என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
- பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம்
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.
அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அலைமோதியதால் 100 கட்டணம் மற்றும் இலவச தரிசனம் வரிசையில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்த வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
தற்போது கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் அமருவதற்கு போதிய இட வசதிகள் இல்லாததினால் பக்தர்கள் தரிசன வரிசை பகுதியில் மற்றும் நடைபாதைகளில் அமர்ந்திருந்து ஓய்வு எடுத்தனர்.
- கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிபடியாக சரிந்து வருகிறது.
- நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சேலம்:
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில் மோதல் இருந்து வருகிறது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிபடியாக சரிந்து வருகிறது.
இதனால் வழக்கமாக நடப்பாண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடகு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த அணை மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 12,867 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று 92.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 94.40 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
இந்த அணையில் இருந்து 507 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் கேரள மாநிலம் வயநாட்டை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து 9,179 கன அடியாக உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இன்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 1,250 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் மேகதாது வழியாக கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு வருகிறது. இன்று காலை பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 1500 கன அடியாக உள்ளது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1500 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43 கன அடியில் இருந்து 227 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் 8 மணி அளவில் அணை நீர்மட்டம் 39.75 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 11.96 டி.எம்.சி.யாக உள்ளது.
- மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
- குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
நெல்லை:
நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை பெய்யவில்லை. எனினும் 2 நாட்களாக பெய்த மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 102.95 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து116.53 அடியாகவும் உள்ளது.
மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்த வண்ணனம் உள்ளது. இதனால் அங்குள்ள ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. காலையில் இருந்து வெயில் அடித்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாததால் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனினும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
அணைகளை பொறுத்த வரை குண்டாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது. கடனா அணை 60.30 அடியாகவும், ராமநதி அணை 76 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 93.25 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. விவசாயிகள் கார் பருவ சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது.
- குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும்.
சென்னை:
சைதாப்பேட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அந்த சிறுவனின் சகோதரிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க ரூ.1000 லஞ்சம் கொடுத்ததாக அந்த சிறுமியின் தந்தை தெரிவித்த தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது கூறியதாவது:-
எழும்பூர் ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டார்கள் என்பது முற்றிலும் தவறா னது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற ரூ.1000 டெபாசிட் வாங்கப்படும். அதன் பிறகு பரிசோதனைகள் தேவைப் பட்டால் அதற்கும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது.
இது எல்லா மாநிலங்களி லும் நடைமுறையில் இருப் பதுதான். இந்த உண்மையை உணராமல் திரித்து சொல் வது வேதனை அளிக்கிறது. இந்த மாதிரி தவறான குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். அரசு ஆஸ்பத்திரி கள் நமது ஆஸ்பத்திரி. அவை சிறப்பாக நடக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
சைதாப்பேட்டை சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்க வில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொழிலாளர் முகாமில் 625 குடும்பங்கள் வசிக்கிறது. மொத்தம் 1300 பேர் இருக்கிறார்கள். வேறு யாருக்கும் உடல்நல பாதிப்பு இல்லை என்பதை வீடு வீடாக சென்று சோதனை நடத்தி கண்டறியப்பட்டு உள்ளது. சிறுமி உயிரிழந்த தற்கு காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அருணாச்சலப்பிரதேசத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அருணாச்சலப்பிரதேசத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பலியான புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (வயது 45). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நகராட்சி முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் புஷ்பநாதன் புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், புஷ்பநாதனை வழிமறித்தனா்.
இதனால் பதறிய அவர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓட முயன்றார். அதற்குள் மா்மநபர்கள் அவரை மடக்கி அாிவாளால் நடுரோட்டில் வைத்து வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
பின்னர் மர்மநபர்கள், தாங்கள் வந்தமோட்டாா் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு புஷ்பநாதன் விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்தவர்களிடம் போலீசாா் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து பலியான புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க. நிா்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை எதிரே ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள், புஷ்பநாதனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உள்கட்சி பிரச்சனையில் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கொலை செய்யப்பட்ட புஷ்பநாதனுக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டரா? அல்லது புஷ்பநாதன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாார்கள்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படையும், இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் காரணமாக வண்டிப்பாளையம் மற்றும் கடலூர் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
- தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை:
நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய மாநில போலீசாரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழகத்திலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்ப் உத் தக்ரீர்' என்கிற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக யூடியூப்பில் பிரசாரம் செய்து ஆட்களை திரட்டியதாக சென்னையில் கடந்த மே மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்தபோதுதான் சென்னையில் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஹமீது உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் யூடியூப் சேனல் வழியாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஹமீது உசேனின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக, இருந்த மேலும் 3 பேரும் கைதானார்கள்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்களை திரட்டியது அம்பலமானது.
கடந்த மாதம் 26-ந்தேதி சென்னை போலீசார் இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உள்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் ராயப்பேட்டை, முடிச்சூர் ஆகிய 2 இடங்களில் இன்று காலை 5.30 மணியில் இருந்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் மின் வாரிய காலனியில் கபீர் அகமது என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்று தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.
தஞ்சை குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 4 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும், சாலியமங்கலத்தில் அப்துல்காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன் ஆகிய 3 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு அப்துல் காதரின் மகன் அப்துல் ரஹ்மான் இல்லாததால் அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
அவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருப்பதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்கள். அப்துல் ரஹ்மானிடமும் விசாரணை நடத்தினர். பின்பு அவரை தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு பெரியார் நகர் கருப்பண்ணசாமி வீதியில் முகமது இசாக் என்பவர் வீட்டில் கொச்சியில் இருந்து வந்திருந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6-வது வீதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் வீட்டிலும் இன்று காலை சென்னையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த என்.ஐ.ஏ. சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
- இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பை-ஐ முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி!
- இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது!
சென்னை:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007-ம் ஆண்டில் முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை டோனியின் தலைமையில் வென்று இருந்தது. 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வெல்வது இது 2-வது முறையாகும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
எங்கள் இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பை-ஐ முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி!
நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,
17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
டி20 உலகக்கோப்பை 2024 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. தலைசிறந்த டெத் ஓவர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் அற்புதமானது. தொடக்கம் முதலே சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது. வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் எதிராக முரண்பாடுகள் இருந்தபோது, அணி கைவிடவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றியது. இறுதியில் ஒரு மூச்சடைக்க கேட்ச் வெற்றியை உறுதிப்படுத்தியது!
தொடர் முழுக்க சாம்பியன்களை போன்றே விளையாடினார்கள், இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to #TeamIndia for putting up an incredible fight to win the T20 Cricket World Cup. Our champion team truly deserves this ICC trophy.#T20WorldCup2024 pic.twitter.com/EdpC9ifpFf
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 29, 2024
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அற்புதமாக விளையாடி வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த ஐசிசி கோப்பையை வெல்வதற்கு நம்முடைய சாம்பியன் அணி முழு தகுதி பெற்றிருப்பது என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்,
கடும் நெருக்கடிகளை கடந்து ஆட்டத்தை வென்றெடுத்து இறுதியில் உலக கோப்பையை உறுதி செய்துள்ளது இந்திய அணி!
மதம்-இனம் கடந்து இந்திய நாட்டிற்காக வியர்வை சிந்தி விளையாடி கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர் சிந்தியுள்ளனர் இந்திய வீரர்கள்!
இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது! என்று தெரிவித்துள்ளார்.
- ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை:
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில், இந்திய ரெயில்வே துறைக்கான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கும் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மின்சார ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், சுற்றுலாவுக்கான ரெயில் பெட்டிகள் மற்றும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியன் ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐ.சி.எப். தொழிற்சாலை ஒவ்வொரு ஆண்டும் அதன் தயாரிப்பின் தரத்தை மேம்படுத்தி வருகிறது. ஐ.சி.எப். தொழிற்சாலையில் 1957-58-ம் காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 74 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வந்தே பாரத் ரெயில், டெமு ரெயில், அதிவேக விபத்து மீட்பு ரெயில், சொகுசு ரெயிலான மகாராஜா விரைவு ரெயில் என பல்வேறு வடிவமைப்பிலான ரெயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஐ.சி.எப். இந்திய ரெயில்வே துறைக்கான 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி தயாரித்து சாதனைப்படைத்து உள்ளது. நிறுவனம் தொடங்கிய 68 ஆண்டுகளில், 75 ஆயிரம் ரெயில் பெட்டிகள் என்பது பெருமைமிகு சாதனை என்று இந்திய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இதில், 875 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளும் அடங்கும். ஐ.சி.எப். உருவாக்கிய 75 ஆயிரமாவது ரெயில் பெட்டியை ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பராவ், நேற்று பார்வையிட்டு, ரெயில் பெட்டியை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்த 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி, 69-வது வந்தே பாரத் ரெயிலுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதுவரை, ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 75 ஆயிரம் பெட்டிகளில் 752 வந்தே பாரத் ரெயில் பெட்டி, 12 வந்தே மெட்ரோ ரெயில் பெட்டி, 6 ஆயிரத்து 895 எல்.எச்.பி. குளிர்சாதன பெட்டிகளும், 8 ஆயிரத்து 152 சாதாரண எல்.எச்.பி. பெட்டிகளும் அடங்கும். மேலும், ஐ.சி.எப். தொழிற்சாலை தொடங்கியது முதல் 1955-2015-ம் ஆண்டு வரையில் 49 ஆயிரத்து 588 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆண்டு முதல் தற்போது வரையில் 25 ஆயிரத்து 412 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி.
மீனம்பாக்கம்:
டெல்லியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை-டெல்லி இடையே தினமும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 22 விமானங்கள் இயக்கப்படும். இதில் 2 வருகை மற்றும் 2 புறப்பாடு என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 9 விமானங்களும், டெல்லியில் இருந்து சென்னை வரக்கூடிய 9 விமானங்களும் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக சென்று வந்தன.
ஆனால் டெல்லி விமானங்கள் குறித்த விவரங்கள் பயணிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். சென்னை-டெல்லி இடையே செல்லக்கூடிய மற்ற விமான நிறுவன விமானங்கள் பாதிப்பின்றி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நடமாடும் மருத்துவ கருவி மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லி வந்துள்ளார்.
- 13 ஆயிரம் பெற்றுக் கொண்டு, நான்கு நபர்களுக்கு பரிசோதனை செய்து அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெற்குந்தி கிராமத்தில் மர்மகும்பல் ஒன்று போலி மருத்துவத்தில் ஈடுபடுவதாய் சுகாதார மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் மருத்துவர் சாந்தி என்பவருக்கு தகவல் வந்தது.
சம்பந்தப்பட்ட நபர்களை ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி அதிரடியாக களத்தில் இறங்கி சுற்றி வளைத்தார்.
இந்நிலையில், வயிற்றில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்வதாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், நடமாடும் மருத்துவ கருவி மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லி வந்துள்ளார்.
ஒரு நபருக்கு 13 ஆயிரம் பெற்றுக் கொண்டு, நான்கு நபர்களுக்கு அவர் நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து அறிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக கள்ளக்குறிச்சியில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
- வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், வெடி விபத்தில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து, பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.






