search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    • ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
    • 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

    இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.

    • சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் இஸ்ரேல், இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. இதில் விசாரணை நடை பெற்று வரும் நிலையல் நேற்று கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியது.

    அதில், காசாவில் இனப்படுகொலை தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சர்வதேச கோர்ட்டு தீர்ப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இஸ்ரேல் மீது சுமத்தப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறானது மட்டுமல்ல, அது மூர்க்கத்தனமானது, எல்லா இடங்களிலும் உள்ள கண்ணியமான மக்கள் அதை நிராகரிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டையும் போலவே, இஸ்ரேலுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு உள்ளார்ந்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையை இஸ்ரேலுக்கு மறுக்கும் மோசமான முயற்சி. இஸ்ரேல் அரசுக்கு எதிரான அப்பட்டமான பாகுபாடு ஆகும். எங்கள் நாட்டைப் பாதுகாக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் தேவையானதை தொடர்ந்து செய்வோம்.

    ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும். இஸ்ரேலின் போர் ஹமாசுக்கு எதிரானது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரானது அல்ல. தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவோம், பொதுமக்களை ஹமாஸ் அமைப்பினர் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே காசாவின் கான்யூனுஸ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் நிலையில் அங்குள்ள நாசர் ஆஸ்பத்திரியில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதே போல் அங்குள்ள மற்ற ஆஸ்பத்திரிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    • தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா.
    • வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்- மந்திரி மற்றும் மந்திரிகள் இணைந்து சென்று மக்களை சந்திக்கும் நவ கேரள சதஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா. மற்ற மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை காட்டிலும் கூடுதல் சேவைகளை வழங்கி நாட்டிற்கு முன்னோடியாக நமது மாநிலம் திகழ்கிறது.

    சுகாதாரத்துறை முழுவதும் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சமீபத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. பெயர் மாற்றத்தின் மூலம், சுகாதாரத்துறையில் மாநிலத்தின் சாதனைகளுக்கான பெருமையை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திருட முயற்சிக்கிறது. இது ஆரோக்கியமான செயல் அல்ல.

    மேலும் கேரளா, கோ-பிராண்டிங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, பல்வேறு மானியங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களில் மத்திய பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தலின்போது தி.மு.க. அளித்த 511 வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்
    • துறையூர் நடைபயணத்தில் பேச்சு

    துறையூர்,

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று துறையூர் சட்டமன்றத் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். அவருக்கு திருச்சி புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    துறையூர் சட்டமன்ற தொகுதியில் துறையூர் சிலோன் ஆபீஸ் பகுதியில் நடைபயணத்தை ஆரம்பித்த அண்ணாமலை பெரிய கடை வீதி, பாலக்கரை,திருச்சி ரோடு வழியாக சென்று துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு தனது நடை பயணத்தை முடித்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:-

    திமுக அரசு பொறுப்பேற்ற 30 மாதங்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக துறையூர் பகுதியில் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவரின் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தி.மு.க.வினரால் பலமாக தாக்கப்பட்டார்.

    வருவாய் துறையில் பணிபுரியும் வி.ஏ.ஓ., ஆர்.ஐ. உள்ளிட்ட அரசு அலுவலர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்கும் நிலையில் உள்ளது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, சொல்லும் படி எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. குரல் கொடுத்த உடன் விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டது. இதிலிருந்தே விவசாயிகளின் மீது தி.மு.க.விற்கு எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

    தி.மு.க.வில் உள்ள பல நபர்களுக்கு சொந்தமாக மருத்துவ கல்லூரி இருப்பதால், தங்களிடம் உள்ள சீட்டுகளை விற்பனை செய்ய முடியாததால், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு பி.எம். கிசான் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய், 100 நாள் வேலை திட்டத்திற்கு 55 ஆயிரம் கோடி, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது.

    ஆனால் தி.மு.க.வோ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 511 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இது நாள் வரை அதில் 20 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. உதாரணமாக துறையூர் தொகுதிக்கு புதிய பேருந்து நிலையம், பாதாள சாக்கடை திட்டம், புறவழிச்சாலை, அரசு கலைக் கல்லூரி, முந்திரி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறியும், இதில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை.

