search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டுபிடிப்பு"

    • கணக்கெடுப்பில் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • கணக்கெடுப்பில் குமரி வனக்கோட்டத்தில் மொத்தம் 6,055 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஒருங்கிணைந்த நிலப்பறவை கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பறவைகள் கணக்கெடுப்பானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் என மொத்தம் 25 பகுதிகளில் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    பறவைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 191 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. முந்தைய ஆண்டான 2023-ம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பினை ஒப்பிடுகையில் இந்த வருடம் கூடுதலாக 18 இன வகை பறவைகள் அதிகமாக கண்டறியப்பட்டன. அதாவது இந்த கணக்கெடுப்பில் குமரி வனக்கோட்டத்தில் மொத்தம் 6,055 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இந்த பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகை பறவைகளான நீல தலை பூங்குருவி, வடக்கு சிட்டு பருந்து, கதிர்குருவி, பிளைட் நெட்டைக்காலி, பெரிய அலகு கதிர் குருவி ஆகிய வலசை பறவைகள், புதியதாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இங்கு கூடுதலாக வசித்து வருகிற பறவைகளில் நீண்ட அலகு நெட்டைக்காலி, சிறிய வல்லூறு, கேரள கொண்டைக்கழுகு, கருஞ்சிவப்பு வயிற்று கழுகு, மலை இருவாச்சி, பொன்முதுகு மரங்கொத்தி, மஞ்சள் கண் சிலம்பன், பருத்த அலகு கதிர்குருவி ஆகிய பறவைகளும் புதியதாக கண்டறியப்பட்டுள்ளன.

    இத்தகவலை மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    • மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.
    • 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு முழுவதும் தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    முன்னாள் மாவட்ட வன அலுவலர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பேராசிரியர்கள் அசோக், கீர்த்திவாசன், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, வனத்துறை அலுவலர்கள் ரஞ்சித், இளஞ்செழியன் ஆகியோருடன் தன்னார்வலர்கள், மாணவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.

    இந்த கணக்கெடுப்பில் குமரிப்புறா, மாங்குயில், கதிர்குருவி, அரசவால் ஈப்பிடிப்பான் ஆகிய இப்பகுதிக்கான சிறப்பு அரிய வகை பறவைகள், மயில், மாடப்புறா, மணிப்புறா, செண்பகம், சுடலைகுயில், பொன்முதுகு மரங்கொத்தி உள்பட 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 

    • வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர்.
    • பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், தேவதானப்பட்டி, பழனி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

    இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக மும்பை, டெல்லி, கேரளா, பாண்டிச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களுடன் கொடைக்கானலில் பயிலும் உள்ளூர் மாணவ-மாணவிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மற்றும் வனப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து 25 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கரடிச்சோலை, ரெட் ராக், பாம்பே சோலா, புலிச்சோலை, வட்டக்கானல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் கணகக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த கணக்கெடுப்பில் பாரடைஸ், பிளைகேட்சர், சாம்பல் நெற்றி, பச்சைபுறா, மாம்பழச்சிட்டு, நீல நிற கரும்பிடாரி, கருந்தலை மாங்குயில், கருந்தலை குயில் கீச்சான் உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டன. இன்றும் 2-வது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
    • நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் குமணன் தொழு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான, செல்வம் கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வருசநாடு குமணன்தொழு அருகில் அருவா தீட்டுப்பாறை பகுதியில், மொக்கை என்பவரின் காட்டில் 3000 ஆண்டுகள் பழமையான 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் 5 க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பல கல்வட்டங்களும் நெடுங்கற்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கல்வட்டங்கள் 13 அடி விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.

    குமணன் தொழுவிலிருந்து வெள்ளையம்மாள்புரம், சின்னமனூருக்கு கால்நடையாக செல்வதற்கு பழமையான பாதை ஒன்று இவ்வழியாக செல்கிறது. வழி நெடுகிலும் தீட்டுக்கற்கள் காணப்படுவதால் இப்பகுதி அருவா தீட்டுக் கணவாய் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

    பெருங்கற்காலம் தொட்டு தற்காலம் வரை தீட்டுக்கற்களில் அருவா உள்ளிட்ட ஆயுதங்களைத் தீட்டும் வழக்கம் இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருவது வியப்புக்குரியது.

