போகிறார்.
* எடப்பாடியார் செல்வாக்கு கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த செல்வாக்கை மறைப்பதற்காக ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
* வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?
* இந்த ஆட்சியில் எங்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கவில்லை. கேட்காத ஒருத்தருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள்.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை.
* முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.
* உறுதியாக, இறுதியாக எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலரும். அவர் தலைமையில் அ.தி.மு.க. மலரும் என்று கூறினார்.
- நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம்.
- நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலை சந்தித்தது. இதில் கெஜ்ரிவால் கட்சியால் 22 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால் 10 வருடத்திற்கு மேலாக டெல்லியில் 10 ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் அரசு முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி இதை மறுத்தது.
அதேவேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாஸ் விகாஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டு பேசிய கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரே இன்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
அரசுகள் வரும் போகும். ஆனால் உறவுகள் தொடரும். நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம். நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை. அதேபோல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
ஆதித்யா தாக்கரே உடன் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்கள் கெஜ்ரிவால் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது டெலலி தேர்தல் மற்றும் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அரிவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ராகுல் காந்தியையும் ஆதித்யா தாக்கரே சந்தித்து பேசினார்.






