என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
    • ஐ.பி.எஸ். அதிகாரியால் பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது.

    திமுக ஆட்சியில் பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும்,

    திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,

    தூத்துக்குடியில் பள்ளி மாணவி சமையல் பணியாளரால் பாலியல் தொலைக்கு ஆளானதாகவும்,

    தர்மபுரி அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்திற்கும் கடும் கண்டத்திற்கும் உரியது.

    அதிலும், வேலியே பயிரை மேய்ந்தாற்போல், மாணவிகள் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும், பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய காவல்துறையிலேயே ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியால் பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது.

    தான் நடத்தும் அலங்கோலத்தை புகழ்வது மட்டுமல்ல; இதை "ஆட்சி" என்று சொல்வதற்கே மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

    நான் எதற்கு "SayYesToWomenSafety&AIADMK" என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளேன் என்பதை இன்றைய செய்திகளே தெளிவாக்கிவிட்டன.

    இந்த ஆட்சி முடிவுக்கு வந்து, மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதே, தமிழ்நாடு மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறுவதற்கு ஒரே வழி..!

    மேற்குறிப்பிட்டுள்ள பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
    • இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களுடன் அவர்களது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல அனுமதி கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐயின் புதிய பயணக் கொள்கை இந்தப் போட்டியுடன் முதல் முறையாக அமலுக்கு வருகிறது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    • தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் க.அண்ணாதுரை எம்.எல்.ஏ., அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
    • நீலகிரி மாவட்ட கழகக் செயலாளராக பணியாற்றி வரும் பா.மு. முபாரக் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

    ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள்- மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தஞ்சை தெற்கு, நீலகிரி, திருநெல்வேலி மத்திய, திருவள்ளூர் கிழக்கு ஆகிய மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனத்து திமுக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் க. அண்ணாதுரை எம்.எல்.ஏ., அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக பழனிவேல் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரான நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    நீலகிரி மாவட்ட கழகக் செயலாளராக பணியாற்றி வரும் பா.மு. முபாரக் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக கே.எம். ராஜு நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக பணியாற்றி வரும் டி.பி.எம். மைதீன்கான் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக மு. அப்துல்வகாப் எம்.எல்.ஏ, திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வரும் டி.ஜெ.எஸ். கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்குப் பதிலாக எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் திருவள்ளூர் கழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • கிஸ் படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்
    • இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு கிஸ் என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது .படத்தின் டீசர் நாளை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்பொழுது வெளியிட்ட போஸ்டரில் சர்ச்சில் கதாநாயகி பிராத்தனை செய்துக்கொண்டு இருக்கும்போது கவின் ஓரக்கண்ணால் அவரை பார்க்கும் காட்சி அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதை தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன்.
    • 2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது.

    2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிடிவி தினகரன் அறித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதை தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன்.

    உறுதியாகவே 2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது. இது நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவின் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இயக்கமாக இருக்கிறது.

    அதனால், அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் திரள்வதன் மூலம் மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அவசியம்.

    திமுகவை ஜெயிக்க வேண்டும் என்றால் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

    அது With or without எடப்பாடி பழனிசாமி என்பதை அதிமுக தொண்டர்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா உள்பட 3 அணிகளுக்கு பயிற்சி போட்டி இல்லை.
    • பாகிஸ்தான் உள்பட 5 அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடவில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய 5 அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர்.

    இந்தியா ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருவதால், பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதேபோல ஆஸ்திரேலியாவும் தற்போது இலங்கையுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருவதால் அந்த அணியும் பயிற்சி போட்டியில் விளையாடவில்லை.

    பிப்ரவரி 16-ந் தேதி நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதுகின்றனர். பாகிஸ்தான் அணி பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் என்ற பெயரில் 3 அணிகளாக களமிறங்குகிறது.

    அதன்படி 14-ந் தேதி நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதாப் கான் தலைமையில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் களமிறங்குகிறது. அதனை தொடர்ந்து 17-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முகமது ஹுரைராவும், துபாயில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முகமது ஹாரிஸ் கேப்டனாக செயல்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

    • அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன் முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அமைச்சர் ராஜ கண்ணப்படன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    தமிழக அமைச்சரவையில் சிறிய அளவில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கான துறைகள் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன் முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி மற்றும் கிராம தொழில்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் ராஜ கண்ணப்படன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    • 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.
    • இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியதால் சிக்கல் ஏற்பட்டது.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி வருகிற சனிக்கிழமை பிணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

    அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

    தற்போதுவரை ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 21 பேரை விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காசாவில் இன்னும் 76 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் நம்புகிறது.

    ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை வரும் சனிக்கிழமை (நாளைமறுதினம்) விடுதலை செய்ய வேண்டும்.

    ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறிவிட்டதாகவும், ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே பணய கைதிகளை விடுதலை செய்வோம் என்றும் ஹமாஸ் அமைப்பினர் திடீரென மிரட்டல் விடுத்தனர். மேலும், சனிக்கிழமை பணயக் கைதிகள் விடுவிக்கமாட்டோம் என ஹமாஸ் தெரிவித்தது.

    அதேவேளை, வரும் சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லையென்றால் காசாவில் நரகம் வெடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு மதிப்பு கிடையாது என்று ஹமாஸ் தெரிவித்தது. இது தொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இரு தரப்புக்கும் இடையே (இஸ்ரேல், ஹமாஸ்) போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தை இரு தரப்பும் மதிக்க வேண்டும் என்பதை டிரம்ப் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். டிரம்பின் மிரட்டல் மொழிக்கு மதிப்பு கிடையாது. இந்த மிரட்டல் ஒப்பந்தத்தை மேலும் சிக்கலாக்கும்" எனக் கூறியிருந்தார்.

    தற்போதைய 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கால அவகாசம் மார்ச் மாத முதல் வாரம் வரை உள்ளது. ஆனால் சனிக்கிழமை ஹமாஸ் பணயக் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்றால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீண்டும் காசா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில்தான் திட்டமிட்டபடி பணயக் கைதிகள் வரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பு "எகிப்து மற்றும் கத்தார் ஆகிய மத்தியஸ்தர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் வகையில் அனைத்து தடைகளையும் விலக்குவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என உறுதி அளித்துள்ளனர். இதனால் சனிக்கிழமை பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இது வெளிப்படையாக மிகப்பெரிய பிரச்சனையை தீர்க்கும்" எனத் தெரிவித்துள்ளது.

    6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், போர் நிறுத்தம் நீடிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஒருவேளை போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வில்லை என்றால் மீண்டும் காசா மீது இஸ்ரேல தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளது.

    • சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
    • இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலின் அப்டேட்டை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடலை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடல் சூர்யா சிரையில் அவரது காதலியை நினைத்து பாடுவதுப்போல் காட்சிகள் அமைந்துள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாபர் அசாம் சமீப காலமாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்.
    • தற்போது நடைபெறும் முத்தரப்பு தொடரிலும் பாபர் அசாம் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம். அவர் சமீப காலங்களாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இதனால் ஒரு டெஸ்ட் தொடரில் அவர் அணியில் இடம் பெறவில்லை. அதனை தொடர்ந்து பின்னர் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து விளையாடினார். ஒரு சில போட்டிகளில் மட்டுமே அரை சதம் கடந்தார்.

    மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். தற்போது முத்தரப்பு தொடரிலும் அவர் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக 10 ரன்னிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 23 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் தன்னை கிங் என அழைக்காதீர்கள் எனவும் தான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை எனவும் பாபர் அசாம் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தயவுசெய்து என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். நான் கிங் இல்லை. நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை. இப்போது எனக்கு புதிய ரோல் உள்ளன. நான் கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை பார்க்க வேண்டும்.

    என பாபர் அசாம் கூறினார்.

    பாபர் அசாம் கடைசியாக ஆகஸ்ட் 30, 2023 அன்று முல்தானில் நேபாளத்திற்கு எதிராக சர்வதேச சதம் (131 பந்துகளில் 151 ரன்கள்) விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவர் பாலாஜி முருகதாஸ்.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் தற்பொழுது ஃபயர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார்.

    இப்படம் 2020 ஆம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. காசி என்பவர் காம பித்து பிடித்தவன். பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து அதை படம் பிடித்து அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு குணமுடையவன்.

    இக்கதாப்பாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். இவருடன் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்திரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை ஜேஎஸ்கே பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் கதாநாயகனாக காசியை தேடி போலீஸ் அதிகாரிகள் தேடி கொண்டு இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்.
    • கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து மத்திய அரசு வழங்க வேண்டும்.

    சென்னை அடையாற்று மேம்பாலம் அருகே மெட்ரோ பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தலைவர் கலைஞர் முதலமைச்சராகவும் - நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன.

    முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம்.

    2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி– போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும்.

    மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்!

    நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×