    வருசநாட்டுப் பகுதியில் பெருங்கற்காலத்தில் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாக இந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன.

    • கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.
    • இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கெங்குவார் பட்டியில் உள்ள பழமையான ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் அப்பாஸ் ஆகியோர் கள ஆய்வு செய்ததில் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

    இது குறித்து ஆய்வாளர் செல்வம் கூறுகையில்

    திருப்பணி செய்பவர்கள், கோயிலைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றும் போது, மண்ணிற்குள் புதைந்திருந்த 2 கல்வெட்டுகளை எடுத்து வைத்திருப்பது கள ஆய்வில் தெரியவந்தது. முதல் கல்வெட்டு கோவில் அதிட்டான கல்பலகையில் 2 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் 5 வரிகளில் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.

    தவச்சதுர்வேதி மங்கலத்து பிரக்மரு நாட்டுச் செட்டியும் நீ என தொடங்கும் முதல் பகுதியில் இக்கோயிலில் இருக்கும் இறைவனின் பெயர் திருவகத்தீஸ்வர முடைய நாயனார் என்பது புலனாகிறது. சதுர்வேதி மங்கலம் என்பது பிராமணர்களுக்கு அரசு வழங்கிய நிலம். வடபகுதியில் இருக்கும் பிரக்மாரு நாட்டைச் சேர்ந்த செட்டி என்பவர் கொடுத்த வரியும், பிற நில வரிகளும் கூறுவதாக கல்வெட்டு செய்தி இருக்கலாம். மூவேந்த வேளாண் என்ற அதிகாரியின் முன் கல்வெட்டு எழுதப்பட்டிருப்பது தெரிய வருகிறது.


    கல்லின் பக்கவாட்டில் உள்ள 2-ம் பகுதி கல்வெட்டில் ஆறு வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. திருவரகத்தீஸ்வரர் உடைய நாயனார் கோவிலில் உள்ள விநாயகருக்கு தினமும் திருவமுது படைப்பதற்காக அரைக்காணி முந்திரிகை அளவுள்ள நிலத்தை மிழலைக் கூற்றத்து நடுநாட்டுச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் முன்னிலையில் தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிப்பிடுவதாக உள்ளது. மிழலைக்கூற்றம் என்பது அறந்தாங்கி வட்டத்து தென்பகுதியும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ் பகுதியும் கொண்டது ஆவுடையார் கோவில் வட்டாரப் பகுதி. இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது. வைகை ஆற்றின் முக்கிய கிளை நதியான மஞ்சளாற்றின் வடகரையில் இக்கோவில் அமைந்திருப்பதால் பிற்கால பாண்டியர் ஆட்சி காலத்தில் இப்பகுதி செழிப்புற்றிருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்றார்.

    • கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது.
    • கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம், காமன் தொட்டி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை ஜெயலட்சுமி, ஆகியோர் தொல்லியல்துறை சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தங்கம்மாள்புரத்தில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள ஜி.ஆர்.டி. பண்ணை உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம், பேச்சியம்மன் சிலை, அய்யனார் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை போன்ற பழமையான சிற்பங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


    தலையில் ஜூவால கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றைக் கீறிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும் பயமுறுத்தும் கண்கள், அகன்ற மூக்கு, நீளமான வாய், பெரிய காதுகள், பெரிய பரந்த பாதங்கள், மார்புக்கூடு எலும்புகள் தெரியும் வகையில், பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் பேச்சியம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று மருவி விட்டது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுத்தோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சி அம்மனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளிலும் பேச்சியம்மன் வழிபாடு காணப்படுகிறது.

    பொதுவாக அய்யனார் நிலை மண்டலமர்வு எனும் உத்குடி ஆசனத்தில் சிற்பம் வடிவமைப்பதுண்டு. ஆனால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம், தனித்தனி இழைகளாக சுருண்டு அழகுற அமைந்துள்ளது. முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், சரபள்ளி, சவடி, பூணூல், உத்தரபந்தம், கடகம், கைவளை, காப்பு, இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அழகுற அய்யனார் அமர்ந்திருக்கிறார்.

