search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
    • ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர். எகிப்து எல்லையில் உள்ள அந்த நகரில் சுமார் 15 லட்சம் மக்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அங்கு மக்களுடன் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ரபா நகரில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது.


    மக்கள் அடர்த்தி நிறைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினால் மேலும் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, ஐ.நா.ஆகியவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாசை அழிக்கும் நோக்கத்தில் ரபா மீதான தாக்குதல் முக்கியமானது என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரபா நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

    இதையடுத்து ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள். மேலும் ரபா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.


    ஏற்கனவே வீடுகளை இழந்து உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை கிடைக்காமல் தவித்து வரும் காசா மக்களுக்கு ரபா மீதான தாக்குதல் திட்டம் மேலும் துன்பத்தை கொடுக்கும்.

    தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக ரபா மீது வான் வழித்தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அடி சுஹ்ரி கூறும்போது, காசாவில் இனப்படுகொலை குற்றங்களை அதிக அளவில் நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் சூழ்ச்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    • பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.
    • பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதில் காசாவில் குழந்தைகள் பெண்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அப்போது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு-இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காசா போரில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அஜித் தோவலிடம் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார் என்று கூறியுள்ளது.

    நேதன்யாகுவுடனான சந்திப்பின்போது உடனிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்கி ஹளக்பியையும் சந்தித்து பேசினார்.

    காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. மேலும் காசா போர் தொடர்பாக பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவப்படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, இஸ்ரேல் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர்.

    லெபனான் தாக்குதலில் பலியானவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மேக்ஸ்வெல் (31) என்றும், இந்தத் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் பகுதியை தாக்கியது.
    • பணிபுரிந்து வந்த ஏழு வெளிநாட்டினர் காயம் அடைந்தனர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லையில் உள்ள பகுதிகளை அடிக்கடி ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் தாக்கியது. இந்த பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    ஏவுகணை தாக்கியதில் ஏழு வெளிநாட்டு தொழிலாளர்கள் அடைந்த நிலையில், அதில் மூன்று பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

    இவர்களில் பாட்னிபின் மேக்ஸ்வெல் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் ஜிவ் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் புஷ் ஜோசப், பால் மெல்வின் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் ஜார்ஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் உடல்நலம் தேறியுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேச முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மெல்வினுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டு, ஜிவ் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    அதேவேளையில் ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து பதுங்கி வருகின்றனர்.
    • ஹமாஸ் அமைப்பின் இந்த சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

    டெல் அவிவ்:

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

    காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர்.

    காசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது.

    இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
    • பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால் தாக்குதல் தீவிரமடையும் என்றார் அமைச்சர்

    கடந்த அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், தெற்கு இஸ்ரேல் பகுதியில் அதிரடியாக நுழைந்து பல இஸ்ரேலியர்களை கொன்று, பலரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவ படை (Israeli Defence Forces), ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் அவர்களை தேடித்தேடி அழித்து வருகிறது.

    130 நாட்களை கடந்து போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 28,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்தது.

    பிணைக்கைதிகளை விட வேண்டுமானால் நிரந்தர போர்நிறுத்தம் வேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த இஸ்ரேல், பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு கெடு விதித்திருக்கிறது.

    இஸ்ரேலி கேபினெட் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) இது குறித்து தெரிவித்ததாவது:

    மார்ச் 10 அல்லது 11 காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் மாதம் தொடங்கும்.

    ரம்ஜான் தொடங்கும் முன் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால், பாலஸ்தீன ரஃபா (Rafah) பகுதியில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம்.

    அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் பேசவுள்ளோம்.

    இது தீவிரமான நடவடிக்கைதான்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு 2 வாய்ப்புகள் உள்ளன – அவர்கள் பிணைக்கைதிகளை விடுவித்து விட்டு சரணடையலாம். இதன் மூலம் காசா மக்களும் ரம்ஜான் கொண்டாட முடியும். இல்லையென்றால், தீவிர தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதுவரை 28,000 பேருக்கும் மேல் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்தது
    • ஹமாசிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர எதுவும் வரவில்லை என்றார் நேதன்யாகு

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க, இஸ்ரேல் நடத்தி வரும் போர், 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    இடையில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 7 நாட்கள் போர் நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதலை தொடர்ந்தது.

    இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 28,000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் வசம் மீதம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகளை மீட்கவும், மீண்டும் போர்நிறுத்தத்தை கொண்டு வரவும், எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீட்டில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் ஹமாஸ் அமைப்பினர் நிரந்தர போர்நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

    இவற்றை ஏற்க இஸ்ரேல் மறுத்து விட்டது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினருடன் நடைபெற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர வேறு எதுவும் வரவில்லை. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது.

    மேற்கொண்டு போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது.

    பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது.

    பாலஸ்தீனத்தை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதை எனது தலைமையிலான இஸ்ரேல் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்.

    முன்நிபந்தனைகள் இல்லாமல் இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே ஒரு பயனுள்ள ஏற்பாட்டை செய்ய முடியும்.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    • காசா முழுவதும் ஹமாஸ் அமைப்பினரை தேடி வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
    • தலைமை அலுவலகத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டது என்கிறது இஸ்ரேல்.

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய ராணுவ படையினர் தேடித்தேடி வேட்டையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான தலைமையக அலுவலகத்திற்கு கீழே சுரங்கப்பாதைகள் உள்ளதை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    "இந்த சுரங்கப்பாதைகள் ஹமாஸ் போராளிகளால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான மின்சார வினியோகம் ஐ.நா. அமைப்பின் தலைமையகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது" என இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு, ஹமாஸ் அமைப்பினருக்கு மறைமுகமாக உதவி வருவதாக முன்னரே இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இப்பின்னணியில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கிறது.

    ஆனால், சுரங்கப்பாதைகளில் ஹமாஸ் போராளிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் தற்போது வரை முன்வைக்கப்படவில்லை.

    இந்த சுரங்கபாதை அரை கிலோமீட்டர் தூர நீளத்துக்கு உள்ளது என்றும் இதில் ஆங்காங்கே 10 கதவுகள் இருந்து உள்ளன என இதனை பார்வையிட்ட பத்திரிகையாளர்களிடம் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    காசாவின் குறுக்கே பல கிலோமீட்டர் சுரங்கப்பாதைகளை கட்டியதை ஹமாஸ் ஒப்புக்கொண்டு உள்ளது.

    அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முக்கிய நோக்கங்களில், காசாவில் ஹமாஸ் அமைத்திருக்கும் அனைத்து கட்டுமான வசதிகளை அழிப்பதும் ஒன்று என இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் கட்டமாக 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
    • 2-வது கட்டத்தில் ஆண் பிணைக்கைதிகளும், 3-ம் கட்டத்தில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும்.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை முன்மொழிந்தனர்.

    முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் 1500 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    2-வது கட்டத்தில் ஆண் பிணைக்கைதிகளும், 3-ம் கட்டத்தில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தது. அதன் பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை. அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும். நாங்கள் ஒரு முழுமையான வெற்றி பாதையில் இருக்கிறோம்.

     காசாவின் எந்தப் பகுதியையும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விடமாட்டோம். காசாவின் நீண்ட காலத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் இஸ்ரேலுக்கு மட்டுமே உள்ளது என்றார்.

    ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் இஸ்ரேல், இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. இதில் விசாரணை நடை பெற்று வரும் நிலையல் நேற்று கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியது.

    அதில், காசாவில் இனப்படுகொலை தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சர்வதேச கோர்ட்டு தீர்ப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இஸ்ரேல் மீது சுமத்தப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறானது மட்டுமல்ல, அது மூர்க்கத்தனமானது, எல்லா இடங்களிலும் உள்ள கண்ணியமான மக்கள் அதை நிராகரிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டையும் போலவே, இஸ்ரேலுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு உள்ளார்ந்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையை இஸ்ரேலுக்கு மறுக்கும் மோசமான முயற்சி. இஸ்ரேல் அரசுக்கு எதிரான அப்பட்டமான பாகுபாடு ஆகும். எங்கள் நாட்டைப் பாதுகாக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் தேவையானதை தொடர்ந்து செய்வோம்.

    ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும். இஸ்ரேலின் போர் ஹமாசுக்கு எதிரானது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரானது அல்ல. தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவோம், பொதுமக்களை ஹமாஸ் அமைப்பினர் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே காசாவின் கான்யூனுஸ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் நிலையில் அங்குள்ள நாசர் ஆஸ்பத்திரியில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதே போல் அங்குள்ள மற்ற ஆஸ்பத்திரிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    • இப்போரினால் காசா பகுதியில் சுமார் 25,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்
    • அமெரிக்காவிடம் தனது நிலைப்பாட்டை கூறி விட்டதாக நேதன்யாகு தெரிவித்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போர் 100 நாட்களை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவ படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    போர்நிறுத்தம் அல்லது தற்காலிக போர்நிறுத்தம் குறித்து ஐ.நா. சபை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    இப்போரில் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது.

    சில தினங்களுக்கு முன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்து சிக்கலை தீர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

    நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஹமாஸ் அழிய வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணய கைதிகள் மீண்டும் ஓப்படைக்க பட வேண்டும்.

    எங்களுக்கு முழு வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும். போர் இன்னும் சில மாதங்கள் நீடிக்கலாம்.

    ஜோர்டான் நதிக்கு (River Jordan) மேற்கே உள்ள நில பகுதி முழுவதிலும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது பாலஸ்தீனத்தையும் சேர்த்தே குறிக்கும்.

    இஸ்ரேலின் எதிர்காலம் என்பது தனி பாலஸ்தீனத்திற்கு எதிரானதுதான்.

    இந்த உண்மையை அமெரிக்க நண்பர்களிடம் தெரிவித்து விட்டேன். இஸ்ரேலின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய எந்த நிலைப்பாட்டையும் எங்கள் மீது திணிக்க முயல வேண்டாம் என கூறி விட்டேன்.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    பணய கைதிகளை மீட்டு தனது நாட்டிற்கு கொண்டு வருவதற்குத்தான் நேதன்யாகு முன்னுரிமை தர வேண்டுமே தவிர, ஹமாஸை அழிப்பதில் காலம் கடத்த கூடாது என இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • 100 நாட்களை எட்டிய போர், நிற்பதற்கான அறிகுறி இல்லை
    • பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் என்றார் பர்கட்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ படை தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    போர், 100-வது நாளை எட்டியும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தவில்லை. போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் முன்வைத்த ஆலோசனைகளை இஸ்ரேல் புறக்கணித்தது.

    இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சார்ந்துள்ள லிகுட் கட்சியை (Likud party) சேர்ந்த அந்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் (Nir Barkat) போர் நிலவரம் குறித்து பேட்டி அளித்தார்.

    அப்போது பர்கட் கூறியதாவது:

    இஸ்ரேலியர்களாகவும், யூதர்களாகவும் இருந்ததற்காக அப்பாவிகளை அக்டோபர் 7 அன்று ஹமாஸ் கொன்று குவித்தது.

    எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்கள் போர் அந்த அமைப்பினர் முழுவதும் சரணடையாமல் நிற்காது.

    எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும். எங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இதற்கெல்லாம் உடன்பட்டு ஹமாஸ் அமைப்பினர்தான் வெள்ளை கொடி காட்ட வேண்டும். இல்லையென்றால் போர் தொடரும். இதை தவிர வேறு எந்த மாற்று வழியும் கிடையாது.

    எங்கள் நாட்டு மக்களை கொல்லவோ, இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்கவோ நினைக்காத ஒரு அமைப்பின் கீழ் புதிய பாலஸ்தீனம் நிறுவப்பட வேண்டும்.

    இவ்வாறு பர்கட் கூறினார்.

    "வெற்றி பெறும் வரை போர் தொடரும்" என சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×