search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archeology"

    • உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
    • தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

    உடுமலை:

    கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 6 தாலுகாவை பிரித்து திருப்பூர் மாவட்டம் 2009ல், உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பழமையான கோவில்கள், வரலாற்றுச்சின்னங்கள் அதிக அளவு உள்ளன. குறிப்பாக உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்றிருந்த கோவில்கள், நொய்யல் மற்றும் அமராவதி ஆற்றங்கரையில் தற்போது வரை வரலாற்றுச்சின்னங்களாக உள்ளன. இக்கோவில்களில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்த ப்பட்டுள்ளன.

    இதே போல் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலும், வரலாற்று ஆய்வாளர்களால் பெருங்கற்காலத்தைச்சேர்ந்த கல்திட்டைகள் மற்றும் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்கள், மேற்பரப்பு ஆய்வில் கிடைத்துள்ளது. கடத்தூர், கொழுமம், கண்ணாடிப்புத்தூர், சோமவாரப்பட்டி, கொங்கல்நகரம், குடிமங்கலம், கோட்ட மங்கலம் உட்பட பல இடங்களில் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளும், கல்திட்டை உட்பட பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்களும் உள்ளன.

    சமீபத்தில் மடத்துக்குளம் ஒன்றியம், மெட்ராத்தி கிராமத்தில் குளத்தின் கரையில் இருந்த பாறை கல்வெட்டு, போதிய விழிப்புணர்வு இல்லாமல் சிதைக்கப்பட்டு, முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.இதே போல் கல்வெட்டுகளை அழித்தல், நடுகற்கள் மற்றும் சிற்பங்களை சேதப்படுத்துதல் தொடர் கதையாக உள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.தற்போது திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தொல்லியல் சார்ந்த பணிகளில் கோவை மாவட்டத்தைச்சேர்ந்த மாவட்ட தொல்லியல்துறை அலுவலர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே திருப்பூர் மாவட்டத்துக்கு தனியாக மாவட்ட தொல்லியல்துறை அலுவலகத்தை துவக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொழில்சார்ந்த மாவட்ட மக்களுக்கு, முக்கிய சுற்றுலா தலமாகவும், அருங்காட்சியகம் அமைய வாய்ப்புள்ளது.

    இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில் அரசுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    • ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.
    • கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார்.

    வெள்ளகோவில்.அக்.12-

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோயில் பகுதியில் கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை ஆலோசகர் அர்ச்சுனன், மிகவும் பழமையான கோவில்கள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை அங்காளம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.

    • இக்கோவிலில் பல இடங்களில் சிதலமடைந்து காணப்படுவதால் கோவிலை புனரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    • கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளதால், அவற்றின் பழமை தன்மை மாறாத வகையில் புனரமைக்கப்பட உள்ளது.

     காங்கயம்:

    காங்கேயம் பழைய கோட்டை செல்லும் சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. தற்போது இக்கோவிலில் பல இடங்களில் சிதலமடைந்து காணப்படுவதால் கோவிலை புனரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக அறநிலையத்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மேலும் கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளதால், அவற்றின் பழமை தன்மை மாறாத வகையில் புனரமைக்கப்பட உள்ளது.

    இதற்காக திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை முதன்மை ஆலோசகர் அர்ஜுனன் தலைமையிலான தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். கோவிலில் சேதமடைந்த பகுதிகள், மண்டபம், சிலைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின் இவற்றை அறிக்கையாக தொல்லியல்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ×