என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.
    • எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதாக முன்னாள் முதலமைச் சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் அறிவித்தனர்.

    தொகுதி பங்கீடு குறித்து இதுவரையில் வெளிப்படையான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர்.

    தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஒரு வாரத்தில் 2 முறை சுற்றுப் பயணம் செய்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜனதாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

    இந்நிலையில் பா.ஜனதா தொகுதி பங்கீடு குழுவினர் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனை விரைவில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர். பா.ஜ.க. விடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 10 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளனர். அதே போல் டி.டி.வி. தினகரன் தரப்பிலும் 10 தொகுதிகள் கேட்கின்றனர்.

    கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகிய இருவருக்கும் சேர்ந்து பா.ஜ.க. 10 தொகுதிகளை ஒதுக்க முன் வருவதாக தெரிகிறது. அதை இருவரும் சமமாக தலா 5 தொகுதிகள் வீதம் பிரித்து கொள்ளும்படி கூறி உள்ளனர்.

    இது குறித்த பேச்சு வார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகள் கேட்கப்படுகிறது என்ற விவரம் வருமாறு:-

    1.தேனி-ப.ரவீந்திர நாத்குமார், 2. ஸ்ரீபெரும்புதூர், 3.திருச்சி, 4.மதுரை, 5.சிவகங்கை, 6.தஞ்சை, 7.வட சென்னை, 8.காஞ்சிபுரம், 9.கிருஷ்ணகிரி, 10.கோவை

    அ.ம.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள்: 1.ராமநாதபுரம், 2.திருநெல்வேலி, 3.திருச்சி, 4.தென்சென்னை, 5.வேலூர், 6.நீலகிரி, 7.நாகப்பட்டிணம், 8.விழுப்புரம், 9.திண்டுக்கல், 10.திருவள்ளூர்

    தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனும் தனி சின்னத்தில் நிற்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.

    • ஜி.யு.போப் பற்றி கவர்னர் தேவையற்ற கருத்தை கூறி உள்ளார்.
    • அதிமுகவோடு வந்தால் எம்.பி.யாக வெற்றி பெற்று டெல்லி செல்லலாம்.

    சென்னை:

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜி.யு.போப் பற்றி கவர்னர் தேவையற்ற கருத்தை கூறி உள்ளார்.

    அதிமுகவின் போராட்டத்தை திசை திருப்பவே கவர்னர் அவ்வாறு பேசி உள்ளார்.

    திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உறவு இருப்பது கவர்னர் பேச்சு மூலம் நிரூபணமாகிறது.

    31 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்.

    அதிமுகவோடு வந்தால் எம்.பி.யாக வெற்றி பெற்று டெல்லி செல்லலாம் என்று கூறினார்.

    • ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.
    • சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இதன் அருகே ரெயில்வே கேட் உள்ளது.

    இன்று காலை 9.30 மணியளவில் வேப்பம்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திறந்து இருந்த இந்த ரெயில்வேகேட்டை தாண்டி செல்ல முயன்றது.

    ரெயில்வே கேட்டில் தண்டவாளப்பகுதியில் சென்ற போது திடீரென லாரி பழுதாகி நின்றது. லாரியை மேலும் இயக்க முடியாததால் தண்டவாளத்திலேயே நின்றது.

    இதனால் அவ்வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.

    தொடர்ந்து சென்னைகடற்கரை-திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர்-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரெயில்கள் வந்து கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை அங்கிருந்து அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் இருந்த லாரியை தள்ளி வெளியேற்றினர். இதன் பின்னரே ரெயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு பின்னர் ரெயில் சேவை சீரானது. இதனால் ரெயில்பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில்வே கேட்டில் லாரி பழுதாகி நின்றதும் உடனடியாக ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • தோப்பூர் பக்கமே போகாமல் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்றதை நாடு பார்த்தது.
    • பாராளுமன்ற தேர்தலுக்காக நடத்துகின்ற ஒரு நாடகம் என்பதை நாடு அறியும்.

    மதுரை:

    எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கியது தொடர்பாக மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    எய்ம்ஸ் கட்டுமான பணியை ரகசிய திட்டத்தை போல மத்திய அரசு தொடங்கி உள்ளது. கடந்த வாரம் பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். அப்போது அவரே இதனை தொடங்கி வைத்திருக்கலாம். ஆனால் உண்மை சுடும். எனவே தோப்பூர் பக்கமே போகாமல் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்றதை நாடு பார்த்தது. ஒரு திட்டத்தினுடைய அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் தொடங்குவதற்கு இடையில் 5 ஆண்டுகள் உருண்டோடிய புதிய வரலாற்றை பா.ஜ.க. ஆட்சியில் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இந்த செயல் வெளிப்படையாக பாராளுமன்ற தேர்தலுக்காக நடத்துகின்ற ஒரு நாடகம் என்பதை நாடு அறியும். பொறியியல் துறையை மட்டும் வைத்து தற்போது பணியை தொடங்கி உள்ளார்கள். 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அந்த ஆண்டு ஜனவரி மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. இதற்காக மார்ச் மாதத்தில் திட்டப் பணியை தொடங்கி உள்ளார்கள். இவை அனைத்தும் தேர்தலுக்காக மக்களை திசை திருப்புகிற நாடகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.
    • கமல்ஹாசன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடம் உண்டா? தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என்பது பற்றிய பேச்சு வார்த்தை இன்னும் நடைபெறாமலேயே உள்ளது. கோவை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது .

    இந்நிலையில் அந்த தொகுதியை ஏற்கனவே வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதால் அதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டு கமல் படப்பிடிப்புக் காக வெளி நாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் தொகுதி உடன்பாடு இன்னும் ஏற்படாததால் அவரது வெளிநாட்டு பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் 7-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும் சிக்கல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளார். தி.மு.க. கூட்டணி தொகுதி உடன்பாட்டில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் கமல்ஹாசன் நடத்தும் இந்த ஆலோசனை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுகிறது.
    • தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என ஒவ்வொன்றுக்கும் குழு அமைத்து கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் அந்தக் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுகிறது.

    இதனால் காங்கிரசார் தேர்தல் வேலையை தொடங்கி விட்டனர். இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ப தால் அதற்கான பணிகளிலும் காங்கிரசார் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., டெல்லி சென்று திரும்பியதும் தேர்தல் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று அவர் குமரி மாவட்டம் வந்தார்.

    அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாகர்கோவிலில் பெண்களுக்கான நீதி-நாங்கள் தயார் என்ற தலைப்பில் நடந்த மகளிர் மாநாட்டிலும் பங்கேற்று பேசினார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. இந்த கூட்டத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிக்காக எவ்வாறு செயல்படுவது, மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது போன்றவை குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.

    மேலும் விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் போன்றவை குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்தார்.

    முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி கடற்கரை சாலைகள் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காமராஜர் மணிமண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள காமராஜரின் மார்பளவு வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.
    • 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு முழுவதும் தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    முன்னாள் மாவட்ட வன அலுவலர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பேராசிரியர்கள் அசோக், கீர்த்திவாசன், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, வனத்துறை அலுவலர்கள் ரஞ்சித், இளஞ்செழியன் ஆகியோருடன் தன்னார்வலர்கள், மாணவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.

    இந்த கணக்கெடுப்பில் குமரிப்புறா, மாங்குயில், கதிர்குருவி, அரசவால் ஈப்பிடிப்பான் ஆகிய இப்பகுதிக்கான சிறப்பு அரிய வகை பறவைகள், மயில், மாடப்புறா, மணிப்புறா, செண்பகம், சுடலைகுயில், பொன்முதுகு மரங்கொத்தி உள்பட 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 

    • ஜாபர் சாதிக்கை பிடிக்க அதிரடி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
    • ஜாபர் சாதிக் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    சென்னை:

    டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும் அரசியல் பிரமுகருமான ஜாபர் சாதிக் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியில் இருந்து சூட்டோ பெட்டரின் என்கிற போதைப்பொருளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு தனது உணவு பொருள் ஏற்றுமதி குடோனில் இருந்து ஜாபர் சாதிக் அனுப்பி வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருட்களை அனுப்பி வைத்திருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இதை தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்தனர். ஆனால் வீட்டை பூட்டி விட்டு ஜாபர் சாதிக் தலைமறைவானார். இருப்பினும் பூட்டை உடைத்து அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

    ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஜாபர் சாதிக்கின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதன் அடிப்படையில் ஜாபர் சாதிக்கை பிடிக்க அதிரடி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. சினிமா வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் தனது பண பலத்தால் ஜாபர் சாதிக் ஏராளமான நண்பர்களை சம்பாதித்து உள்ளார். தமிழ் சினிமா டைரக்டர் ஒருவருடன் கை கோர்த்துக்கொண்டு செயல்பட்ட ஜாபர் சாதிக் அவரை பங்குதாரராக ஆக்கி தொழில்களையும் செய்து வந்துள்ளார்.