    இவர் சிவபெருமானின் மகன் என்றும் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களை காக்க வந்தவர் என்றும் நம்பப்படுகிறது. சங்க காலம் முதலே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வடிவமானது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். பூணூல் அணியப்பட்டுள்ளது. கரந்தை மகுடம், கைகளில் வளையல், கால்களில் வீரக் கழல், கால்விரல் அணிகள், அபய வரத முத்திரையுடன் பின் வலது கையில் மழு உள்ளது. இடது மேற்கையில் மான் உருவம் சிதைந்துள்ளது. சாந்த சொரூப நிலையில் சிற்பம் உள்ளது.


    "தெக்கினான்" என்றும் தென்முகக் கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். மேற்கண்ட சிற்பங்கள் பாண்டியர் காலத்துக்கே உரிய சிற்ப நுட்பத்தோடும் உச்சபட்ச நயத்தோடும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

    மற்றொரு சிலையான சிவலிங்கம், பத்ம பீடம் (பிரம்மா பகுதி) அதாவது தாமரைப் பூ கவிழ்ந்த நிலை, அதற்கு மேல் ஆவுடை உள்ளது. பெருவுடையார் (லிங்கபாணம்) இல்லாமல் உள்ளது.

    கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், மதுரை சொக்கநாதருக்கும் பார்வதி அம்மனுக்கும் நெய்விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை தொடர் வழிபாட்டில் இக்கோவில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்று கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகம்.
    • வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டுபிடித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பூமியை போன்று வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டு பிடித்துள்ளது.

    நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜிஜே 9827டி என்று பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் இந்த கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஹப்பிள் தொலைநோக்கி தற்போது கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 800 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

    இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
    • ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின் போது தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் சிலர் போலியாக தங்களது மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு திரிவதாகவும், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படியும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறிவந்தனர்.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அரசு போலீஸ் வாகனங்கள் அல்லாது பிற தனியார் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலியாக போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியவர்களை கண்ட றிந்து அதனை கிழித்தனர். இவ்வாறாக 127 வாகனங்களில் இருந்து போலீசாரால் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டது.

    மீண்டும் இதேபோல் போலியாக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    • சுமார் 3200 கி.மு. முதல் 2600 கி.மு. வரை சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக நம்புகிறார்கள்.
    • குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன. உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள கிராமம் கதீயா. இங்கு ஒரு மணல் குன்று ஆராய்ச்சியாளர்களின் கண்களில்பட்டது. இந்த மணல் குன்றினை தொல்லியல் அறிஞர்கள் அகழாய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் கண்ட காட்சி வியக்க செய்தது. மணல் குன்றின் உள்ளே பழங்கால குடியிருப்பு புதைந்து கிடப்பது போன்ற அடையாளங்கள் தென்பட்டன. இதை தொடர்ந்து கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் ராஜேஷ் தலைமையில் இந்திய, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இந்த 40 ஏக்கர் பரப்பளவிலான தளத்தில் 3 கட்டமாக அகழாய்வு செய்தனர். அப்போது அது 5,300 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் என தெரியவந்தது. உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமூகத்தைச் சேர்ந்த 500 கல்லறைகள் அதில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கல்லறைகளில் சுமார் 200 கல்லறைகள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.

    ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் இந்தச் சமூகம், சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுடு செங்கல் நகரங்களில் வாழ்ந்த எளிமையான விவசாயிகள் மற்றும் வணிகர்களால் நிறுவப்பட்டது இது சுமார் 3200 கி.மு. முதல் 2600 கி.மு. வரை சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.

    இதுவரையிலான அகழ்வாராய்ச்சிகள் ஒரே ஒரு முழுமையான ஆண் மனித எலும்புக்கூட்டையும், மண்டை ஓடு துண்டுகள், எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பகுதியளவில் பாதுகாக்கப்பட்ட எலும்பு க்கூட்டு எச்சங்களையும் மீட்டுள்ளனர்.மேலும் 100-க்கும் மேற்பட்ட வளையல்கள் மற்றும் 27 ஓடுகளால் ஆன மணிகள். பீங்கான் பாத்திரங்கள், கிண்ணங்கள், தட்டுகள், பானைகள், சிறிய குடங்கள், குவளை, களிமண் பானைகள், தண்ணீர் கோப்பைகள், பாட்டில்கள் மற்றும் ஜாடிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கல்லறைகளில் தனித்துவமான அம்சங்கள் உள்ளன, இதில் சில முட்டை வடிவமானவை. மற்றவை செவ்வக வடிவமானவை. குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன. உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அமில மண் காரணமாக பெரும்பாலான எலும்புகள் கரைந்துவிட்டன.

