search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபதி முர்மு"

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
    • கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    புதுடெல்லி:

    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    தொடர்ந்து, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெறுகின்றனர். அர்ஜூனா விருதை 26 பேரும் பெறுகின்றனர்.

    விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.

    • மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை.

    பாரதிய ஜன சங்கம் மற்றும் பா.ஜனதா கட்சியின் பிரபல தலைவராக அறியப்பட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். இவர் 1999 மற்றும் 2004-ம் ஆண்டு வரை பல்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைந்து கூட்டணி அமைத்து பிரதமரானார்.

    இவரின் 99-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் பிரதமரான வாஜ்பாயின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, துணை ஜனாதிபதி தன்கர், மேலும் மத்திய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்.

    வாஜ்பாய் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தார் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும் "இந்தியா சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டு ஆகும் 2047-ன் அம்ரித் கால் நோக்கத்திற்கு வாஜ்பாயின் அர்ப்பணிப்பு மற்றும் அவரின் தூய்மையான பணி உத்வேகமாக இருக்கும்" என்றார்.

    • நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை பேரழிவு ஆகும்.
    • பட்டப்படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது.

    சென்னை:

    சென்னை உத்தண்டியில் கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடந்தது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 245 மாணவர்களுக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.

    பின்னர் மாணவர்கள் மத்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-

    இந்தியா நீண்ட கடற்கரைகளை கொண்ட நாடு. 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மற்றும் 1,382 கடல் தீவுகளுடன் இந்தியா குறிப்பிடத்தக்க கடல் பகுதியை கொண்டுள்ளது. 14,500 கிலோ மீட்டர்கள் செல்லக்கூடிய நீர்வழிகள் நம்மிடம் உள்ளன. இந்த கடற்கரைகள் பொருளாதார மேம்பாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றன. கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகமும், வளர்ச்சியும் பெருகி வருகிறது.

    நாட்டில் 65 சதவீத வர்த்தகம் கடல் போக்குவரத்து மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடலோர பொருளாதாரம் 40 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்களுக்கு பயன் அளிக்கிறது. இந்தியா சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மீன்பிடி படகுகளை கொண்ட உலகின் 2-வது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. இந்தத் துறையின் திறனை முழுமையாக பயன்படுத்துவதற்கு முன், நாம் பல சவால்களை கடக்க வேண்டும்.

    சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து உள்ளது. தென்னிந்தியாவின் பல்லவர்கள் சக்திவாய்ந்த கடற்படையை கொண்டிருந்தனர். 10-ம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கடல் கடந்து ஆட்சி செய்துள்ளனர்.

    சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து, 6,000 மீட்டர் ஆழமான கடல் நீரை ஆராய்வதற்கும், ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்கும் 'சமுத்ராயன்' பணிக்கு நாங்கள் இப்போது தயாராகி வருகிறோம்.

    நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை பேரழிவு ஆகும். இதில் உயரும் வெப்பநிலை மற்றும் கடல் மட்டங்கள் அடங்கும். கடல்சார் துறையானது, மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும், அபாயத்தை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றத்தை தணிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும்.

    2047-ம் ஆண்டு வரையிலான அமிர்த பெருவிழா காலத்தில் நம் இலக்குகளை அடைய உழைக்க வேண்டும். பட்டப்படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது. மாணவர்கள் பட்டங்கள் பெறுவதற்கு முன்பு கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் சவாலான சூழ்நிலைகளில், உங்கள் குழு உறுப்பினர்களை வழிநடத்த தேவையான தலைமை பண்புகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளது.
    • தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளது.

    சென்னை:

    சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, டெல்லி புறப்பட்டுச் செல்லும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று சந்தித்தார்.

    அப்போது, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு 2021-க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென நேரில் வலியுறுத்திய முதலமைச்சர், இதுதொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, இன்று தான் எழுதியுள்ள கடிதத்தையும் வழங்கினார்.

    அக்கடிதத்தில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகவும், இந்தச் செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதாலும், அதைத் தொடர்ந்து ஒன்றிய சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021' (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021) நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநருக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், ஆளுநர் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு, மேற்படி சட்டமுன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பிய நிலையில், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பின்னர், மேற்படி சட்டமுன்வடிவு ஆளுநரால் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஒன்றிய உயர்கல்வித் துறை, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளதாக தேதி வாரியாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும் இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, 14-8-2023 அன்று தான் கடிதம் எழுதியிருந்ததாகவும், அதில், நீட் தேர்வினால் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் தற்கொலைகள் குறித்தெல்லாம் குறிப்பிட்டு, இனியும் தாமதிக்காமல் மேற்படி சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தான் கோரியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது என்றும் முதலமைச்சர் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சூழ்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது.
    • ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது.

    இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    இந்நிலையில், விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு சென்னை வந்தடைந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

    • நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
    • காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவரை தொடர்ந்து காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு.
    • விருந்தில் கலந்து கொள்ள உலக தலைவர்கள், இந்திய மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு.

