என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
    • டிசமர்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

    வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் துவங்கும்.

    செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

    டிசமர்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

    இந்த கால அட்டவணையை அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் பின்பறற் வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

    • கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • விமான நிலையத்திற்கு எதிராக இதுவரை 7 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு தேவையான நிலம் விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட உள்ளன.

    இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    ஏகனாபுரம் கிராமமக்கள் பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். இன்று அவர்களது போராட்டம் 705-வது நாளாக நீடித்தது.

    இந்த நிலையில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் ஏகனாபுரம் தவிர ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. அதிகாரிகள் கிராமசபை கூட்டம் நடத்தவராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏகனாபுரம் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் வருகிற 3-ந்தேதி(புதன்கிழமை) காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து விமான நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்து உள்ளது. ஏகனாபுரத்தை அதிகாரிகள் புறக்கணித்து உள்ளனர். நாங்கள் தான் விமான நிலையத்திற்கு எதிராக இதுவரை 7 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். 6 முறை கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தோம்.

    இப்போது அதிகாரிகள் எங்கள் கிராமத்தை புறக்கணித்து உள்ளனர். எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை. எங்களை புறக்கணிக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்தை அழிக்க பார்க்கிறது. எனவே வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டக்குழுவை சேர்ந்த 20 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏகனாபுரம் கிராம மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவுக்கு இடம்பெயர சித்தூர் மாவட்ட கலெக்டரை சந்திக்கப் போவதாக அறிவித்து இருந்தனர். பின்னர் இந்த போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்.
    • திமுகவினர் ஆயிரக்கணக்கான கார்களில் வலம் வருவது விதிமீறலாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

    * விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்.

    * விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்.

    * விக்கிரவாண்டியில் இறந்தவர்கள் 15,000 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    * திமுகவினர் ஆயிரக்கணக்கான கார்களில் வலம் வருவது விதிமீறலாகும்.

    * திமுகவின் விதிமீறல்களை தட்டிக்கேட்ட அதிமுக மற்றும் பாமகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    * இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விதிமீறல்கள், வன்முறைகளை திமுக கட்டவிழ்த்து விடுகிறது.

    * திமுகவினரின் விதிமீறல்கள் மீது தேர்தல் அதிகாரி சந்திரசேகர் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் அதிகாரி சந்திரசேகரால் இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியாது.

    * திமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து பாமக சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • பட்டாசுகளில் தீ பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • 4 பேர் வெடி விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த ஆலையில் தற்போது வெளி மாநில தேவைகளுக்காக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று காலை 4 தொழிலாளர்கள் ஒரு அறையில் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகளில் தீ பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆலையில் இருந்த 3 அறைகள் இடிந்து தரை மட்டமாயின.

    பணியில் ஈடுபட்டிருந்த அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 41), நடுசூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (40), மடத்துப்பட்டி ஆர்.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (43), மோகன் (50) ஆகிய 4 பேர் வெடி விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் உடல் கருகி இறந்த 4 தொழிலாளர்கள் உடல்களை மீட்டனர். சம்பவம் தொடர்பாக ஏழாயிரம்பண்ணை போலீசார் மற்றும் தாசில்தார் லோகநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஆலை உரிமையாளர் சகாதேவன், போர்மேன் குருசாமி பாண்டி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாஞ்சோலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும், வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வருவாய்துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் தேயிலை நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    • தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
    • தமிழக அரசு முதலில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என மேலவளவில் பலியான சம்பவத்திற்கு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பலியானவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    மேலவளவில் ஊராட்சி தலைவராக தலித் வந்ததால் 1997-ல் படுகொலை நடந்தது. கள்ளச்சாராயம், நச்சு சாராய சாவு இந்தியா முழுமையும் உள்ளது. இதற்கு தீர்வு பூரண மது விலக்கு மட்டுமே. டாஸ்மாக் கடையிலும் பாதிப்பு உள்ளது. தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

    மெத்தனால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மது விலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால், பூரண மது விலக்கு என்பதே தீர்வு.

    பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. அவர்கள் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவு. அயோத்தி கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்து உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.

    நடிகர் விஜய் மாணவர்களிடம் பேசியதில் மாணவர்களை கோபப்படுத்தும் முறையாகவே நான் பார்க்கிறேன். அதில் பிழையும், உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியது மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.

    கள்ளுக் கடைகள் திறப்பதன் மூலம் கள்ளச்சாராய சாவுகள் தடுக்கப்படுமா? காந்தியடிகள் கள் உள்பட எந்த மதுவும் வேண்டாம் என்று தான் கூறி உள்ளார். தமிழக அரசு முதலில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.

    கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் நேரில் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தான். முதல்வர் டாஸ்மாக் கடையை மூடினால் மக்களிடம் ஆட்சிக்கு நல்ல பெயரும் ஏற்படும்.

    ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காவல் துறையில் தனி உளவு பிரிவு தொடங்க வேண்டும். பூரண மது விலக்கை ஆதரித்து விடுதலை சிறுத்தகைள் கட்சி சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று கட்சி சார்பில் மிகப் பெரிய மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

    கள் விற்பனை, டாஸ்மாக் மது உள்பட எந்த வகை மதுவும் வேண்டாம். பூரண மது விலக்கு என்பதே தீர்வு, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலை நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிபடியாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில்அதிகப்பட்ச வெப்பநிலையாக 37 டிகிரி வெப்பநிலை பதிவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்க 55 கிலோ வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகிறார்கள். பஸ் கட்டணத்தை விட செலவு குறைவு மற்றும் குறித்த நேரத்திற்கான பயணம் என்பதால் ரெயிலில் பணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அக்டோபர் 28, 29, 30-ந்தேதிகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிடுவார்கள்.

    ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதனால் அக்டோபர் 28-ந்தேதி (திங்கட்கிழமை)க்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு வேகமாக முடிந்தது. பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தனர்.

    இதேபோல் அக்டோபர் 29-ந்தேதி பயணம் செய்பவர்கள் நாளையும், அக்டோபர் 30-ந்தேதி பயணம் செய்பவர்கள் நாளை மறுநாளும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    தீபாவளி பண்டிகை முன்பதிவுகளை வைத்து சிறப்பு ரெயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து ரெயில்வே முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அருப்பு மில் அருகே இருந்த ஊராட்சி மன்ற தலைவரை மக்கள் முற்றுகை இட்டனர்.
    • ஒகேனக்கல் கூட்டு குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சரியாக வராததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் அகரம் ஊராட்சியின் துணை தலைவர் இரவோடு இரவாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயிலிருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர் துணை தலைவரின் வீட்டிற்கு சென்ற பைப் லைனை துண்டிப்பு செய்தார். இந்நிலையில் இரவோடு இரவாக மீண்டும் அதே இடத்தில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அகரம் அருப்பு மில் அருகே இருந்த ஊராட்சி மன்ற தலைவரை திடீர் கிராம மக்கள் முற்றுகை இட்டனர்.

    அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மீண்டும் பைப் லைனை துண்டிப்பு செய்து, ஒகேனக்கல் கூட்டு குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது குறித்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரியிடம் கேட்டபோது, நேற்று முன்தினம் துணை தலைவரிடம் நேரடியாக சென்று, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து தண்ணீர் எடுப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்து எச்சரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் அதே தவறை செய்துள்ளார். இதே நிலை நீடித்தால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.
    • வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று.

