என் மலர்
தமிழ்நாடு

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர், தலைவர்கள் வாழ்த்து

- இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பை-ஐ முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி!
- இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது!
சென்னை:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007-ம் ஆண்டில் முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை டோனியின் தலைமையில் வென்று இருந்தது. 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வெல்வது இது 2-வது முறையாகும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
எங்கள் இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பை-ஐ முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி!
நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,
17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
டி20 உலகக்கோப்பை 2024 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. தலைசிறந்த டெத் ஓவர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் அற்புதமானது. தொடக்கம் முதலே சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது. வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் எதிராக முரண்பாடுகள் இருந்தபோது, அணி கைவிடவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றியது. இறுதியில் ஒரு மூச்சடைக்க கேட்ச் வெற்றியை உறுதிப்படுத்தியது!
தொடர் முழுக்க சாம்பியன்களை போன்றே விளையாடினார்கள், இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to #TeamIndia for putting up an incredible fight to win the T20 Cricket World Cup. Our champion team truly deserves this ICC trophy.#T20WorldCup2024 pic.twitter.com/EdpC9ifpFf
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 29, 2024
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அற்புதமாக விளையாடி வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த ஐசிசி கோப்பையை வெல்வதற்கு நம்முடைய சாம்பியன் அணி முழு தகுதி பெற்றிருப்பது என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்,
கடும் நெருக்கடிகளை கடந்து ஆட்டத்தை வென்றெடுத்து இறுதியில் உலக கோப்பையை உறுதி செய்துள்ளது இந்திய அணி!
மதம்-இனம் கடந்து இந்திய நாட்டிற்காக வியர்வை சிந்தி விளையாடி கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர் சிந்தியுள்ளனர் இந்திய வீரர்கள்!
இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது! என்று தெரிவித்துள்ளார்.