    ஜி20 அமைப்பில் 18வது உச்ச மாநாடு இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் தொடங்கியது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த விருந்தில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு தலைவர்களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து வரவேற்கின்றனர். விருந்தில் கலந்து கொள்ள உலக தலைவர்களை தவிர இந்திய மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

    சிறப்பு விருந்தின் அங்கமாக 50 முதல் 60 இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விருந்தினர்களுக்கு இசை கலைஞர்கள் இந்திய இசையை விருந்தாக்கவுள்ளனர். விருந்தினர்களுக்கு சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் மும்பையில் பிரபலமான பாவ் என ஏராளமான உணவு வகைகள் தயாராகி இருக்கிறது.

    • இந்தியாவின் ஜி20 தலைமைக்கு 'வசுதைவ குடும்பகம்' என்பது மையக்கரு
    • பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்

    உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.

    வருடாவருடம் மாறிவரும் இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்றும் நாளையும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மையத்தில் நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பான உபசரிப்பும், தீவிர பாதுகாப்பும் புதுடெல்லியில் வழங்கப்பட்டுள்ளது. வருகை தந்திருக்கும் தலைவர்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டமைப்பில் பல நாடுகளின் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

    இந்தியா, இந்த மாநாட்டிற்கான கருப்பொருளாக "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் பொருள்பட வசுதைவ குடும்பகம் எனும் கருத்தை மையப்படுத்தியுள்ளது.

    இதை முன்னிலைப்படுத்தி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

    இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் உலக தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மனமார வரவேற்கிறேன். இந்தியாவின் "வசுதைவ குடும்பகம்" எனப்படும் இம்மாநாட்டிற்கான மையக்கருத்து, உலகளாவிய வளர்ச்சிக்கான நிலையான, மனித முன்னேற்றத்தை உள்ளடக்கியதாகும். இதனை அடைவதற்கான உங்களின் முயற்சிகள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு இந்திய ஜனாதிபதி கூறியுள்ளார்.

    தற்போதைய ஜி20 தலைமையில் இந்தியா அனைவருக்குமான ஒரு உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், பருவகாலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் மற்றும் சமமான உலகளாவிய சுகாதாரம் ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

    ஜி20 உறுப்பு நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 85 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள் கலைகட்டியது.
    • பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

    சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

    நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தனுக்கு பல்வேறு பள்ளிகள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் மாணவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து, அர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார் திரவுபதி முர்மு.

    ஜனாதிபதி மாளிகையில், திரவுபதி முர்முவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் தொடர்பான அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள், குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் ( முன்பு டுவிட்டர்) தளத்தில் டுவீட் செய்யப்பட்டு உள்ளது.

    • 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றார்
    • உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர்

    ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

    அவருக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் "நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமை அடைந்துள்ளது. அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர்கள் என்று, இந்திய விளையாட்டு சாதனைப் பக்கத்தில் மேலும் தங்க பக்கத்தை இணைத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தில் ''உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல் விளையட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையாளமாக ஆக்கியுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்தது.
    • விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் என்.டி.ஆர், கல்யாணராம் கலந்து கொள்கின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்தது.

    அதன்படி 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட நாணயம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து செய்யப்பட்டு உள்ளது.

    நாணயத்தின் ஒரு புறத்தில் 3 சிங்கங்களுடன் அசோக சக்கரமும், மறுபுறத்தில் என்.டி.ஆர். ராமராவ் உருவம் பதித்து, அதன் கீழ் இந்தியில் நாதமுரி தாரக ராமராவ் சத்ஜெயந்தி 1923-2023 என அச்சிடப்பட்டுள்ளது.

    நாணய வெளியிட்டு விழா நாளை மறுநாள் நடக்கிறது.

    டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிடுகிறார்.

    நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள என்.டி.ராமராவின் மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் என்.டி.ஆர், கல்யாணராம் கலந்து கொள்கின்றனர்.

    • ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
    • ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    புதுச்சேரி,

    புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வந்தார். 2-வது நாளான இன்று காலை கடற்கரை சாலையில் வாக்கிங் சென்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை ஜனாதிபதி சந்தித்தார். அவரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    பின்னர் பிற்பகல் 11:25 மணியளவில் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றார் ஜனாதிபதி. ஆசிரம நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து மகான் அரவிந்தர், அன்னையின் சமாதியில் மலர்களை வைத்து தியானம் செய்தார்.

    பின்னர் அரவிந்தர், அன்னை ஆகியோர் பயன்படுத்திய அறைகளை பார்வையிட்டார். பின்னர் அரவிந்தர் ஆசிரம நூலகத்துக்கு சென்று பார்வையிட்டார். அரவிந்தர், அன்னையின் வரலாறை ஆசிரம நிர்வாகிகள் எடுத்துக்கூறினார். சுமார் ஒரு மணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்தார்.

    தொடர்ந்து அங்கிருந்து சாலைமார்க்கமாக ஆரோவில் சென்றார். ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் மாத்ரி மந்திர் சென்றார். மாத்ரி மந்திர் அமைவிடம் குறித்து அவர்கள் விளக்கினர். அங்கே ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அங்கேயே ஜனாதிபதி மதிய உணவருந்தினார். இதன்பின் ஆரோவில் நகர் கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்டார்.

    ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதை ஜனாதிபதி பார்த்தார். தொடர்ந்து ஆரோவில் கருத்தரங்கு அறையில் அரவிந்தரின் 150-வது ஆண்டுவிழா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

    இதன்பின் அங்கிருந்து லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

    ×