search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore"

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். #Vellore #MinisterVeeramani
    வேலூர்:

    வேலூர் மண்டலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் மேலும், 8 புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னையிலிருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு 3 பஸ்களும், வேலூரிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ்சும், வேலூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சும், ஆம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு ஒரு பஸ்சும், பேரணாம்பட்டிலிருந்து ஆவடிக்கு ஒரு பஸ்சும், குடியாத்தத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:- ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். #Vellore #MinisterVeeramani
    வேலூரில் வருகிற 31-ந்தேதி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    வேலூர்:

    அரக்கோணம் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்களை சரியான அளவில் எடைபோடாமல் அனுப்பப்படுகிறது.

    இந்த செயலை கண்டித்து ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்கள் அனைத்தும் லாரியில் வரும் எடைதராசில் சரியான அளவில் எடையிட்டு அந்தந்த மாதத்திற்கான கலர்நூல் தையலிட்டு விற்பனையாளர் முன்பாக கடையிலேயே வழங்க கோரியும் தொடர்ந்து இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாநில மையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட செயற்குழு கூட்டத்தின் முடிவின்படியும் மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வருகிற 31-ந்தேதி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் ரேசன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று பேசுகிறார். மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    வேலூர் அருகே கார்த்திகை தீப விளக்கு ஏற்றிய போது தீயில் கருகிய சிறுமி இறந்தார்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த நாயக்கன் நேரியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி இவரது மகள் ஹரிணி (வயது 5). இவர் கார்த்திகை தீபத்தன்று வீட்டில் அகல்விளக்குகளை ஏற்றி உள்ளார்.

    அப்போது எதிர்பாராமல் அவர் அணிந்திருந்த ஆடையில் விளக்கில் இருந்து தீபற்றி எரிந்தது. உடல் முழுவதும் பற்றிய தீயால் சிறுமி அலறிதுடித்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிகக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ஹரிணி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் கிரீன் சர்க்கிளில் டாக்டரிடம் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் வாசு (வயது 50). ஹோமியோபதி டாக்டர். இவர் நேற்று கிரீன் சர்க்களில் செல்போன் பேசிக் கொண்டு நின்றிருந்தார். அப்போது அங்கு ஒரு பைக்கில் வந்த 3 பேர் கும்பல் திடீரென வாசுவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    அதிர்ச்சியடைந்த வாசு திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டார். அதற்குள் அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது குறித்து வாசு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் செல்போன் பறிப்பு சம்பவம் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்தது. இந்த பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    வேலூர் பள்ளி கல்லூரிகளில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு:

    செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆற்காடு பகுதியிலிருந்து செய்யாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்.

    விசாரணையில் அவர்கள் முரண்பட்ட தகவல்களை அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம், பனங்காட்டேரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது25), கொத்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசன் (28), ஆம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (25) என்பது தெரியவந்தது.

    இவர்கள் கூட்டாக சேர்ந்து செய்யாறு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளியிலும், அக்டோபர் மாதம் 27-ந்தேதி பாராசூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் முகமூடி அணிந்து வந்து காவலரை தாக்கி அலுவலகத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தினை கொள்ளையடித்துள்ளனர்.

    பின்னர் தங்களை அடையாளம் கண்டுகொள்வதை தவிர்க்க கண்காணிப்பு கேமராகளை உடைத்தும், கேமிரா காட்சிகள் பதிவாகும் கருவியையும் எடுத்துகொண்டு சென்றது தெரிய வந்ததுள்ளது.

    இதே போல வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து திருப்பதி, கணேசன் மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முகமூடி கொள்ளையர்கள் 4 பேரையும் செய்யாறு போலீசார் தேடி வருகின்றனர்.

    வேலூரில் காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.
    வேலூர்:

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரம் மட்டுமல்லாது கிராமங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 3 மருத்துவ முகாம் என 20 ஒன்றியங்களில் மொத்தம் 60 முகாம்கள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்த பின்னர், 'டெங்கு' அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்வார்கள்.

    அத்துடன் காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களும் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, மழைக்காலத்தில் தண்ணீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும். உணவுகளை சமைத்த உடனே சிறிது நேரத்தில் உட்கொள்வது நல்லது. நீண்ட நேரம் கழித்து உட்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணவுக்கு முன் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

    அதுமட்டுமின்றி, திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு மருத்துவமனைகளையோ அணுகி சிகிச்சை பெற வேண்டும். வீட்டின் அருகில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாகவும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். #Rain

    வேலூர்:

    தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று 3-வது நாளாகவும் தொடர்ந்து பெய்தது.