    தற்சமயம் தமிழக முழுவதும் வாக்காளர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அனைத்து இளைஞர்களும் வாக்காளராக பதிவு செய்து மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி 3-வது முறையாக பிரதமராக அமர பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்து ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி, சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் பட்டியலின அரசு பெண் ஊழியருக்கு சாதிய வன்கொடுமை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • இளமுருகு முத்து கண்டனம்

    புதுக்கோட்டை,

    அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது,இந்த சூழலில் காவல்துறை நடவடிக்கையை துரித படுத்தாமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.கடந்த அக்டோபர் மாதம் 20 -ந் தேதி புதுக்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தில் பணியாற்றும் சுகந்தி என்ற பட்டியலின அரசு ஊழியரை அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஆதிக்க சமுகத்தை சேர்ந்த நபர் அவருடைய ஜாதியை சொல்லி அருவருக்க தக்க வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.இதனால் மன உழைச்சளுக்கு ஆளான சுகந்தி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திலும் மேலும் புதுக்கோட்டை துணை காக்காணிப்பாளரை நேரில் சந்தித்தும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் மனு அளித்துள்ளார்.இது நடந்து ஒரு மாத காலமாகியும் காவல் துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேங்கை வயல் சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் இன்னும் ஒரு குற்றவாளிகள் கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவங்களில் காவல் துறை பாரமுகம் காட்டுவது வேதனை அளிக்கிறது.இந்த விஷயத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை கையில் எடுக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை நிறுவனங்கள் வழங்கவில்லை.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.

    விருதுநகர்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு 14 வாரம் ஊதியம் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மந்திரிகளுக்கும், பிரதமர்களுக்கும் கடிதம் எழுதியும் உள்ளேன். இதன் எதிரொலியாக தற்போது 13 வாரங்களுக்கு மட்டும் ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை நடவடிக்கை எடுத்த மத்திய நிதி மந்திரிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2020-21-ம் நிதியாண்டிற்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்பட வில்லை. இந்த பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க படவில்லை. இதற்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பிரதமர் கிஷான் திட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசை தவிர்த்து நேரடியாக விவசாயிகளுக்கு நிதி அனுப்ப நடவடிக்கை எடுப்பது நல்ல நடைமுறையாகாது.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளார். தமிழக அரசு அரசியல் சாசனப்படி இதற்காக சட்ட சபையை கூட்டி மசோதா தாக்கலை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பிரச்சி னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது. சுதந்திர போ ராட்டத்தில் பழங்குடியினர் பங்கு குறித்து மாநில அரசு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கும்.

    விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் மத்திய நிதி மந்திரியின் நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு இதுவரை எந்த தகவலம் இல்லை. இதில் என்னை புறக்கணிப்பது மாவட்ட மக்களை புறக்கணிப்பது ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாகன், நாகேந்திரன், வெயிலுமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

    100 நாள் தொழிலாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 14 வார கால ஊதியம் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தார். மேலும் போராட்டத்தையும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 13 வார கால ஊதியம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருதுநத்தத்தை சேர்ந்த 100 நாள் திட்ட பணியாளர் சகுந்தலா கூறுகையில், மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் நடவடிக்கையால் சம்பள நிலுவை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    பணித்தள பொறுப்பாளர் மகாலட்சுமி கூறுகையில், கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட சம்பள நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.13 வார கால நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்றும் சில நாட்களில் மீதியுள்ள சம்பள நிலுவை தொகையும் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குரல் கொடுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


    • மக்கள் மீது அக்கறை இல்லாத தி.மு.க. அரசு என ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
    • முடிவில் கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், சரவணன், மாவட்ட நிர்வாகி கள் திருப்பதி, வெற்றி வேல், ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர்மணிமாறன் வர வேற்றார்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கி றார்கள். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக, செயல்பாடத அரசாக, வளர்ச்சியை பற்றி சிந்திக்காத அரசாக தி.மு.க. உள்ளது. தன்னுடைய வாரிசுகளை மட்டும் பற்றி சிந்திப்பதை கடமையாக கொண்டுள்ள முதல மைச் சரை இந்த நாடு பெற்றி ருப்பது வேதனை யிலும் வேதனையாக உள்ளது. மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தியோடு இருக்கி றார்கள்.

    பூத் கமிட்டி உறுப்பினராக இருக்கின்ற நீங்கள் எதிர்ப்பு களை வாக்குகளாக மாற்ற முடியும். களத்தில் நின்று போராடி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து இயக்கத்தின் ஆணிவேராக கட்டிக் காக்க கூடியவர்கள் இயக்கத்தின் கிளை செயலா ளர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான். எனவே உங்களை எப்போ தும் வலிமையோடு வைத்தி ருக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடியார் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலயமணி, பாண்டுரங்கன், தெய்வ தர்மர், தக்காளி முருகன், விசு, ஜெயராமன், மலைச்சாமி, பிச்சை, மூர்த்தி, செந்தில், பாலாஜி, பாஸ்கரன், கருப்பட்டி ராமநாதன் சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.

    • இளைஞர்களை ஏமாற்றி கையெழுத்து இயக்கம் நடத்துகிறது தி.மு.க. என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி உள்ளார்
    • ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற யாத்திரையின் போது பொதுமக்கள் மத்தியில் பேசினார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர், மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 104-வது பாத யாத்திரையை தொடங்கினார். புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை, நான்கு ரோடு சந்திப்பு வரை அவர் யாத்திரை மேற்கொண்டார்.

