என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது.
    • காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான்.

    சென்னை:

    சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரத்தில் உண்மை வெளிவரவே சிபிஐ விசாரணை கோருகிறோம்.

    மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது. முடிவு இல்லை.

    எங்கும் கள்ளச்சாராயம். இதற்கெல்லாம் முழு பொறுப்பு திமுக அரசாங்கம், முதலமைச்சர் தான். காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான். இதற்கெல்லாம் அவர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

    துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் கேட்டார்கள். இது தொடர்பான துறை அமைச்சர் விளக்கம் கூட அளிக்கவில்லை.

    முதலமைச்சர் இந்த சம்பவத்தில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்கள் சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் முழு உண்மையும் வெளிவரும்.

    திமுக-வினர் கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும். மதுவில் செலுத்தக்கூடாது என்று கூறினார்.

    • எல்லா இடத்திலும் டாஸ்மாக் கடை வைக்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா?
    • அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட ரூ.2000 லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள்.

    கோவை:

    கோவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சட்டசபையில் முதலமைச்சர் முன்னிலையில் டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதாக மூத்த அமைச்சரே சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    டாஸ்மாக் மதுவில் Quality இல்லை என்று அமைச்சரே ஒத்துக்கொண்டு உள்ளார்.

    மது குடிப்பவர்கள் தானாக திருந்தினால்தான் பிரச்சனை தீரும் என அமைச்சர் சொல்வதற்கு எதற்கு இந்த ஆட்சி. எல்லா இடத்திலும் டாஸ்மாக் கடை வைக்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா? என்று மக்களின் கேள்வியை நான் எழுப்புகிறேன்.

    தமிழகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் என சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் குழந்தை பலியாகி உள்ளது.

    அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட ரூ.2000 லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள். உயிருக்கு மரியாதை இல்லை. பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.

    சென்னை மாநகராட்சி நிர்வாகம் எந்த செயல்பாடுமின்றி முடங்கி உள்ளது என்று அவர் கூறினார்.

    • மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    • இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கிரிக்கெட் வீரர் கள் 2007-ம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது 2-வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றிருப்பது பாராட்டுக்குரியது. இந்திய வீரர்களின் அசாத்திய திறமையாலும், கடின உழைப்பாலும் இந்தி யாவிற்கு வெற்றியும், பெருமையையும் தேடித்தந்தி ருக்கின்றார்கள். இந்திய கிரிக்கெட் வீரார்களின் இந்த சாதனைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    விளையாட்டுத் துறையில் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்கள். வருங்காலங்களிலும் அவர்களின் வெற்றி தொடர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டுத் துறைக்கு தேவையான அனைத்து ஆக்கபூர்வமான உதவிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
    • வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைகளில் 2 கிராமம் முதல் 8 கிராம் வரை வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த குற்றச்சாட்டின் பேரில் அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கடந்த ஏழு நாட்களாக அடகு வைத்துள்ள நகைகளில் நம்முடைய நகைகளிலும் மோசடி ஏதும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து நகைகளை திருப்பி வருகின்றனர்.

    அப்படி வருகை தந்துள்ள நபர்களில் சிலருக்கு மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தற்சமயம் வங்கி கிளை மேலாளராக இருந்து வருபவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் புதிய மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களைப் போன்ற பொதுமக்கள் பண தேவைக்காக அடகு வைக்கும் தங்க நகைகளை வெட்டியும், பற்றவைத்தும், சுரண்டியும் இருக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.

    மேலும் பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருக்கும் நகைகள் எப்படி, யார் மூலம் இவ்வாறான மிகப்பெரிய மோசடிக்கு உட்படுத்தப்படுகிறது? வங்கிக்குள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கண்டறிய வேண்டும் என பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வங்கி கிளையின் உயர்மட்ட தணிக்கை குழுவும் கடந்த ஏழு நாட்களாக வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் இக்கிளையில் அடகு வைத்திருக்கும் அனைவரும் தங்களது நகைகளை திருப்புவதற்காக மணிக்கணக்கில் நாள்தோறும் காத்துக் கிடந்து திருப்பி வருகின்றனர்.

    நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் வங்கியின் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

    • மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். கூலித் தொழிலாளி. இவரது மகன் மதன்ராஜ் (வயது 15). இவர் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் திருவிழாவிற்காக மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன் (21) சஞ்சய் ( 19), சித்தார்த்தன் (22) ஆகியோர் கோவிலின் அருகே பேனர் வைத்தனர்.

