என் மலர்
இந்தியா

அருணாசலில் லாரி கவிழ்ந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
- அருணாச்சல் எல்லையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.
- இந்த கோர விபத்தில் 21 தொழிலாளர்கள் பலியாகினர்.
இடாநகர்:
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் கில்லாபுக்ரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 22 பேர் ஒரு லாரியில் அருணாசல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டம் ஹயுலியாங்கில் ஒரு விடுதி கட்டுமான பணிக்காகச் சென்றனர்.
தொழிலாளர்கள் கடந்த 10-ம் தேதிக்குள் ஹயுலியாங் சென்றிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை என்பதால் காணவில்லை என அவர்களது கூட்டாளிகள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புத்தேஸ்வர் தீப் கொடுத்த தகவலின் பேரில் லாரியில் வந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து ராணுவம், போலீசார், மாநில பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப்படையினர் விபத்தில் சிக்கிய 21 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். இவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 18 தொழிலாளர்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடி நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார்.






