search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Constituency Distribution"

    • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.
    • கமல்ஹாசன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடம் உண்டா? தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என்பது பற்றிய பேச்சு வார்த்தை இன்னும் நடைபெறாமலேயே உள்ளது. கோவை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது .

    இந்நிலையில் அந்த தொகுதியை ஏற்கனவே வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதால் அதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டு கமல் படப்பிடிப்புக் காக வெளி நாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் தொகுதி உடன்பாடு இன்னும் ஏற்படாததால் அவரது வெளிநாட்டு பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் 7-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும் சிக்கல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளார். தி.மு.க. கூட்டணி தொகுதி உடன்பாட்டில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் கமல்ஹாசன் நடத்தும் இந்த ஆலோசனை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.
    • தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைவதால், 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றன.

    அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கேரள மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது மட்டுமின்றி, தங்களது கூட்ட ணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் வயநாடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, பாலக்காடு, திருச்சூர், ஆலத்தூர், காசர்கோடு ஆகிய 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, மீதமுள்ள 5 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

    காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், த.மு.மு.க. தலைவர் குஞ்சாலிக்குட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனக்காடு சயீத் சாதிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி இரு கட்சி தலைவர்களும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை திருப்தி கரமாக இருந்ததாக கூறி யுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    அதுபற்றி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறும்போது, ராஜ்யசபா சீட் காலியாகும்போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏற்க தயாராக இருந்தால், அதை அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார். தங்களது தொகுதி பங்கீடு முடிவுகளை நாளை (27-நதேதி) அறிவிப்போம் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

    • பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
    • கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கு கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், இரா. விசுவநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி வி. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், டாக்டர் மு. தம்பிதுரை, கே.ஏ. செங்கோட்டையன், என். தளவாய்சுந்தரம், செல்லூர் கே. ராஜூ, ப. தனபால், கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், எஸ். கோகுல இந்திரா, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், டாக்டர் சி. விஜய பாஸ்கர், கடம்பூர் சி. ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் பி. வேணு கோபால், டாக்டர் வி.பி.பி. பரமசிவம், ஐ.எஸ். இன்பதுரை, எஸ். அப்துல் ரஹீம், வி.வி.ஆர். ராஜ் சத்யன், வி.எம். ராஜலெட்சுமி இடம் பெற்றுள்ளனர்.

    இவர்களுக்கு, கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    ×