    இதே போன்று தி.மு.க. அயலக அணியில் பொறுப்பு வாங்குவதற்கும் அரசியல் நண்பர்கள் பலரும் உதவி செய்துள்ளனர். இப்படி சினிமா மற்றும் அரசியலில் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ள அதிகாரிகள் அடுத்தகட்டமாக சம்மன் அனுப்பி நேரில் வரவழைக்க உள்ளனர். இப்படி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்துவதன் மூலமாக ஜாபர் சாதிக் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஜாபர் சாதிக் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லியில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளான முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக்குமார் ஆகியோர் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் ஜாபர் சாதிக் மிகப் பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

    இதற்கிடையே ஜாபர் சாதிக் பலமுறை கென்யா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். ஜாபர் சாதிக்குடன் அவரது நண்பர்கள் பலரும் கென்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கென்யாவில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை சந்திப்பதற்காக ஜாபர் சாதிக் அங்கு சென்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் கென்யா பயணத்தின் பின்னணி குறித்தும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முழுதையான விசாரணையில் இறங்கி உள்ளனர். இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது.
    • கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாக பெய்தது.

    இதனால் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகியது.

    மீதமுள்ள வயல்களில் நெற்கதிர்கள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் பணிகளும் ஒருசில இடங்களில் ஆரம்பித்து உள்ளன.

    பொதுவாக அறுவடை காலகட்டங்களில் 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல்லின் விலை ரூ.800 வரையிலும் குறைந்துவிடும் நிலையில், தற்போது நெல் சாகுபடி பரப்பு குறைந்தது காரணமாகவும், அரசின் கொள்முதல் விலை உயர்வு காரணமாகவும் ரூ.1,300 வரை விற்பனையாகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே பருவ மழைக்கு பின்னர் நடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பயிர் பிடிக்கும் கால கட்டத்தில் இருந்து வருகிறது.

    அவைகளுக்காக இந்த மாதம் 31-ந்தேதி வரை நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாப நாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் அணைகளில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,504 கனஅடி நீர் வெளியறே்றப்படும் நிலையில், 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 95 அடியாக குறைந்துள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் இன்றைய நிலவரப்படி 81.89 அடி நீர் இருப்பு உள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 475 கனஅடி நீர் திறந்து விடப்படு கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.92 அடியாகவும் குறைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத் திலும் கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 46.70 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 61.25 அடியாகவும் குறைந்துள்ளது. கருப்பாநதி நீர்மட்டம் 50.86 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 27 அடியாகவும் உள்ளது.

    இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவி களும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது. அப்பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
    • கருத்து கேட்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தொடங்கி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் தேதி அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 3-வது தடவையாக வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    பிரதமர் மோடி இந்த தடவை 2014 மற்றும் 2019 -ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். குறிப்பாக 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதை அவர் இலக்காக வைத்து நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் இலக்கை நிறைவேற்றும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் மிக கவனமுடன் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் 195 பேர் இடம் பெற்றுள்ளனர்.


    அந்த பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இராணி, சபாநாயகர் ஓம்பிர்லா உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் அந்த பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை (புதன்கிழமை) டெல்லியில் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 2-வது பட்டியலில் இடம் பெறும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வெற்றி வாய்ப்புள்ள பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பா.ஜ.க. பிரமுகர்களுக்கு இந்த 2-வது பட்டியலில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக டெல்லி மேலிட தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேட்பாளர்களை பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறு டெல்லி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றி நேற்று சென்னையில் தமிழக பா.ஜனதா மையக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து தொகுதிக்கும் உத்தேச வேட்பாளர்கள் பெயர்களை தயார் செய்தனர்.

