search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளக்கவி கிராமம்"

    • 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருக்குள் வர பாதை வசதி கிடையாது.
    • 400 வருடங்களுக்கு மேலாக ஒரே கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ளது வெள்ளக்கவி கிராமம். முற்றிலும் மலைவாழ் மக்கள் வசித்து வரும் இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 400 வருடங்களுக்கு மேலாக ஒரே கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் விநாயகர், பாலசுப்பிரமணி, வைரவன், பூம்பாறைபட்டியான், கருப்புச்சாமி, வேட்டைக்காரன், அம்மன், பூதநாச்சியார், கன்னிமார்சாமி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

    இந்த கோவில் இப்பகுதி மக்களின் அனைத்து சுக, துக்கங்களிலும் பங்கெடுத்து வருவதாக நம்பி வருகின்றனர். காலையில் வேலைக்குச்செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் கோவிலில் வழிபட்டுதான் தங்கள் பணியை தொடங்குகின்றனர்.

    தங்கள் வீட்டில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட எந்த விஷேசங்கள் நடந்தாலும் இந்த கோவிலில் தான் அதனை நடத்துகின்றனர்.

    இதுபோன்ற சமயங்களில் கிராமத்தில் உள்ள ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் ஆஜராகி விடுகின்றனர். இந்த கோவிலில் வருடத்தில் 2 முறை வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த விழா காலங்களில் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரிவசூல் செய்யப்படுகிறது. ஒருவாரம் நடைபெறும் திருவிழா சமயங்களில் யாரும் காலில் செருப்பு அணிவது கிடையாது. வேலைக்குச் சென்றாலும், பள்ளிக்கு சென்றாலும், வேறு பணிக்கு சென்றாலும் செருப்பு அணியாமலேயே செல்கின்றனர்.

    வெளியூர் நபர்கள் வந்தால் அவர்களுக்கும் இதே கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. செருப்பை ஊருக்கு வெளியில் விட்டு பிறகுதான் உள்ளே வரவேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருக்குள் வர பாதை வசதி கிடையாது. கரடுமுரடான ஒத்தையடி பாதையில் மக்கள் நடந்து செருப்பு அணியாமல் வந்துள்ளனர். தற்போது இந்த ஊருக்கு மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் ஊருக்கு சிமெண்ட் சாலை அல்லது தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது விரைவில் நிறைவேறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து வெள்ளக்கவி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு திருவிழா சமயங்களில் யார் வந்தாலும் செருப்பு அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு பல ஆண்டுகளாக உள்ளது. வெளியூர்காரர்கள், போலீஸ்காரர்கள் வந்தாலும் எங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக்கூறி அவர்களது காலணியை ஊருக்கு வெளியே அகற்றிவிட்டு வர சொல்கிறோம். திருவிழா சமயங்களில் பொதுமக்கள் வழங்கும் வரி பணத்தைக் கொண்டே சாமிக்கு அனைத்து பூஜைகளும் செய்கிறோம்.

    மேலும் எங்கள் காவல் தெய்வமாக கடவுளுக்கு ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்திகிறோம்.

    ஊருக்குள் வாழும் மக்களிடையே எந்த பேதமுமின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். எங்களது இந்த ஒற்றுமைக்கு ஊர் காவல் தெய்வங்களே காரணமாக உள்ளது என்று அனைவரும் நம்புகிறோம். இதனாலேயே கட்டுப்பாடுகள் கடைபிடித்து திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்றனர்.

    ×