    அப்போது அந்த பேனர் மேலே சென்ற மின் கம்பி உரசியதில் 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

    உடன் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மதன்ராஜ் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்தனர். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இறந்த மதன்ராஜ் உடலை உடற்கு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது கோவில் திருவிழாவில் பேனர் வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு குவினாவை தீண்டியது.
    • முன்னதாக பாம்புடன் வந்த பெற்றோரால் ஆஸ்பத்திரி வளாகத்தி பரபரப்பு நிலவியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன், விவசாயி. இவரது மகள் குவினா (வயது 17 ). இவர் கல்லாகோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குவினா தனது பெற்றவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு குவினாவை தீண்டியது. உடனே விழித்துக் கொண்ட மாணவி தனது பெற்றோரை எழுப்பி கூறியுள்ளார்.

    துரிதமாக செயல்பட்ட மதியழகன் தனது மகளை கடித்த பாம்பை அடித்து ஒரு பையில் போட்டுக் கொண்டு தனது மகளையும் அழைத்துக் கொண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குவினா இன்று காலை கண்விழித்து தனது பெற்றோர்களிடம் பேசினார். மருத்துவர்கள் கூறும்போது மாணவி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்பலாம் என்றும் கூறினார்கள்.

    முன்னதாக பாம்புடன் வந்த பெற்றோரால் ஆஸ்பத்திரி வளாகத்தி பரபரப்பு நிலவியது.

    • கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது.
    • பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பருவமழை தொடங்கியும் போதிய அளவில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு 1200 கன அடியாக உயர்த்தப்பட்டது.

    கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.60 அடியாக உள்ளது. அணைக்கு 1898 கன அடி நீர் வருகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 50.20 அடியாக உள்ளது. 928 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
    • மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

    உடுமலை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன்(40).இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 2பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து ரவிச்சந்திரன், மகேந்திரன் மட்டுமின்றி அதே ஊரை சேர்ந்த லட்சுமணன்(49), செந்தில்குமார்(48), ராமகிருஷ்ணன்(40), மணிகண்டன்(30) ஆகியோரும் சாராயம் வாங்கி வந்து கடந்த 27-ந்தேதி குடித்தது தெரியவந்தது. இதில் ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோரை தவிர மற்ற 4 பேருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் மூலம் சாராயம் குடித்ததால் 2பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் மது குடித்த இடத்தில் ஆய்வு செய்ததில், அங்கு சுகாதாரமற்ற தண்ணீர் இருப்பது தெரியவந்தது. அந்த தண்ணீரை மதுவில் கலந்து குடித்ததால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த தண்ணீரை போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

    இந்தநிலையில் சாராயம் வாங்கிய உடுமலை மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமத்துக்கு திருப்பூா் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார், கோவை மாவட்டத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போலீசார், உடுமலை வனச்சரகா் மணிகண்டன் தலைமையிலான வன அலுவலா்கள் சென்று கள்ளச்சாராயம் ஏதும் விற்கப்படுகிறதா என்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

    வாக்குவாதம் முற்றியதையடுத்து, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காட்டுப்பட்டி செட்டில்மெண்ட் கிராமத்தில் தங்கி விசாரணையை தொடா்ந்தனா்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் மஞ்சநாயக்கனூா் கிராமத்தில் ஒரு சிலா் அருந்திய சாராயம் மாவடப்பு கிராமத்தில் இருந்துதான் சென்றுள்ளது என தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மாவடப்பு கிராமத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
    • தமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது

    காலநிலை மாற்றம் :

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக   மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

     

    ஆய்வு முடிவுகள் :

    அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? 

    தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.

    தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.

     

    தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.

     

    வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.

     

    மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று  ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • மாலை நேரத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் அதனைத் தொடர்ந்து சாரல் மழையும், மாலை நேரத்தில் மீண்டும் பனி மூட்டமும் என ரம்யமான சூழல் நிலவி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

    இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணாகுகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமமான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    முயல்பண்ணை, சூழல் சுற்றுலா மையம் ஆகியவற்றிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை நேரத்தில் இதமான வெயில் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவது சுற்றுலாப் பயணிகளை உற்சாகமடைய செய்துள்ளது. தொடர்ந்து அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில், அக்கட்சியினரின் ஓட்டுக்களை பெறவும், தே.மு.க.தி.வினரின் ஓட்டுக்களை பெறவும், பா.ம.க.வும், நாம் தமிழர் கட்சியும் முயற்சித்து வருகின்றன.

    மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகிறார்.

    தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

    அதேபோல பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகள் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    • தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.
    • பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்டசில்லுக்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.

    இந்த நிலையில் மேலும் ஏ 2 அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொலுமுனை கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் எடை 1.292 கிகி, நீலம் 32 செ.மீ, அகலம் 4.5 செ.மீ, தடிமன் 3 செ.மீ உள்ளது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.

    தொல்லியல் சூழ்நிலை கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    ×