    இந்த பட்டியல் நாளை (6-ந்தேதி) டெல்லி தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று மையக்குழு உறுப்பினர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கூறினார். இதற்கிடையில் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி நிர்வாகிகளிடமும் யாரை வேட்பாளராக போடலாம் என்று கருத்து கேட்டு பட்டியலை தயாரித்து தரும்படி கட்சி மேலிடம் கேட்டுள்ளது.


    கருத்து கேட்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டனர். யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து கேட்டு பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் மண்டல தலைவர்கள், மண்டல பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில அணிகள், பிரிவுகளின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

    வடசென்னையில் முன்னாள் எம்.பி., கே.பி. ராமலிங்கம், கராத்தே தியாக ராஜன் ஆகியோரும், தென்சென்னையில் மத்திய மந்திரி முருகன், ஏ.பி.முருகானந்தம் ஆகியோரும் மத்திய சென்னையில் டாக்டர் கனகசபாபதி, முன்னாள் மேயர் கார்த்தியாயினி ஆகியோரும் கருத்து கேட்டனர். இதேபோல் திருவள்ளூர் தொகுதியில் சதீஷ்குமாரும், ஸ்ரீபெரும்புதூரில் அரவிந்த் மேனன், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத் ஆகியோரும் கருத்து கேட்டனர். காஞ்சிபுரம் தொகுதியில் எம்.முருகானந்தம், ஆர்.சி.பால்கனகராஜ், அரக்கோ ணத்தில் பாலகணபதி, சந்திரன் ஆகியோரும் கருத்து கேட்டார்கள்.


    இந்த கருத்து கேட்பின் போது, "நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. அந்த படிவத்தில் பாராளுமன்ற தொகுதி பெயர், மாவட்டம், கருத்து சொல்லும் நிர்வாகியின் பெயரை பூர்த்தி செய்து 3 வேட்பாளர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி பூர்த்தி செய்ய வேண்டும். அந்த படிவத்தில் கையெழுத்திட்டு கருத்து கேட்பு குழுவிடம் வழங்க வேண்டும்.

    இந்த படிவங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு தொகுதி வாரியாக நிர்வாகிகளின் ஆதரவின் அடிப்படையில் மூன்று வேட்பாளர்கள் பெயர் தயார் செய்யப்படும். இந்த பட்டியலும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    டெல்லியில் நடக்கும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து வந்துள்ள பட்டியலை மூத்த தலைவர்கள் ஆய்வு செய்வார்கள். 39 தொகுதிகளில் குறிப்பிட்ட 12 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்த பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

    அந்த தொகுதிகளில் வேட்பாளர்களாக யார்-யாரை தேர்வு செய்யலாம் என்பது நாளைய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. இது போல மற்ற மாநிலங்களிலும் வேட்பாளர்களை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

    நாளை பா.ஜ.க.வின் அந்த 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் தகவல்களும் இடம் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனு மார்ச் 1-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

    2019 தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருப்ப மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில்,

    * தூத்துக்குடி தொகுதியில் 5 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன்.

    * மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு உள்ளேன்.

    * மறுபடியும் அங்கு பணியாற்ற வாய்ப்பு கேட்டு உள்ளேன்.

    * வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை தெரிவிப்பேன் என்று கூறினார்.

    • வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
    • ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரும் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளிடம் அதிகாரிகள் பிளாஸ்டிக் சோதனை என்ற பெயரில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சினையில் அதிகாரிகள் பாரபட்சம் பார்க்க கூடாது.

    ஊட்டி மார்க்கெட்டில் தற்போது கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் இங்கு பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வருபவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க அவர்களுக்கு முறையான மாற்று இடம் அளிக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு ஒரு நியாயம், வியாபாரிகளுக்கு ஒரு நியாயமா என்று தெரியவில்லை. ஆவின் பாலை மாற்று முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் வியாபாரிகளை அரசு அதிகாரிகள் துன்புறுத்தி வந்தால், மண்டலம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    ஊட்டி மார்க்கெட்டில், தற்காலிக கடைகள் கட்டுவதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்த நீலகிரி எம்பிக்கு நன்றி. அதேபோல், மார்க்கெட் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×