search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப ஆட்சி நடத்துகிறார்-அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப ஆட்சி நடத்துகிறார்-அண்ணாமலை குற்றச்சாட்டு

    • கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.
    • பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார்

    கரூர்

    கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.

    முன்னதாக தோகைமலை மணப்பாறை மெயின் ரோட்டில் பாளையம் பிரிவு சாலையில் இருந்து தோகைமலை பஸ் நிலையம் வரை அண்ணாமலை பாதயாத்திரை வந்தார். அப்போது மேளதாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மகளிர் அணி சார்பாக மலர்கள் தூவப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பு 513 வாக்குறுதிகளை அளித்து 20 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. கருணாநிதியின் முதல் தொகுதி குளித்தலை. அப்போது, தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து குடகனாறு மூலமாக தோகைமலை பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது வரை அதை செய்யவில்லை. அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதிகள் 20 சதவீதம் கூட செய்து முடிக்கவில்லை.

    ஏழை மக்களுக்கு எதிராக தி.மு.க. ஆட்சி நடத்தி வருகிறது. மக்கள் பணத்தை தி.மு.க. கொள்ளை அடித்து வருகிறது. இன்று அமைச்சர் எ.வ.வேலு கண்டக்டராக தொடங்கிய வாழ்க்கை தற்போது பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாக மருத்துவக் கல்லூரி முதற்கொண்டு அனைத்து கல்லூரிகள் நடத்தி வருகிறார். எங்கிருந்து சம்பாதித்தார். தற்போது உள்ள அமைச்சர்கள் அனைவரும் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள்.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை தொகுதியில் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் செந்தில்பாலாஜி அவரது சகோதரர் ஊழல்வாதிகள் என்று கூறி அவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று பேசினார்.தமிழகத்திலே 3-வது பெரிய ஏரி பஞ்சபட்டி ஏரி. சுமார் 1356 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், அந்த ஏரியின் மூலமாக 15,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயனடைவர்.

    காவிரியில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஏரியில் நிரப்பி விவசாயிகள் பயனடையும் வகையில் வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசு செய்யவில்லை. அதற்கு பதிலாக டாஸ்மாக்கில் தண்ணீராக ஓடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக ஆட்சியை நடத்தி வருகிறார்.பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உள்ள மக்களே குடும்பம் என அவர்களுக்காக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக தற்போது 26 கட்சிகள் இந்தியா கூட்டணி என அமைத்து குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் அனைத்து கட்சிகளும் அந்த மாலை யாருக்கு விழும் என நினைத்து இருக்கிறார்கள். அப்படி நினைத்தால் ஒவ்வொருத்தரும் பூவை பிச்சி எடுப்பது போல் இந்தியா நாடு ஆகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார், குளித்தலை நகரத்தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், சக்திவேல், மாநில விவசாய அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச்செயலாளர் செல்வம், தோகைமலை மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் ராஜ்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜா பிரதீப், தெற்கு மாநகர தலைவர் ரவி, கவுன்சிலர் சரண்யா, கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×