என் மலர்
தலைப்புச்செய்திகள்
- யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.
- இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றிப்பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
சுவாமி வீதி உலா நடைபெற்றதை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம் இடையே திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
இதைக்கண்ட பக்தர்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். யானைகளைக் கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றனர். யானைகள் இடையிலான மோதலில் கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்நிலையில், யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் டைந்தனர்.
தகவலறிந்து வந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் பலியானோர் உடல்களைக் கைப்பற்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெர்மனியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கார் பாய்ந்தது.
- இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
முனீச்:
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடக்கிறது. இதற்காக உலக தலைவர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், முனீச்சில் கூட்டத்தில் வேகமாக புகுந்த கார் மோதியதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது பாய்ந்தது. இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்த போலீசார் கார் ஓட்டி வந்த 24 வயது நபரை கைதுசெய்தனர். விசாரணையில், அவர் ஆப்கனைச் சேர்ந்த அகதி என தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்து பேசினார்.
வாஷிங்டன்:
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர், அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டை சந்தித்துப் பேசினார். அப்போது பயங்கரவாதம் , பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்து, பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், எக்ஸ் வலைதளம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்கும் திட்டம் மற்றும் இந்தியாவில் இருந்து மின்சார வாகனங்களுக்கான பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ள சூழலில் அதுபற்றி விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த மோடி, சான் ஜோஸ் நகரில் எலான் மஸ்க்கை சந்தித்ததுடன் அவரது டெஸ்லா நிறுவனத்தை சுற்றிப் பார்த்தார்.
இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 6-ம் இடம் பிடித்தவரும், அமெரிக்க வீராங்கனையுமான ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் 4-6 என முதல் செட்டை இழந்த அலெக்சாண்ட்ரோவா அடுத்த இரு செட்களை 6-1, 6-1 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார்.
- டொனால்டு டிரம்ப் அறிவிப்பார் வர்த்த போர் தொடங்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அச்சம்.
"அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள் ("MAKE AMERICA GREAT AGAIN)" என்ற முழக்கத்துடன் டொனால்டு டிரம்ப் அமெரிக்க தேர்தலை மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த 20-ந்தேதி அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா, சீனா நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்தார். இதனால் வர்த்தக போர் உருவாகும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஒரு மாத காலத்திற்கு வரி விதிப்பை நிறுத்தி வைக்க உத்தரவிட்டள்ளார்.
ஆனால் கூடுதல் வரி விதிப்பில் இருந்து பின்வாங்கபோவதில்லை என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் புதிய பரஸ்பர வரி விதிப்பை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் Truth சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மூன்று சிறந்த வாரங்கள். ஒருவேளை இதுவரை இல்லாத வகையில் சிறந்த இருக்கலாம். ஆனால் இன்று மிகப்பெரியது: பரஸ்பர வரிவிதிப்பு (RECIPROCAL TARIFFS). அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரதமர் மோடியை சந்திக்கும் முன்னதாக இது தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவும் உள்ளார்.
- படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வீடியோவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
- காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் STR49 ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது டான் பிக்சர்ஸ் நிறுவனம்.
இந்நிறுவனம் 4வது படமாக நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படத்தை இயக்குகிறது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும்.
இந்நிலையில், அதர்வா நடிக்கும் இந்த படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்த படத்திற்கு இதயம் முரளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வீடியோவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உலகத்தில் பெஸ்ட் லவ்வர் ரோமியோவோ, மஜ்னுவோ, அம்பிகாபதியோ... ஏன் டைட்டானிக் ஜாக் கூட இல்ல... நம்ம இதயம் முரளி தான்டா என்ற வசனம் உள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் நட்டி நட்ராஜ், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, ரக்ஷன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மணிப்பூர் முதல்வராக இருந்த பைரன் சிங் ராஜினாமா செய்த நிலையில், மாற்று முதல்வரை பாஜக தேர்வு செய்யவில்லை.
- மணிப்பூர் முதல்வராக இருந்த பைரன் சிங் ராஜினாமா செய்த நிலையில், மாற்று முதல்வரை பாஜக தேர்வு செய்யவில்லை.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இடையில் சற்று ஓய்ந்த கலவரம் ஆயுதமேந்திய போராட்ட குழுக்களால் கடந்த வருட இறுதியில் மீண்டும் தீவிரமடைந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாகின.
இந்நிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின. இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்ததால் கடந்த வருட இறுதியில் மீண்டும் கலவரம் மூண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குகி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், தனது முதல்வர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்தார்.
பைரன் சிங்கிற்கு மாற்று முதல்வரை பாஜக தேர்வு செய்யாமல் இருந்தது. சட்டசபையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், புதிதான தேரதல் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.
"குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, சிபிஐ(எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்காக நிற்கும். மேலும் மாநிலத்தை உடைக்கும் எந்தவொரு முயற்சியும் அனுமதிக்கப்படாது" என மணிப்பூர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சாந்தா தெரிவித்துள்ளார்.
- துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள்.
- அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது.
உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள வழக்கின் விசாரணை தொடர்பாக உண்மைக்கு புறம்பாக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில் கூறயப்பட்டுள்ளதாவது:-
உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள அதன் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு நாளிதழ் கொண்ட பார்வையின் போர்வையில், இன்று தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
நமது நாட்டின் நான்காவது தூண், தனக்குப் பிடிக்காதவர்கள் மீது வண்ணமய விமர்சனங்களைச் சுமத்துவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பதற்கு காரணமான நமது துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள்.
இருப்பினும், அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து முற்றிலும் பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது.
தமிழ்நாட்டு மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எடப்பாடியாருக்கு மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.
- ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவிடு, பொடியாக்கி அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.
இன்றைக்கு தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார்.
ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆர்.பி.உதயகுமாரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஓ.பி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே...
நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்...
இன்று - மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி பழனிச்சாமி...
நாளை யாரோ...? என்ன விளையாட்டு இது...?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.
- புதிய முதல்வரை தேர்வு செய்து பாஜக அறிவிக்காத நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
இரு பழங்குடியினர் சமூகத்தினர் இடையே நடந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியாததால் 9ம் தேதி பைரன் சிங் ராஜினாமா செய்தார்.
புதிய முதல்வரை தேர்வு செய்து பாஜக அறிவிக்காத நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- காதலை இரு வீட்டாரும் ஏற்காததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி.
- காதலி உயிரிழந்த நிலையில், ரஜத் குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷிப் பண்ட். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி டெல்லியில் இருந்து டேராடூனுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளாகி எரியத் தொடங்கியது.
அதிகாலை நேரத்தில் கார் எரிந்து கொண்டிருப்பதை கண்ட ரஜத் குமார் மற்றும் அவரது நண்பர் நிஷு உடனடியாக காரில் சிக்கிக் கொண்டிருந்த நபரை மீட்டனர். அப்போதுதான் அது ரிஷிப் பண்ட் என அவர்களுக்கு தெரியவந்தது.
படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய ரிஷப் பண்ட்-ஐ உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவினர். துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து மீட்டதால் ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஜத் குமார் மற்றும் அவரது நண்பர் நிஷு ஆகியோருக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் ரஜத்தின் காதல் விவகாரத்தில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. 25 வயதான ரஜத் 21 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வெறு பிரிவினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்னதாக இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் ரஜத் காதலியை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்த்த நிலையில், காதலியின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல குறியாக இருந்தனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காதலி உயிரிழந்த நிலையில் ரஜத்தை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். ரஜத்தை ரிஷப் பண்ட் இன்னும் ஒரிரு நாட்களில் நேரில் சென்ற பார்க்க வாய்ப்புள்ளதாக, ரிஷப் பண்டின் தனிப்பட்ட உதவியாளரை மேற்கோள் காட்டி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நட்சத்திர கிரிக்கெட் வீரரை காப்பாற்றி அந்த பகுதியில் ஹீரோவாக வலம் வந்த ரஜத்தின் காதல் வெற்றி பெறாத நிலையில் காதலி உயிரிழந்ததை சம்பவம் அப்பகுதி மக்களுக்கு வேதளையளித்துள்ளது.
- திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
- ஐ.பி.எஸ். அதிகாரியால் பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது.
திமுக ஆட்சியில் பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,
தூத்துக்குடியில் பள்ளி மாணவி சமையல் பணியாளரால் பாலியல் தொலைக்கு ஆளானதாகவும்,
தர்மபுரி அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்திற்கும் கடும் கண்டத்திற்கும் உரியது.
அதிலும், வேலியே பயிரை மேய்ந்தாற்போல், மாணவிகள் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும், பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய காவல்துறையிலேயே ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியால் பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது.
தான் நடத்தும் அலங்கோலத்தை புகழ்வது மட்டுமல்ல; இதை "ஆட்சி" என்று சொல்வதற்கே மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.
நான் எதற்கு "SayYesToWomenSafety&AIADMK" என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளேன் என்பதை இன்றைய செய்திகளே தெளிவாக்கிவிட்டன.
இந்த ஆட்சி முடிவுக்கு வந்து, மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதே, தமிழ்நாடு மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறுவதற்கு ஒரே வழி..!
மேற்குறிப்பிட்டுள்ள பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






