என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Droupadi Murmu"

    • கருப்பு புடவை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர்!
    • இருமுடி கட்டி, 18 படிகள் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பெற்றார் முர்மு!

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்திப் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று (22.10.25) இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பெரும் கவனம் ஈர்த்துள்ளது. காரணம் குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் குடியரசு முன்னாள் தலைவர் விவி கிரி, ஆளுநராக இருந்த காலத்தில்தான் சபரிமலை சென்றுள்ளார். இந்நிலையில், இருமுடி கட்டி, 18 படிகள் ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் திரவுபதி முர்மு!

    இருமுடிக்கட்டை தலையில் சுமந்துசென்ற திரவுபதி முர்மு, பதினெட்டுப்படி தாண்டி, சன்னிதானத்தில் சமர்ப்பித்தார். அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டுகளை சுமந்து சென்று சன்னிதானத்தில் சமர்பித்தனர். தொடர்ந்து குடியரசுத் தலைவரின் இருமுடி கட்டுகள் கருவறைக்குள் எற்றுக்கொள்ளப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீபாராதனையை குடியரசுத் தலைவர் தொட்டு வணங்கியதுடன், கோயிலை வலம் வந்து மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.  


                                                 இணையத்தில் வைரலாகிவரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் சபரிமலைப் புகைப்படம்

    திரவுபதி முர்மு யார்?

    இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக ஜூலை 25, 2022-ல் பதவியேற்றவர் திரவுபதி முர்மு. பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவர், பிரதிபா பாட்டிலுக்கு பின் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராவார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவரும் இவர்தான். முன்னதாக 2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் , 2000 முதல் 2009 வரை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் முர்மு பணியாற்றினார். ராம்நாத் கோவிந்திற்கு பிறகு ஜூன் 2022 இல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு முர்முவை பரிந்துரைத்தது.

    • ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
    • நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

    சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது.

    அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்பு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்கிறார்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜையின் இறுதி நாளான 22-ந்தேதியே ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார்.

    அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 22-ந்தேதி இரவே சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 24-ந்தேதி வரை கேரளாவில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐப்பசி மாதாந்திர பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் ஜனாதிபதி வருகை தரும் 22-ந்தேதி பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது. ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    • கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
    • போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    திருச்சி:

    திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி காலையில் நடைபெற உள்ளது.

    விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3-ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் டில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருகிறார். ஸ்ரீரங்கத்தில் பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.
    • ஜனாதிபதி, பிரதமர் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் (வயது 81). இவர் கிட்னி தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் ஜூன் 19ஆம் தேதி சேர்க்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஷிபு சோரன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பிரதமர் மோடியும் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மகன் ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    பின்னர் பிதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் "பழங்குடியினர், ஏழை மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஷிபு சோரன் ஆர்வதாக இருந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஷிபு சோரன் உடல் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.

    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடக்கும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள், மாதாந்திர பூஜை நடக்கும் போது செல்வார்கள். இதனால் தற்போது மாதாந்திர பூஜை காலத்திலும் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.

    இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்கிறார். அவர் வருகிற 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என்று தெரிகிறது. ஆனால் இரு நாட்களில் எந்த நாளில் அவர் சபரிமலைக்கு செல்கிறார் என்ற உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக கேரளா வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்கிறார். பின்பு பம்பையில் இருந்து நடை பயணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார் என தெரிகிறது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஜனாதிபதி பயணிக்கக்கூடிய இடம் மற்றும் சன்னிதானத்தில் தங்கக்கூடிய தேவசம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களை பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல்லில் இருந்து சாலக்காயம் வரை யிலும், சாலக்காயத்தில் இருந்து பம்பை திரிவேணி வரையிலும் சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பம்பை, மலைப்பாதை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தங்குவதற்காக சன்னிதானத்தின் உள்ள தேவசம்போர்டு விருந்தினர் மாளிகையில் நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இரண்டு அறைகள் கட்டப்படுகின்றன.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன. வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் சாமி தரிசனத்துக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக வருகிற 14-ந்தேதி மாலை திறக்கப்பட்டு, 19-ந்தேதி அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விசாவை தடைசெய்தது. சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அத்துடன் இன்று சிந்து நதி நீரை நிறுத்தியது.

    பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், மத்திய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது.

    • இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து நேரடியாக பார்வையிட அனுமதி.
    • வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்த ஒளி, ஒலி காட்சி இடம் பெறும்.

    குடியரசுத்தலைவரின் சொந்த படைப்பிரிவான மெய்க்காப்பாளர் பிரிவு, இந்திய ராணுவத்தில் குடியரசுத்தலைவரின் வெள்ளியாலான தாரை மற்றும் அதற்கான பதாகையை பெறுகின்ற தனித்துவம் மிக்க ஒரே படைப்பிரிவாகும்.

    இந்நிலையில் குடியரசுத்தலைவர் மாளிகையின் முன்பகுதியில் உள்ள வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவரின் மெய்க்காவலருக்கு வெள்ளியாலான தாரை இசைக்கருவியும், அதற்கான பதாகையும், வழங்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கௌரவிக்கிறார்.

    சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்த விழாவில், வெள்ளியாலான தாரை மற்றும் அதற்கான பதாகையை குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் பெற்றுக் கொள்வார். இதைத் தொடர்ந்து இந்த இசைக்கருவியும், பதாகையும் வழங்கப்படுவதன் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒளி, ஒலி காட்சி இடம் பெறும்.