    எகிப்து மற்றும் மெசப டோமியாவில் உள்ள மேல் தட்டு மக்களின் இறுதிச் சடங்குகளைப் போலல்லாமல், இவர்களின் இறுதிச் சடங்குகள் எளிமையானவை இருந்தன. இறந்தவர்களுடன் எந்த நகைகளும் ஆயுதங்களும் வைக்கப்படவில்லை.

    இங்கு, பெரும்பாலான உடல்கள் துணியால் சுற்றி, செவ்வக வடிவிலான மரப் பெட்டிகளில் வைக்கப்பட்டன. கல்லறைக்குழி பெரும்பாலும் மண்பாண்ட பொருட்களால் நிரப்பப்பட்டிருக்கும், பின்னர் பெட்டி அதில் இறக்கப்படும் என்று விஸ்கான்சின் மடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் அறிஞரான ஜொனதன் மார்க் கெனோயர் கூறுகிறார். சிலர் வளையல்கள், மணிகள், அலங்காரப் பொருட்கள், செம்பால் செய்யப்பட்ட கண்ணாடியுடன் புதைக்கப்பட்டனர்.

    முதியவர்கள், அவர்கள் பயன்படுத்திய உணவைப் பரிமாறுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு வகையான பாத்திரங்களுடன் புதைக்கப்பட்டுள்ளனர்,

    ஆனாலும் இந்த கல்லறைத் தளத்தில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன.

    இதன் ரகசியங்கள் என்ன? இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார்? என்ற கேள்விகளும் எழுகின்றன. இந்தக் கல்லறைகளில் காணப்படும் லாபிஸ் லாசுலி என்னும் நீல நிற கற்கள் தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. கல்லறைகள் நன்றாக வரையறுக்கப்பட்ட கல் சுவர்களுடன் கட்டப்பட்டிருப்பது, மக்கள் கற்களைக் கொண்டு கட்டுவதில் தேர்ச்சி பெற்றிருந்ததைக் குறிக்கிறது. இங்கு கிடைத்த மனித உடல் எச்சங்களை வேதியியல் ஆய்வுகள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்தால் இங்கு வாழ்ந்து இறந்த ஆரம்பகால மக்கள் பற்றி மேலும் அறிய உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    • திருச்சுழி அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • நடுகல்லில் இரண்டு உருவங்கள் சிற்பமாக செதுப்பட்டுள்ளன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் தும்மு–சின் னம்பட்டி கிராமத்தில் ஒரு பழமையான சிலை இருப் பதாக குலசேகர–நல்லூ–ரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கொடுத்தார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர், முனைவர்கள் தாமரைக் கண்ணன், செல்லபாண்டி–யன் போன்றோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவை ஆயி–ரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியரின்சிற் பம் என்பது தெரியவந் தது.இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், நமது முன்னோர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக நினைவு கற் களை நட்டு வைத்து வழி–பட்டு வந்துள்ளனர். அந்த கற்கள் தொடக்கத்தில் ஒழுங்கற்ற வையாகவும், உயரமாகவும் இருந்தன. அதை நெடுங்கல் என்று அழைப்பர்.

    இந்த நெடுங்கல் வழி–பாட்டின் தொடர்ச்சியாக நடுகல் வழிபாட்டை கூற–லாம்.இந்த நடுகற்களில் கல்வெட்டுகள், உருவங்கள் எவையேனும் ஒன்று இடம் பெற்றிருக்கும் அல்லது இரண்டுமே இடம்பெற்று இருக்கும்.

    தற்போது நாங்கள் கண்ட–றிந்த நடுகல்லில் இரண்டு உருவங்கள் சிற்பமாக செதுப்பட்டுள்ளன. ஒன் றரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக் கப்பட்டுள்ளது.

    இதில் இரண்டு வீரர்கள் அள்ளி முடிந்த கொண்டை–யுடனும், காதுகளில் பத்திர குண்டலங்களும், இடையில் இடைக்கச்சையும் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் வலது புறம் உள்ள வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் இடம்பெற்றுள்ளது.

    இடதுபுறம் உள்ள வீர–னின் வலதுகையில் வாள் போன்ற ஆயுதமும், இடது கையில் ஒரு ஆயுதமும் ஏந்தி போர் புரியும் வீரர்கள் போன்று சிற்பம் முற்கால பாண்டியருக்கே உரிய கலைபாணியில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் உருவ அமைப்பை வைத்துப் பார்க் கும்போது அக்காலத்தில் இப்பகுதியில் நடந்த பூசலில் ஈடுபட்டு ஊர் நலனுக்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறினர்.

    • வீரனின் தியாகத்தை போற்றும் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் கட்டனூர் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வா ளர்களான செல்ல பாண்டி யன், ஆய்வாளர்.ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்ட போது பழமையான நடுகல்லை தெப்பக்குளத்திற்குள் கண்டறிந்தனர். இந்த நடுகல் பற்றி அவர்கள் கூறிய தாவது:-

    பொதுவாக நடுகல் எடுக்கும் மரபு நமது முன்னோர்கள் பன்னெடுங்காலமாகவே பின்பற்றிவருகின்றனர். போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைபவர்களுக்கும், பொதுகாரியம் கருதி உயிர் துறப்பவர்களுக்கும் அவரின் தியாகத்தை போற்றி நடுகல் எடுத்து வழிபடுவர். அந்த வகையில் தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லானது நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர். அதில் வீரன் ஒருவன் தலைப்பகுதி இடது புறம் சரிந்த கொண்டையுடனும், நீண்ட காதுகளும், மார்பில் ஆபரணங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இடையில் இடைக்கச்சையும் அதில் குறுவாள் சொருகியபடியும் நின்ற கோளத்தில் வணங்கியபடி சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது.

    சிற்பத்தின் மேலே கிடைமட்டமாக 14 வரிகளும், மேலிருந்து கீழாக இரண்டு வரிகளும் என 16 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள எழுத்துக்கள் முற்றிலும் சேதமாகியுள்ளதால் பொருள் அறிவதில் சிரமம் உள்ளது. ஆயினும் சில வரிகள் வாசிக்கும்படி உள்ளது. அவற்றில் வெகு தானிய (பகுதானிய) வருடம் என்று தமிழ் வருடங்கள் அறுபதில் 12 வது வருடமாக வரும் வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆனி மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இவ்வீரன் ஊரின் நன்மை பயக்கும் செயலில் ஈடுபட்டு இறந்திருக்க வேண்டும். அவரின் தியாகத்தை போற்றும் விதமாக இந்த நடுகல்லை நிறுவி இருக்க வேண்டும். இந்நடுகல்லை தற்போது சீர்காழியை சேர்ந்தவர்களும்,இவ்வூர் பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர் என்றும் இந்நடுகல்லின் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொண்டனேரி கண்மாயில்‌ 17-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கழுத்தணிகலன், கைகாப்பு ஆகியவையும் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மடத்துப்பட்டி அருகே அமைந்துள்ள கொண்டனேரி கண்மாயில் கல் சிற்பங்கள் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினித் தகவல் அளித்தார். அதன் அடிப்ப–டையில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வர–லாற்றுத்துறை உதவிப்பேரா–சிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ.கந்தசாமி அப்பகுதியில் களப்பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்குள்ள கண்மாயில் 2 நடுகல் சிற்பங்க–ளும், ஒரு சதிக்கல்லும் கல் மேடையமைத்து வரி–சையாக நிறுத்தி வைக்கப் பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கல் சிற்பங்கள் அனைத் தும் கி.பி. 17 ஆம் நூற்றாண் டைச் சார்ந்ததாக கருதப்ப–டுகிறது. வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்க–ளுக்கு தனித்தனியே எடுக்கப்பட்ட நடுகல் மற்றும் வீரன் இறந்தவுடன், மனை–வியும் சேர்ந்து தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ் வுக்காக எடுக்கப்பட்ட சதிக் கல்லும் காணப்படுகிறது.

