search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2047-ம் ஆண்டுக்குள் நம் இலக்குகளை அடைய உழைக்க வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
    X

    2047-ம் ஆண்டுக்குள் நம் இலக்குகளை அடைய உழைக்க வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு

    • நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை பேரழிவு ஆகும்.
    • பட்டப்படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது.

    சென்னை:

    சென்னை உத்தண்டியில் கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடந்தது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 245 மாணவர்களுக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.

    பின்னர் மாணவர்கள் மத்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-

    இந்தியா நீண்ட கடற்கரைகளை கொண்ட நாடு. 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மற்றும் 1,382 கடல் தீவுகளுடன் இந்தியா குறிப்பிடத்தக்க கடல் பகுதியை கொண்டுள்ளது. 14,500 கிலோ மீட்டர்கள் செல்லக்கூடிய நீர்வழிகள் நம்மிடம் உள்ளன. இந்த கடற்கரைகள் பொருளாதார மேம்பாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றன. கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகமும், வளர்ச்சியும் பெருகி வருகிறது.

    நாட்டில் 65 சதவீத வர்த்தகம் கடல் போக்குவரத்து மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடலோர பொருளாதாரம் 40 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்களுக்கு பயன் அளிக்கிறது. இந்தியா சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மீன்பிடி படகுகளை கொண்ட உலகின் 2-வது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. இந்தத் துறையின் திறனை முழுமையாக பயன்படுத்துவதற்கு முன், நாம் பல சவால்களை கடக்க வேண்டும்.

    சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து உள்ளது. தென்னிந்தியாவின் பல்லவர்கள் சக்திவாய்ந்த கடற்படையை கொண்டிருந்தனர். 10-ம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கடல் கடந்து ஆட்சி செய்துள்ளனர்.

    சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து, 6,000 மீட்டர் ஆழமான கடல் நீரை ஆராய்வதற்கும், ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்கும் 'சமுத்ராயன்' பணிக்கு நாங்கள் இப்போது தயாராகி வருகிறோம்.

    நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை பேரழிவு ஆகும். இதில் உயரும் வெப்பநிலை மற்றும் கடல் மட்டங்கள் அடங்கும். கடல்சார் துறையானது, மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும், அபாயத்தை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றத்தை தணிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும்.

    2047-ம் ஆண்டு வரையிலான அமிர்த பெருவிழா காலத்தில் நம் இலக்குகளை அடைய உழைக்க வேண்டும். பட்டப்படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது. மாணவர்கள் பட்டங்கள் பெறுவதற்கு முன்பு கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் சவாலான சூழ்நிலைகளில், உங்கள் குழு உறுப்பினர்களை வழிநடத்த தேவையான தலைமை பண்புகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×