    நெல்லை:

    தமிழகத்தில் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை மீறி பல மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத குழந்தைகள் சிலருக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாக்குடி பகுதியில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    எனவே அந்த பகுதியில் உள்ள சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழந்தை திருமணங்களை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகள் வழக்கமாக பள்ளி மாணவர்களை கொண்டும், தன்னார்வலர்களை கொண்டும் விழிப்புணர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

    ஆனால் சற்று வித்தியாசமாக குழந்தை திருமணங்களை தடுக்க நெல்லையை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் தானே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

    நெல்லையை அடுத்த தச்சநல்லூரை சேர்ந்தவர் கோமதி கிருஷ்ணமூர்த்தி. இவர் குரூப்-4 தேர்வு மூலம் தமிழக அரசுத்துறையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த பதவி உயர்வு பெற்று தற்போது நெல்லை மாவட்டம் முக்கூடல் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வருவாய் கட்டுப்பாட்டில் தான் பாப்பாக்குடி கிராமம் அமைந்துள்ளது.

    அங்கு அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அறிந்து வேதனை அடைந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவரே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுபாட்டை பாடி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு சென்றார்.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பள்ளிகளில் வருவாய் ஆய்வாளர் கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

    வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. அந்த கலை நயத்தை சற்று கூட குறைவில்லாமல் அதிகாரியாக இருந்தாலும் வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்ற கலைஞரை போன்று கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லு பாடகியாகவே மாறி இருப்பார்.

    இதற்காக பிரத்யேகமாக வில்லு கலைக்கு தேவைப்படும் மண்பானை, வில்லு வீசுகோல் ஆகியவற்றை அவரே தயார் செய்து வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து சமூக நலத்துறையை சேர்ந்த சமூகநலத்துறை அலுவலரான பத்மா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து வில்லுப்பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் கோமதி கிருஷ்ணமூர்த்தி முக்கூடலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தானே வேடமிட்டு நாடகம் ஒன்றை நடத்தி இருந்தார். அதில் எமதர்மராஜா வேடம் போட்டு மது, கஞ்சா போன்ற போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டி இருந்தார்.

    இது குறித்து கோமதி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, `பாப்பாக்குடி பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுவதாக அதை தடுக்க வேண்டும் என நாங்கள் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    பொதுவாக நான் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் இதுபோன்ற பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் வைத்திருப்பேன். எனவே கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் எளிதில் புரியும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறினார்.

    • மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது.
    • காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான்.

    சென்னை:

    சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரத்தில் உண்மை வெளிவரவே சிபிஐ விசாரணை கோருகிறோம்.

    மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது. முடிவு இல்லை.

    எங்கும் கள்ளச்சாராயம். இதற்கெல்லாம் முழு பொறுப்பு திமுக அரசாங்கம், முதலமைச்சர் தான். காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான். இதற்கெல்லாம் அவர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

    துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் கேட்டார்கள். இது தொடர்பான துறை அமைச்சர் விளக்கம் கூட அளிக்கவில்லை.

    முதலமைச்சர் இந்த சம்பவத்தில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்கள் சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் முழு உண்மையும் வெளிவரும்.

    திமுக-வினர் கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும். மதுவில் செலுத்தக்கூடாது என்று கூறினார்.

    • எல்லா இடத்திலும் டாஸ்மாக் கடை வைக்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா?
    • அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட ரூ.2000 லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள்.

    கோவை:

    கோவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சட்டசபையில் முதலமைச்சர் முன்னிலையில் டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதாக மூத்த அமைச்சரே சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    டாஸ்மாக் மதுவில் Quality இல்லை என்று அமைச்சரே ஒத்துக்கொண்டு உள்ளார்.

    மது குடிப்பவர்கள் தானாக திருந்தினால்தான் பிரச்சனை தீரும் என அமைச்சர் சொல்வதற்கு எதற்கு இந்த ஆட்சி. எல்லா இடத்திலும் டாஸ்மாக் கடை வைக்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா? என்று மக்களின் கேள்வியை நான் எழுப்புகிறேன்.

    தமிழகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் என சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் குழந்தை பலியாகி உள்ளது.

    அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட ரூ.2000 லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள். உயிருக்கு மரியாதை இல்லை. பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.

    சென்னை மாநகராட்சி நிர்வாகம் எந்த செயல்பாடுமின்றி முடங்கி உள்ளது என்று அவர் கூறினார்.

    ×