என் மலர்tooltip icon

    உலகம்

    ஹமாஸ் தாக்குதலில் பலரைக் காப்பாற்றிய நேபாள இளைஞர் 2 ஆண்டுகளுக்கு பின் சடலமாக ஒப்படைப்பு
    X

    ஹமாஸ் தாக்குதலில் பலரைக் காப்பாற்றிய நேபாள இளைஞர் 2 ஆண்டுகளுக்கு பின் சடலமாக ஒப்படைப்பு

    • ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
    • சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும்.

    காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் இஸ்ரேல் பணய கைதிகள் 20 பேரை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷி உட்பட நான்கு பேரின் சடலங்களை இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஹமாஸ் ஒப்படைத்தது.

    பிபின் ஜோஷியின் சடலம் நேற்று முன் தினம் நள்ளிரவு டெல் அவிவ் விமான நிலையத்தை அடைந்தது என்று இஸ்ரேலுக்கான நேபாள தூதர் தனபிரசாத் பண்டிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    ஜோஷியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் மரபணு (DNA) பரிசோதனை செய்ய உள்ளனர். அதன்பிறகு, நேபாள தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும் என்று தூதர் பண்டிட் கூறினார்.

    அக்டோபர் 7 , 2023, இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.

    ஸ்டுடென்ட் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் கீழ், காசா எல்லைக்கு அருகிலுள்ள கிப்புட்ஸ் அலிமிம் என்ற இடத்தில் விவசாயம் குறித்து ஆராய்ச்சி படிப்புக்காக சென்ற 17 நேபாள மாணவர்களில் ஜோஷியும் ஒருவர் ஆவார்.

    ஹமாஸ் தாக்குதல் நடந்த நாளில், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் சைரன் ஒலித்தபோது, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெடிபொருள் தாக்குதலில் இருந்து தப்பிக்கப் பாதுகாப்பான இடத்தில் பதுங்கினர்.

    ஆனால், அவர்கள் மறைந்திருந்த இடத்திற்குள் ஹமாஸ் போராளிகள் வெடிகுண்டு ஒன்றை வீசினர். இதனால் பலர் காயமடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பிபின் ஜோஷி, இரண்டாவதாக வீசப்பட்ட வெடிகுண்டைப் லாவகமாகப் பிடித்து, மீண்டும் வெளியே வீசினார்.

    ஜோஷியின் இந்தத் துரிதச் செயலால் அங்கிருந்த பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் ஜோஷியை ஹமாஸ் படையினர் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இஸ்ரேலியர்கள் அல்லாத பிணைக்கைதிகளில் கஸாவில் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்ட ஒரே நபர் இவர்தான்.

    2023 இல் கடத்தப்பட்டதில் இருந்து ஜோஷியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் இஸ்ரேலிய இராணுவம் கஸாவில் இருந்து ஜோஷி உயிருடன் இருந்ததைக் காட்டும் ஒரு வீடியோவை மீட்டது. இருப்பினும் அவர் தற்போது சடலமாக திரும்பியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×