    அவர் சென்ற வழி அனைத்திலும் ஏராளமான பொதுமக்கள் குறை கேட்டு அவர்களுடைய மனுக்களை பெற்றுக்கொண்டார். யாத்திரையின் முடிவில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகு கொலை கொள்ளை அதிகரித்து உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்கள் பதவியேற்கும் போது தமிழ்நாடு எப்படி இருந்ததோ அதேபோல்தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு எந்த வகையிலும் முன்னேறவில்லை இளைஞர்களுக்கு சரியான முறையில் கல்வி இல்லை விவசாயிகளுக்கு. விவசாயத்தில் எந்த பயனும் இல்லை.

    மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், தனது மகன் குடும்பமும், மருமகன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளார்.

    நாம் எல்லா ஏழை குழந்தைகளுக்கும் டொனேஷன் இல்லாமல் பணத்தை கொடுக்காமல் நேரடியாக மருத்துவ கல்லூரிலே சேர வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, தி.மு.க .இளைஞர்களை ஏமாற்றும் விதமாக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வந்து கொண்டிருக்கிறது.

    இளைஞர்களை முன்வைத்து நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக எப்படிப்பட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் ஏராளமான கிராமங்களில் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. 23 வருடங்களாக ஏமாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டிலே தீபாவளி அன்று மட்டுமே சாராயம் டாஸ்மாக்-ல் விற்கப்பட்ட சாராய மூலமாக 11 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளனர்.

    மதுவிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்துதான் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? என்கின்ற கேள்வியை மக்கள் எல்லாரும் முன் வைக்கின்றனர். அதேபோல்இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், இது போன்ற ஊழல் அமைச்சர்களை பார்த்தது கிடையாது. தமிழ்நாட்டில் அவர்கள் வாக்குறுதியான 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்கள்.மேலும் இவர்கள் வாங்கிய கடனை ஏழை விவசாயிகள் நீங்கள் தான் கட்ட வேண்டும்.

    ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டம் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் எஸ்.கே.ஐயப்பன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் ராமர் உள்ளிட்ட மாநில, மாவட்ட மகளிர் அணி சார்ந்த நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்
    • கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கூட்டிக்கல் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரால் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

    அவர் பேசும்போது, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். கேரளாவில் செயல்படுத்தப்பட்டு வரும் லைப் மிஷன் வீட்டுத் திட்டத்தை, மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி சிலர் இழிவுபடுத்த முயல்கின்றனர். அவர்கள் லைப்மிஷன் திட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார். கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

    • இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.
    • பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மணப்பாறை பகுதியில் யாத்திரை சென்றார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மணப்பாறை தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    இந்த கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் ஒரே வேலை பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான். இந்த கட்சியை மனிதநேய மற்ற கட்சி என்றுதான் அழைக்க வேண்டும்.

    மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் பணியின் போது கிடைக்கும் சரளை மண்ணுக்காக கல்லூரியை காலனி வாசல் பட்டிக்கு மாற்றிவிட்டார்கள். இது வரை கல்லூரி கட்டவில்லை. சொந்த கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூட கட்டிடத்தில் கல்லூரி செயல்படுகிறது. எய்ம்ஸ் பற்றி பேச தி.மு.க. வுக்கு என்ன தகுதி இருக்கிறது?

    புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும் என்று, டாஸ்மாக்கில் மது விற்பனை செய்பவர், அறிவுரை கூறுவார் என்றார் அமைச்சர் முத்துசாமி.

    மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். சென்ற ஆண்டு டாஸ்மாக்கில் சராசரியாக மது குடிப்போர் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது, தற்போது 90 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.

    தமிழ்நாட்டை முழுவதுமாக குடிகார மாநிலமாக மாற்றும் வரை அமைச்சர் முத்துசாமி ஓயமாட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில், இத்தகைய மக்கள் விரோத தி.மு.க. கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ள பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பட்டுள்ளார்.

    • கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.
    • பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார்

    கரூர்

    கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.

    முன்னதாக தோகைமலை மணப்பாறை மெயின் ரோட்டில் பாளையம் பிரிவு சாலையில் இருந்து தோகைமலை பஸ் நிலையம் வரை அண்ணாமலை பாதயாத்திரை வந்தார். அப்போது மேளதாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மகளிர் அணி சார்பாக மலர்கள் தூவப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பு 513 வாக்குறுதிகளை அளித்து 20 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. கருணாநிதியின் முதல் தொகுதி குளித்தலை. அப்போது, தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து குடகனாறு மூலமாக தோகைமலை பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது வரை அதை செய்யவில்லை. அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதிகள் 20 சதவீதம் கூட செய்து முடிக்கவில்லை.