    சில நேரங்களில் சாரல் மழை போன்றும் சில நேரங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டமின்றி வேலூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியில் சென்ற பொதுமக்கள் குடைபிடித்தும், மழை கோட்டு அணிந்தும் சென்றனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    தொடர் மழையால் வேலூர் சூரியகுளம் பர்மாகாலனி பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீரும் புகுந்தது. தெருவிலும் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோன்று சேண்பாக்கம் ராகவேந்திரா நகரில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.


    வேலூர் ஆற்காடு ரோடு, புதிய பஸ்நிலையம் அருகே கிரீன்சர்க்கில், சர்வீஸ் ரோடு, ஆரணிரோடு பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக ஆற்காடு பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்துள்ள மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்-47.3, ஆம்பூர்-25.4, வாணியம்பாடி-19.7, ஆலங்காயம்-25.9, அரக்கோணம்-37.8, காவேரிபாக்கம்-32.2, வாலாஜா-29.2, சோளிங்கர்-14, திருப் பத்தூர்-3.8, ஆற்காடு-59, குடியாத்தம்-23.3, மேலாலத்தூர்-29.6, பொன்னைடேம்-16.2, காட்பாடி-44.8, அம்முண்டிமில்-30.2.  #Rain

    வேலூரில் இளம் பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேலூர்:

    லத்தேரி அடுத்த அன்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அபிலா (வயது 22). இவர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் வாகன ஷோரூமில் வேலை செய்து வருகிறார்.

    அபிலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியை முடித்து கொண்டு இரவு 7.30 மணிளவில் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் ஷோரூமுக்கு அருகிலேயே அபிலோவின் கழுத்தில் இருந்த 1½ பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அபிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரின் விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

    வேலூர் அருகே வீட்டில் விளையாடியபோது புடவை கழுற்றில் சுற்றி பள்ளி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் ஆர்.என்.பாளையம் 4-வது தெருவை சேர்ந்தவர் நிசாம். இவருக்கு 5 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நிசாமின் 2-வது மகள் பவுசியா (வயது 9). இவர், 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்த பவுசியா, புடவையில் தொங்கவிடப்பட்டிருந்த தூளியில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது புடவை கழுற்றில் சுற்றி இறுகியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    மூச்சு பேச்சின்றி கிடந்த மகளை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மகளை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் பவுசியா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் விரிஞ்சிபுரம் ரெயில் நிலைய நடை மேடையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் அருகே விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் நடைமேடைகள் சீரமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று விரிஞ்சிபுரம் ரெயில் நிலையம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் 1-வது பிளாட்பாரத்தில் மண் ஏற்றி வந்த லாரி எதிர் பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அப்போது, அவ்வழியே ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து விரிஞ்சிபுரம் ரெயில் நிலைய மேலாளர் காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர், காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரி மீட்கபட்டது.

    இதனால், ஜோலார்பேட்டை மார்க்கமாகச் செல்லும் சங்கமித்ரா, பெங்களூரு, யஸ்வந்த்பூர், திருப்பதி இன்டர்சிட்டி உள்ளிட்ட 8 விரைவு மற்றும் வாராந்திர ரெயில்கள் சுமார் 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

    இந்த விபத்தால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு மேல் சென்னை மார்க்கத்திலிருந்து எந்த ரெயிலும் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை மார்க்கத்தில் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    வேலூரில் ரெயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). அதே பகுதியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். இவர், ரெயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று அவரது கம்ப்யூட்டர் மையத்தில் சோதனை செய்தனர். அப்போது ராஜேஷ்குமார் தனது சொந்தக்கணக்கில் தட்கலில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் 43 ரெயில் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 4 ஆயிரமாகும். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் மாலை வரை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. 1 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழையும், தொடர்ந்து மிதமான மழையும் பெய்தது.

    இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தின் உட்புறம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், கிரீன் சர்க்கிள், காமராஜர் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கன்சால்பேட்டை சமத் நகரில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

    இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர்- ஆற்காடு சாலையில் மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து ஓடியது. தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூர், திருப்பத்தூர், காட்பாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.வாணியம்பாடியில் அதிகபட்சமாக 50.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    வேலூர்-45.4, ஆம்பூர்- 39.2, வாணியம்பாடி-50.2, திருப்பத்தூர்-20.3.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. சாத்தனூர் அணை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. மழை வெள்ளம் தென்பெண்ணை ஆற்றில் கலந்து ஓடியது.

    போளூர், கலசப்பாக்கம், செங்கம், திருவண்ணாமலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சாத்தனூர் அணையில் அதிகபட்சமாக 73.6 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருவண்ணாமலை-28, செங்கம்-21.6, சாத்தனூர் அணை-73.6, போளூர்-48.4, கலசப்பாக்கம்-27, கீழ்பென்னத்தூர்-8.8. #tamilnews
    ×