என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந்தேதி சபரிமலைக்கு வருகை: பக்தர்களுக்கான முன்பதிவு 2 நாட்கள் நிறுத்தம்
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந்தேதி சபரிமலைக்கு வருகை: பக்தர்களுக்கான முன்பதிவு 2 நாட்கள் நிறுத்தம்

    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடக்கும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள், மாதாந்திர பூஜை நடக்கும் போது செல்வார்கள். இதனால் தற்போது மாதாந்திர பூஜை காலத்திலும் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.

    இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்கிறார். அவர் வருகிற 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என்று தெரிகிறது. ஆனால் இரு நாட்களில் எந்த நாளில் அவர் சபரிமலைக்கு செல்கிறார் என்ற உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக கேரளா வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்கிறார். பின்பு பம்பையில் இருந்து நடை பயணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார் என தெரிகிறது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஜனாதிபதி பயணிக்கக்கூடிய இடம் மற்றும் சன்னிதானத்தில் தங்கக்கூடிய தேவசம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களை பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல்லில் இருந்து சாலக்காயம் வரை யிலும், சாலக்காயத்தில் இருந்து பம்பை திரிவேணி வரையிலும் சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பம்பை, மலைப்பாதை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தங்குவதற்காக சன்னிதானத்தின் உள்ள தேவசம்போர்டு விருந்தினர் மாளிகையில் நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இரண்டு அறைகள் கட்டப்படுகின்றன.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன. வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் சாமி தரிசனத்துக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக வருகிற 14-ந்தேதி மாலை திறக்கப்பட்டு, 19-ந்தேதி அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×