    ஏழை மக்களுக்கு எதிராக தி.மு.க. ஆட்சி நடத்தி வருகிறது. மக்கள் பணத்தை தி.மு.க. கொள்ளை அடித்து வருகிறது. இன்று அமைச்சர் எ.வ.வேலு கண்டக்டராக தொடங்கிய வாழ்க்கை தற்போது பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாக மருத்துவக் கல்லூரி முதற்கொண்டு அனைத்து கல்லூரிகள் நடத்தி வருகிறார். எங்கிருந்து சம்பாதித்தார். தற்போது உள்ள அமைச்சர்கள் அனைவரும் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள்.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை தொகுதியில் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் செந்தில்பாலாஜி அவரது சகோதரர் ஊழல்வாதிகள் என்று கூறி அவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று பேசினார்.தமிழகத்திலே 3-வது பெரிய ஏரி பஞ்சபட்டி ஏரி. சுமார் 1356 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், அந்த ஏரியின் மூலமாக 15,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயனடைவர்.

    காவிரியில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஏரியில் நிரப்பி விவசாயிகள் பயனடையும் வகையில் வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசு செய்யவில்லை. அதற்கு பதிலாக டாஸ்மாக்கில் தண்ணீராக ஓடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக ஆட்சியை நடத்தி வருகிறார்.பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உள்ள மக்களே குடும்பம் என அவர்களுக்காக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக தற்போது 26 கட்சிகள் இந்தியா கூட்டணி என அமைத்து குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் அனைத்து கட்சிகளும் அந்த மாலை யாருக்கு விழும் என நினைத்து இருக்கிறார்கள். அப்படி நினைத்தால் ஒவ்வொருத்தரும் பூவை பிச்சி எடுப்பது போல் இந்தியா நாடு ஆகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார், குளித்தலை நகரத்தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், சக்திவேல், மாநில விவசாய அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச்செயலாளர் செல்வம், தோகைமலை மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் ராஜ்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜா பிரதீப், தெற்கு மாநகர தலைவர் ரவி, கவுன்சிலர் சரண்யா, கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த வரவேற்பை திட்டமிட்டு மறைக்க முயன்றவர்களுக்கு தோல்வியடைந்து விட்டார்கள்.
    • ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

    மதுரை

    மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் கூறி யதாவது:-

    தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டி ருக்கிற தெய்வீக திரு மகனாரின் குரு பூஜையில், அ.தி.மு.க. பொதுசெயலா ளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற போது வரலாறு காணாத வரவேற்போடு, ஒட்டுமொத்த தேவர் தொண்டர்களும், குறிப்பாக தாய்மார்களும் அவரை வரவேற்ற காட்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஷமி கள் சிலர், தெய்வீக திருமக னார் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயற்சி செய்தனர்.

    அந்த சுயநலவாதி களிடம் இருந்து, அவர் ஒரு சுதந்திர போராட்டத் தலைவர், தேசிய தலைவர், சர்வ சமய, சர்வ ஜாதி என அனைத்து பிரிவிற்கும் சொந்தமானவர் என்பதை நிரூபித்துக் காட்டு கின்ற வகையில், அந்த புண்ணிய பூமியில் அஞ்சாத மன உறுதியோடு, உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என தேவருக்கு மரியாதை செலுத்தி னார். எடப்பாடி பழனிசாமி.

    மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு 80 கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்ற பாதையில் பொதுமக்கள் எல்லாம் அவரை வரவேற்றதை திட்டமிட்டு மறைத்து விட்டு, சில கயவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாங்கிய கூலிக்கு கூவியர்கள் இதில் தோல்வியடைந்து விட்டார்கள்.

    தேவர் சில பேருக்கு மட்டுமே சொந்தம் என்று குறுகிய வட்டத்தில், அவரது புகழை ஒரு கூண்டுக்குள்ளே அடக்க நினைக்கிறார்கள், அதையெல்லாம் தகர்த்து எறிந்து அவரின் புகழ், தியாக வரலாறு, சர்வ மதம் சர்வ ஜாதிகளுக்கும் பாடு பட்டவர் என்பதை இன்றைக்கு மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

    எல்லோரும் வரவேற்ற புண்ணிய பூமி இன்றைக்கு சமீபகாலமாக சில கயவர்கள், அரசியலில் முகவரி அற்றவர்கள், அரசியலில் காணாமல் போனவர்கள் தேவரின் கவசத்தை முக மூடியாக அணிந்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு தேடுவது குற்றமல்ல, ஆனால் பிறரை இழிவுபடுத்த வேண்டும், சிலரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.

    பசும்பொன் பூமிக்கு வருகை தந்து வெற்றி கொடி பறக்க விட்டு, தேவரின் புகழை எட்டுதிக்கும் எடுத்துச் சென்று இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள் ளார்.

    எடப்பாடி பழனிசாமி வருகை ஒரு வரலாற்று வருகையாக தென் மாவட்ட மக்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ×