search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைக்கானல்"

    • வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர்.
    • பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், தேவதானப்பட்டி, பழனி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

    இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக மும்பை, டெல்லி, கேரளா, பாண்டிச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களுடன் கொடைக்கானலில் பயிலும் உள்ளூர் மாணவ-மாணவிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மற்றும் வனப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து 25 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கரடிச்சோலை, ரெட் ராக், பாம்பே சோலா, புலிச்சோலை, வட்டக்கானல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் கணகக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த கணக்கெடுப்பில் பாரடைஸ், பிளைகேட்சர், சாம்பல் நெற்றி, பச்சைபுறா, மாம்பழச்சிட்டு, நீல நிற கரும்பிடாரி, கருந்தலை மாங்குயில், கருந்தலை குயில் கீச்சான் உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டன. இன்றும் 2-வது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.
    • 1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, ‘தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் ‘தளபதி' வசூல் குவிக்க, ‘குணா' அப்போட்டியில் சறுக்கியது.

    அண்மையில் வெளியான மலையான திரைப்படமான `மஞ்சுமேல் பாய்ஸ்' தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் படத்தின் ஒட்டுமொத்த கதையுமே `குணா' குகையை மையப்படுத்தியதுதான். அதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.

    1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, 'தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் 'தளபதி' வசூல் குவிக்க, 'குணா' அப்போட்டியில் சறுக்கியது. எனினும், 25 ஆண்டுகள் கழித்தும் குணா படத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவு அதனை 'கல்ட்' கிளாசிக் படமாக மாற்றியுள்ளது.

    'குணா' படத்தில் வரும் குகை குறித்து 1991ல் நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், "கொடைக்கானலில் இதுவரை படப்பிடிப்பே நடக்காத, மனித நடமாட்டமே அறியாத பிரதேசங்களிலெல்லாம் 'குணா' படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இதற்கான லொகேஷன் தேடி நானும் இயக்குநர் சந்தானபாரதியும் 7 கி.மீ அலைந்தும் திருப்தியான இடம் அமையவில்லை.

    'இன்னும் 1 கி.மீ போய் பார்ப்போமே' என்று போய்ப் பார்த்தால் அப்படி ஒரு அருமையான லொகேஷன் எங்களுக்குக் கிடைத்தது. அது ஒரு மலை உச்சி! அங்கே ஒரு சர்ச் செட்டை அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எங்கள் யூனிட் அங்கே போவதற்கு புதிதாக ஒரு பாதையே அமைத்தோம். படத்தின் பல காட்சிகளை எடுக்க யூனிட் முழுவதுமே 700 அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது" என்று கமல் பேசியிருப்பார்

    • பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
    • அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தைப்பூசம், குடியரசுதினம் மற்றும் வார இறுதிநாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதன்காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகளான மூஞ்சிக்கல், அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சுற்றுலா இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். இருந்தபோதும் மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், பில்லர்ராக், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.


    மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காவில் மலர்களையும் அவர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.

    2 மாறுபட்ட சீதோஷ்ண நிலையையும் சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் போதியஅளவு போலீசார் நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
    • விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த வாரம் உறை பனி காணப்பட்ட நிலையில் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது.

    மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அவர்கள் கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரியில் ஈடுபட்டும் பிரையண்ட் பூங்கா, குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். 

    • புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
    • இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நட்சத்திர விடுதிகள் மட்டுமின்றி பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சுற்றுலாவை அனுபவிக்கவும் மற்றும் புத்தாண்டை கொண்டாடவும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை மகிழ்விக்க விதவிதமான உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விதவிதமான சாக்லேட்டுகள், கேக்குகள் போன்றவையும் கொண்டாட்டத்தில் இடம்பெற உள்ளன. இது தவிர புத்தாண்டு தினத்தில் இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்களில் சாக்லேட்டுகள் தயார்செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை சாக்லேட்டுகள் தங்களது சொந்த தயாரிப்பில் தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் இந்த ஆண்டு புது புது வண்ணமயமான சாக்லேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் குறிப்பாக பாதாம் பிஸ்தா உள்ளிட்டவைகளை வைத்து சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் புது விதமாக பிரௌனி வித் சாக்லேட் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் . இதில் எந்தவித ரசாயனமும் கலக்காமல் சுத்தமாக செய்து வருவதால் சுற்றுலா பயணிகளும் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். சாக்லேட் என்றாலே குழந்தைகளை கவரும் என்பார்கள். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சாக்லேட்டுகள் வண்ணமயமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கும் இந்த வகையான சாக்லேட்களை சுற்றுலா பயணிகள் அன்பளிப்பாகவும் வழங்கி வருகின்றனர்.

    • மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.
    • வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் தாக்கமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் 2 நாட்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்து விட்டுவிட்டு சாரல்மழையாக பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் நேற்று காலை முதலே அடர்ந்த பனிமூட்டமும், சாரல்மழையும் பெய்து வருகிறது.

    இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சூரிய ஒளியே இல்லாத அளவிற்கு நகர்முழுவதும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மலைச்சாலையில் எதிரில் நடந்து வருபவர்களும், வாகனங்களும் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் உள்ளது. இதனால் மாலை, இரவு நேரங்களை போல மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.

    பனிப்பொழிவால் கொடைக்கானலில் சாலையோர வியாபாரிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்ப்டடு வஉள்ளது. முக்கிய வீதிகளில் உள்ள கடைகளும் பகுதியளவு மட்டுமே திறந்துள்ளது. ஏரிச்சாலையில் வியாபாரிகள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். நகரில் சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது.

    இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். திண்டுக்கல் நகரிலும் கடந்த 2 நாட்களாக கொடைக்கானலை போன்ற சூழலே நிலவி வருகிறது. கடும் பனிமூட்டம் மற்றும் சாரல்மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    • குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன.
    • சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. பிரையண்ட் பூங்காவில் பூச்செடி நாற்றுகளை நடவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதத்தில் சிலுவை பூக்கள் பூக்கும். அதன்படி தற்போது சிலுவை பூக்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.

    எபிடன்ரோபியம், சீசஸ்கிராஸ் என்று தாவரவியல் பெயர் கொண்ட இந்த சிலுவை மலர்கள் குளிர்பிரதேசங்களில் மட்டும் பூக்கக்கூடியதாகும். சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பூத்துக்குலுங்கும். இந்த சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். செட்டியார் பூங்கா மற்றும் தனியார் தோட்டங்களிலும் நடவு செய்யப்பட்ட சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகிறது.

    இந்த வார இறுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதனைதொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகள் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் செய்யப்பட்டு வருகின்றன. 

    • நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. நகரின் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரியும் நிரம்பிவிட்டது.

    இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால் மேல்மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து வானியல் ஆய்வு மையத்துக்கு செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மன்னவனூர், பூம்பாறை ஆகிய மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான பகுதியாகும். நிலச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிலச்சரிவை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் சீரமைப்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதே போல் இரவு முழுவதும் நீடித்த மழையால் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையான அப்சர்வேட்டரி செம்மண் மேடு பகுதியில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரம் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களால் போக்குவரத்து சீரானது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சிபட்டி, குப்பம்மாள்பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு, மரக்கிளைகள் விழுந்தன. இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு-மூலக்கடைஇடையே மலைப்பாதையில் மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதனால் அப்பகுதியில் உள்ள 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன. இதனால் மூலக்கடை, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, உதவிசெயற் பொறியாளர் மாணிக்கம், அய்யம்பாளையம் உதவிமின் பொறியாளர் செல்லகாமாட்சி ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் இன்று மின் வினியோகம் சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் ஆங்காங்கே மலைபாதையில் முறிந்து விழுந்த மரங்களை அப்பகுதி மக்களே அகற்றி வருகின்றனர். தற்போது மழை குறைந்திருந்தாலும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று கொடைக்கானல் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். 

    • கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்திருந்த நிலையில், தற்போது கேரளாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களான தூண்பாறை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கேரள சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கொடைக்கானலில் காலை முதல் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் வாகனங்களை செலுத்தி வருகின்றனர். மலைச்சாலை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    கடும் பனி மூட்டத்தால் சுற்றுலாத்தலங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். 

    • 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருக்குள் வர பாதை வசதி கிடையாது.
    • 400 வருடங்களுக்கு மேலாக ஒரே கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ளது வெள்ளக்கவி கிராமம். முற்றிலும் மலைவாழ் மக்கள் வசித்து வரும் இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 400 வருடங்களுக்கு மேலாக ஒரே கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் விநாயகர், பாலசுப்பிரமணி, வைரவன், பூம்பாறைபட்டியான், கருப்புச்சாமி, வேட்டைக்காரன், அம்மன், பூதநாச்சியார், கன்னிமார்சாமி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

    இந்த கோவில் இப்பகுதி மக்களின் அனைத்து சுக, துக்கங்களிலும் பங்கெடுத்து வருவதாக நம்பி வருகின்றனர். காலையில் வேலைக்குச்செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் கோவிலில் வழிபட்டுதான் தங்கள் பணியை தொடங்குகின்றனர்.

    தங்கள் வீட்டில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட எந்த விஷேசங்கள் நடந்தாலும் இந்த கோவிலில் தான் அதனை நடத்துகின்றனர்.

    இதுபோன்ற சமயங்களில் கிராமத்தில் உள்ள ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் ஆஜராகி விடுகின்றனர். இந்த கோவிலில் வருடத்தில் 2 முறை வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த விழா காலங்களில் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரிவசூல் செய்யப்படுகிறது. ஒருவாரம் நடைபெறும் திருவிழா சமயங்களில் யாரும் காலில் செருப்பு அணிவது கிடையாது. வேலைக்குச் சென்றாலும், பள்ளிக்கு சென்றாலும், வேறு பணிக்கு சென்றாலும் செருப்பு அணியாமலேயே செல்கின்றனர்.

    வெளியூர் நபர்கள் வந்தால் அவர்களுக்கும் இதே கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. செருப்பை ஊருக்கு வெளியில் விட்டு பிறகுதான் உள்ளே வரவேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருக்குள் வர பாதை வசதி கிடையாது. கரடுமுரடான ஒத்தையடி பாதையில் மக்கள் நடந்து செருப்பு அணியாமல் வந்துள்ளனர். தற்போது இந்த ஊருக்கு மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் ஊருக்கு சிமெண்ட் சாலை அல்லது தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது விரைவில் நிறைவேறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து வெள்ளக்கவி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு திருவிழா சமயங்களில் யார் வந்தாலும் செருப்பு அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு பல ஆண்டுகளாக உள்ளது. வெளியூர்காரர்கள், போலீஸ்காரர்கள் வந்தாலும் எங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக்கூறி அவர்களது காலணியை ஊருக்கு வெளியே அகற்றிவிட்டு வர சொல்கிறோம். திருவிழா சமயங்களில் பொதுமக்கள் வழங்கும் வரி பணத்தைக் கொண்டே சாமிக்கு அனைத்து பூஜைகளும் செய்கிறோம்.

    மேலும் எங்கள் காவல் தெய்வமாக கடவுளுக்கு ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்திகிறோம்.

    ஊருக்குள் வாழும் மக்களிடையே எந்த பேதமுமின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். எங்களது இந்த ஒற்றுமைக்கு ஊர் காவல் தெய்வங்களே காரணமாக உள்ளது என்று அனைவரும் நம்புகிறோம். இதனாலேயே கட்டுப்பாடுகள் கடைபிடித்து திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்றனர்.

    • கோடை சீசன் காலத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக்குலுங்கும்.
    • சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை தடுக்க குளிர் சீசனில் பூக்கும் பூச்செடிகளை நடும் பணி தொடங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி அருகே அமைந்துள்ள பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.

    இங்கு கோடை சீசன் காலத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ள நிலையில் பூங்காவில் குறைந்த அளவு பூக்களே உள்ளன. எனினும் சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை தடுக்க குளிர் சீசனில் பூக்கும் பூச்செடிகளை நடும் பணி தொடங்கியுள்ளது.

    பொதுவாக குளிர் சீசனில் சில வகை பூக்கள் மட்டுமே பூக்கும் என்பதால் அதற்கு ஏற்றாற்போல மலர்பாத்திகளை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பாத்தி அமைக்கும் பணி முடிவடைந்தபிறகு மலர் நாற்றுகள் நடப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்கு தகுந்தவாறு விதவிதமான மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது காஸ்மோஸ் மலர்கள் என்படும் பிங்க் நிற பூக்கள் பூத்து குலுங்குகின்றன. 8 இதழ்கள் கொண்ட இந்த மலர்கள் 143 பூக்கள் என்றும், ஐ லவ் யூ பூக்கள் என்றும் அழைக்கப்படும். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதால் அதன்முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    குறிப்பாக கொடைக்கானல் வரும் காதலர்கள் இந்த பூக்களை அதிகம் விரும்பி புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

    • காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.
    • சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் குறைந்த அளவு வெயில் மற்றும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.

    மாறுபட்ட இந்த சூழ்நிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று பகல் முழுவதும் மேகமூட்டம் நிலவிய நிலையில் அவ்வப்போது மழை பெய்து பின்னர் இரவில் கனமழையாக கொட்டி தீர்த்தது.

    இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டமும், சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில் மாணவ-மாணவிகளும் சிரமத்துடனேயே பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. காலை நேரத்தில் நீண்டநேரம் இதேபோல் பனிமூட்டம் நிலவியதால் ஏரிச்சாலையில் ஒரு சில இடங்களில் தீமூட்டி குளிர்காய்ந்தும் வந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு இந்த சீதோஷ்ண நிலை ரம்மியமாக இருந்தாலும் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    ×