    முதல் நடுகல் சிற்பம் கூம்பு வடிவில் மாடக்கோ–வில் போன்று வடிவமைத்து மழை, வெயில் தாக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் சிற்பத்தில் வீரன் நின்ற நிலையில் தனது இடது கையில் ஈட்டியை பிடித்துள்ளது போன்றும், வலது கையில் இடுப்பில் உள்ள வளைந்து நெளிந்த குறுவாளை கை வளை–யத்தில் இணைத்துள்ளது போன்றும் காட்டப்பட்டுள் ளது.

    வீரனின் வலது பக்க தலைக்கொண்டை அலங்கா–ரம், வீரனின் உருண்டு திரண்ட கண்களும், முறுக்கு மீசையுடனும், பனை ஓலை காதணிகளை அணிந்தவா–றும் சிற்பம் காணப்படுகிறது.

    இரண்டு காதுகள் மற்றும் கைகளுக்கு இடையில் துவாரங்கள் கொண்டு புடைப்புச் சிற்பமாக செதுக் கப்பட்டுள்ளது. கழுத்தணி–கலன்களும், கைகாப்பு, கைப்பட்டைகளும், இடை ஆடை குஞ்சம் வைத்து மடித்து கட்டப்பட்டுள்ளதும், இரண்டு கால் மூட்டுகளின் பாதுகாப்புக்காக மூட்டுக் கவசமும், காற்சிலம்பு அணிந்துள்ளதையும் இச்சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

    இரண்டாவது நடுகல் சிற்பத்தின் மேல் பகுதி இரண்டடுக்கு மாடகோபுர அமைப்பு போன்று வடிவ–மைக்கப்பட்டு கீழே வீரன் ஒருவன் நின்ற நிலையில் குத்தீட்டியின் மேல்பகுதியை தனது வலது கை கொண்டும், கீழ்ப்பகுதியை இடது கை கொண்டும் பிடித்து தரை–யில் ஊன்றியபடி சிற்பம் அமைந்துள்ளது.

    வீரனின் இடது பக்க தலைக் கொண்டையலங்கா–ரம், நீண்ட காதணிகள், கழுத்தணிகள், கைக்காப்பு, பூ மாலை அலங்காரம், மார்பில் சன்ன வீரம், இடை ஆடையில் இடுப்பு பெல்ட் இணைத்து கட்டப்பட்டு குஞ்சம் தொங்கிய நிலையில், காற்சிலம்புடன் வீரனின் சிற்பம் வடிவமைக்கப்பட் டுள்ளது. மூன்றாவதாக, சதிக்கல் சிற்பத்தில் வீரனும், அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் வடிவ–மைக்கப்பட்டுள்ளது.

    வலதுபுறத்தில் அமர்ந் துள்ள வீரன் வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி வைத்துள்ள நிலையில், வீரனின் வலது கையில் வாள் ஒன்றை கையில் உயர்த்திப் பிடித்து இருப்பதும், இடது கையை கீழே மடக்கி வைத்திருப்பது போன்றும், அருகில் அமர்ந் துள்ள வீரனின் மனைவியின் வலது கையில் அல்லி மலரை உயர்த்திக் காட்டி இருப்பதும், இடது கையில் மங்கலப் பொருள் ஒன்றை வைத்திருப்பது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணிகலன், கைகாப்பு ஆகியவையும் சிற்பத்தில் காட்டப்பட்டுள் ளது.

    சிற்பத்தின் மேற்பகுதியில் மூன்று கர்ணக்கூடுகளில் சிங்கமுகங்கள் காட்டப் பட்டுள்ளது. இம்மூன்று சிற்பங்களையும் கருப்புசாமி, கருப்பாயி, சுடலைமாடன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கண்மாயில் நீர் நிரம்பி இருக்கும் பொழுது சிற்பங் கள் நீருக்குள் மூழ்கி இருந் துள்ளது. இங்கு காணப்படும் வீரக்கல் மற்றும் சதிக்கல் சிற்பங்களைக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன் வீரத்தை வெளிப்படுத்தும் வீர நிகழ்வுகள் இப்பகுதியில் நடந்துள்ளதை அறிய முடி–கிறது.

    ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நடுகற்கள், சதிச்சிற்பம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே பல சதிக்கல் சிற்பங்கள் காணப்படுவதால் பழங்காலத்தில் மக்களின் வாழ்வியல் சார்ந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கந்தசாமி கூறினார்.

    ×