    இந்த சிறப்புக் காட்சியை www.presidentofindia.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து நேரடியாக பார்வையிடும் அனுமதியை பெறலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பருவம் தவறி அதிக அளவு மழை பெய்வது அதிகரித்து விட்டது.
    • நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது:

    நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பிந்தைய பயணத்திலும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது.

    அதிகரித்து வரும் மக்கள்தொகையால், நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது. கிராமங்களில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன. பல உள்ளூர் ஆறுகள் அழிந்து வருகின்றன. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளால் தண்ணீர் அதிகமாக சுரண்டப்படுகிறது. 


    சுற்றுச்சூழலின் சமநிலை சீர்குலைந்து, வானிலை மாற்றம் ஏற்படுவதுடன் பருவம் தவறி அதிகப்படியான மழை பெய்வது அதிகரித்துவிட்டது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தூய குடிநீரை விநியோகிப்பது வருங்காலங்களில் பெரிய சவாலாக இருக்கும். 

    தண்ணீரை பயன்படுத்துவது மற்றும் மறு சுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மூலமே நீர்வளத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைக்க முடியும். நீர் வளத்தை கவனமாக கையாள அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீர் சேமிப்பு குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பொதுமக்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள் மற்றும் குழந்தைகள் நீர் சேமிப்பை தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே இனி வரும் தலைமுறையினருக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நாம் பரிசளிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி வழி கல்வியே உதவுகிறது.
    • தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:

    கல்வி என்பது அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவி. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மட்டத்திலும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாரபட்சமின்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அனைவருக்கும் எளிதாக கல்வி கிடைக்கும் வகையிலான மத்திய அரசின் திட்டங்கள் பாராட்டத்தக்கவை. 


    தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள ஏராளமான மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கையில் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி உதவுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. தாய்மொழியில் கல்வி கற்பதே மாணவர்களிடையே ஆக்கப்பூர்வ சிந்தனையை உருவாக்கும், பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்தும்.

    இது நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும். மாநில மொழிகளில் பாடநூல்கள் கிடைக்காததன் காரணமாக முந்தைய காலத்தில் தொழில்நுட்பக் கல்வியை பயிற்றுவிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. இந்த சிரமத்தை நீக்குவதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன.
    • நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.

    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது:

    குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிக அழகான கட்டம். அதுவே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. குழந்தைகளின் களங்கமில்லா தன்மையையும், தூய்மையையும் நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு புதிய தலைமுறையும், புதிய வாய்ப்புகள் மற்றும் கனவுகளை கொண்டு வருகின்றன. 


    தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன. சிறந்த முறையில் குழந்தைகளுக்கு கற்பித்து அவர்களை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களில் ஈடுபடுத்துவது மிக முக்கியமானது. நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.

    பள்ளிக் குழந்தைகள் இந்தியாவின் கலாச்சாரத்துடன் இணைந்திருக்க வேண்டும். பெற்றோரை எப்போதும் மதிக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். புதிய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காண வேண்டும். இன்றைய கனவுகள் நாளைய நனவாக மாறும்.

    நீங்கள் வளரும் போது எந்த மாதிரியான இந்தியாவில் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் கடமையை செய்ய வேண்டும். அது தானாகவே மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டு செல்லும். இன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் பாதை, வருங்கால இந்தியாவின் பயணத்தை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம்.
    • மற்றவர்கள் உரிமைக்காக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பணியாற்றும் சூழலை நாம் உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்களின் முழு ஆற்றலை பயன்படுத்த முடியும். இந்தியா வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அதிக அளவில் பெண்களின் பங்களிப்பு அவசியமாகும். 


    மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் அதிக அளவிலான பங்களிப்பு, பொருளாதாரம், சமுதாயம் மற்றும் நாட்டை வலுப்படுத்தும். பெண்கள் ஒருவொருக்கொருவர் ஊக்குவித்து, உதவி செய்து, மற்றவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம். வளர்ச்சியின் பல்வேறு திசைகளில் அவர்களை முன்னேற்ற இது உதவுகிறது.

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பழங்குடியின பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்கள், இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூலம் நுகர்வோரை சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நமது சகோதரிகளும், புதல்விகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைத்து பொருளாதார தன்னிறைவு அடைந்து வருகின்றனர். இதன் பயனாக ஊரக குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நமது நாட்டு பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு துறையிலும் மாற்று திறனாளிகள் சாதிக்க உகந்த சூழலையும் உருவாக்க வேண்டும்.
    • மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது.

    டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    இந்தியாவின் மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதால், அவர்கள் யாரையும் சார்ந்திராமல், கவுரமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல், சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை.

    மாற்றுத் திறனாளிகள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது. மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களைவிட, அசாத்தியத் திறமை கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். துணிவு, திறமை, திட்டமிடல் மூலம் இலக்கை எட்டி ஏராளமான மாற்றுத்திறனாளி சகோதர-சகோதரிகள் சாதனை படைத்துள்ளனர். 


    ஒவ்வொரு துறையிலும் மாற்று திறனாளிகள் சாதிக்க உகந்த சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தனிநபர் அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது.

    மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வியைப் பெறுவதில், சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே மாற்றுத்திறனாளிகளை அதிகாரமிக்கவர்களாக, தற்சார்பு பெற்றவர்களாக மாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×