search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: அணைகளில் குறையும் நீர்மட்டம்
    X

    கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: அணைகளில் குறையும் நீர்மட்டம்

    • குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது.
    • கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாக பெய்தது.

    இதனால் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகியது.

    மீதமுள்ள வயல்களில் நெற்கதிர்கள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் பணிகளும் ஒருசில இடங்களில் ஆரம்பித்து உள்ளன.

    பொதுவாக அறுவடை காலகட்டங்களில் 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல்லின் விலை ரூ.800 வரையிலும் குறைந்துவிடும் நிலையில், தற்போது நெல் சாகுபடி பரப்பு குறைந்தது காரணமாகவும், அரசின் கொள்முதல் விலை உயர்வு காரணமாகவும் ரூ.1,300 வரை விற்பனையாகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே பருவ மழைக்கு பின்னர் நடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பயிர் பிடிக்கும் கால கட்டத்தில் இருந்து வருகிறது.

    அவைகளுக்காக இந்த மாதம் 31-ந்தேதி வரை நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாப நாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் அணைகளில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,504 கனஅடி நீர் வெளியறே்றப்படும் நிலையில், 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 95 அடியாக குறைந்துள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் இன்றைய நிலவரப்படி 81.89 அடி நீர் இருப்பு உள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 475 கனஅடி நீர் திறந்து விடப்படு கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.92 அடியாகவும் குறைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத் திலும் கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 46.70 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 61.25 அடியாகவும் குறைந்துள்ளது. கருப்பாநதி நீர்மட்டம் 50.86 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 27 அடியாகவும் உள்ளது.

    இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவி களும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது. அப்பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    Next Story
    ×