search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாணார்பாளையத்தில், விவசாய தோட்டத்தில் இருந்த சிவலிங்கத்தை எடுத்து மாற்று இடத்தில் வைக்க முயற்சி
    X

    சாணார்பாளையத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சிவலிங்கம் இருப்பதை படத்தில் காணலாம்.

    சாணார்பாளையத்தில், விவசாய தோட்டத்தில் இருந்த சிவலிங்கத்தை எடுத்து மாற்று இடத்தில் வைக்க முயற்சி

    • சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும் போது ஏறக்குறைய 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும் எனவும், அகழ்வாய்வு நடத்தும் போது தொன்மையான சிலைகள் சிற்பங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிவலிங்கம் சூத்திரக் குறியீட்டுடன் காவிரி ஆற்றை பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும் போது ஏறக்குறைய 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும் எனவும், அகழ்வாய்வு நடத்தும் போது தொன்மையான சிலைகள் சிற்பங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிவலிங்கம் உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் நடராஜ் கூறுகையில், கடந்த 22 வருடங்களாக நான் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். அப்போது இது சிவலிங்கம் என்று எனக்கு தெரியாது. இது பாண்டியன் நட்ட கல் என்று தான் பலர் கூறி வந்தனர். 8 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து பார்த்த சிவனடியார் ஒருவர், இது சிவலிங்கம் என கூறினார். இதையடுத்து சிவனடியார்கள் இங்கு வந்து சிவலிங்கத்தை தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். 8-அடி உயரமுள்ள இந்த சிவலிங்கத்தை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராள மான சிவனடி யார்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தின் நடுவே இருந்த சிவலிங்கத்தை, பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு ஏதுவாக தோட்டத்திற்கு வெளியே வைப்பதற்காக சிவலிங்கம் இருந்த பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஜோதி மற்றும் போலீசார், தொல்லியல் துறை ஒப்புதல் இல்லாமல் சிவலிங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் சிவனடியார்களுக்கும், வருவாய்த்துறை, போலீசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தொல்லியல் துறையினரை வரவழைத்து அவர்களின் ஆலோசனையின் பேரில் சிவலிங்கத்தை எடுத்து மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

    Next Story
    ×