search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல்"

    • அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மாதம் வரை பனி, குளிர் இருந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படு கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல்விட்டாலும் வறட்டு இருமல் ஒரு வாாரம் வரை தாக்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு கை-கால் வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    பெரும்பாலானவர்கள் முதலில் சளி, இருமலால் பாதிக்கப்பட்டு பின்னர் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலம் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும் தற்போது கொசுக்கள் பெருகி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடிய இந்த காலத்தில் நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மழைநீர் கால்வாய்களில் விடப்படும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

    மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடிக்கிறது.

    இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளி தேர்வு காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பருவ நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்சாதனை பெட்டியில் வைத்து குடிநீரை அருந்தக் கூடாது. ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சமையலை உண்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்றனர்.

    • நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு பன்றிப்பண்ணையில் 2 பன்றிகள் திடீரென இறந்தன. அவை வினோத நோய் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பன்றிகளின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள விலங்குகள் நோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தியதில், இறந்த 2 பன்றிகளுக்கும் கொடிய வைரஸ் நோயான ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கொடிய வைரஸ் நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி 2 பண்ணைகளில் இருந்த 9 பெரிய பன்றிகள் மற்றும் 9 குட்டி பன்றிகள் கொல்லப்பட்டு, நெறிமுறைகளின்படி தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    அந்த இடங்களுக்கு பன்றி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொண்டுசெல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் தொற்று பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பன்றி இறைச்சி வினியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு இறைச்சியை கொண்டுசெல்லவும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

    • காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
    • நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும்.

    ஊட்டி:

    கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் வனநோய் என்ற குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 53 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியானார்கள். குறிப்பாக அங்குள்ள உத்தரகர்நாடகம் ஷிவமொகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.

    தொற்றுக்குள்ளான குரங்குகள், கால்நடைகள் வாயிலாக இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

    இந்த வகை காய்ச்சலை பி.சி.ஆர். மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம். இந்த நோய் ஓரிரு வாரங்களில் குணமாகி விடும். சிலருக்கு தீவிர எதிர்விளைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள தை அடுத்து தமிழக எல்லை யோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்ப டுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரி டீன் கீதா லட்சுமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும். கா்நாடகம், கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால், அந்த மாநிலங்களில் ஏற்படும் டெங்கு, குரங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்துக்குள் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகமும், சுகாதார துறையும் நடவடி க்கை எடுத்து வருகிறது.

    இதில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை யாருக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர்.
    • நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த சூழலில் புதிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கொரோனா மரபியல் கூட்ட மைப்பின் (இன்சா காக்) தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:-

    இந்தியாவில் சுமார் 88 சதவீத மக்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பரவும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. இந்த வகை கொரோனா வைரசால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். மருத்துவ மனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது.


    அதேநேரம், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். எந்த வகையான கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை கண்டறிய சளி மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும். அச்சம்அடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது குளிர்காலம், பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக ஜே.என்.1 வைரஸ் வேகமாக பரவுகிறது. இதன் வீரியம் குறைவாகவே உள்ளது. எனினும் வைரஸ் பரவலை தடுக்க அந்தந்த நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவைசேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் வெளியிட்ட அறிக்கையில், 'குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், மூத்த குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எக்ஸ் பி.பி.1 வகை வைரசுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஜே.என்.1 வகை வைரஸ் பரவலை தடுப்பதற்கும் பயன்படுத்தலாம்' என்று தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
    • எந்தவிதமான காய்ச்சல் பாதித்துள்ளது என்று டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இன்று பிறந்தநாள். வழக்கமாக அவரது பிறந்த நாளை காங்கிரசார் உற்சாகமாக கொண்டாடுவார்கள். ஆனால் அவரது மகன் மறைவுக்கு பிறகு பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்துவிட்டார். வீட்டுக்கு செல்லும் நிர்வாகிகளை மட்டும் சந்திப்பார்.

    இருப்பினும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது.

    இதையடுத்து நேற்று இரவே போரூரில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்ந்தார். எந்தவிதமான காய்ச்சல் பாதித்துள்ளது என்று டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

    இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர். சிலர் அவர் பூரண நலம் பெற வேண்டி கோவில்களில் வழிபாடுகள் நடத்தினார்கள்.

    • யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

    தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கேரள மாநிலத்தையொட்டி உள்ள தமிழக எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு தினந்தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்தமாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து பலர் கேரளாவுக்கும் சென்று வருகிறார்கள்.

    தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்ட எல்லைகளான வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு மருத்துவ குழுவினர், போலீசார் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அந்த வழியாக கேரளாவில் இருந்து கோவைக்குள் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    அதில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் அவர்களின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர்களை கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

    கோவையில் பொது மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சலுடன் வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளான நாடுகாணி, கக்கநல்லா உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    அந்த வழியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகள் அனைவரும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

    பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி கலெக்டர் அருணா கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    இதுவரை 30 பேரின் சளி மாதிரிகள் சேகரி க்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எனவே பொது மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கேரளா அதிகாரிகள் தெரிவித்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
    • எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசியார் சோதனை அதிகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

    புதிய வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருவதாகவும், கேரளாவில் 230 பேர் இது வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

    இது தொடர்பக தமிழ்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கேரளா அதிகாரிகள் தெரிவித்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    பெரிய அளிவில் பாதிப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டில் காய்ச்சல் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசியார் சோதனை அதிகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பல்வேறு விதமான உருமாற்றங்களை பெற்று வருகிறது. தற்போது இருப்பது எந்த மாதிரியான உருமாற்றம் என்பதை குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும்  என்றார்.

    • மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெர்னட். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் அக்சரன் என்ற மகன் உள்ளார். அக்சரன் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்தான்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அக்சரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவனை பெர்னட் கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து அக்சரனுக்கு காய்ச்சல் குணமாகாமல் இருந்துள்ளது.

    நேற்று காலை சிறுவன் அக்சரனின் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே கூடங்குளம் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவனை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் அக்சரனை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அக்சரன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே 10 மாத குழந்தை இறந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் நாங்குநேரி பரப்பாடி பகுதியில் 6 வயது சிறுமி இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று சிறுவன் அக்சரன் இறந்துள்ளான். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் சுகாதராத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறுமியின் உடல்நிலை சற்று தேறிய நிலையில், கடந்த 29-ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
    • கிளீனிக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை அடுத்த தன்மணியன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.

    இவரது மனைவி உஷா. இவர்களுக்கு சிவா(வயது 8) என்ற மகனும், சிவானி(6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி சிறுமி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் சிறுமிக்கு ஊசி போட்டுள்ளார்.

    பின்னர் சிறுமியின் உடல்நிலை சற்று தேறிய நிலையில், கடந்த 29-ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கிளீனிக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவானி திடீரென மயக்கம் போட்டு விழுந்து இறந்துவிட்டார்.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊசி போட்டதில் பக்க விளைவு ஏற்பட்டு சிறுமி இறந்தாரா? அல்லது காய்ச்சல் பாதிப்பால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது தொடர்ந்து பெய்து வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் இன்று காலை கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு சென்றனர்.

    இதன் காரணமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் இன்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது. காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்து வருவதால், எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அந்த பகுதிக்கு நேரில் சென்று முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் தற்போது 12 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமா னவர்கள் திரண்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல், மெட்ராஸ் ஐ மற்றும் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சீனாவில் பரவும் வைரஸ் ஹெச் 9 என் 1 இன்ப்ளூயன்ஸா, தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துபோவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

    மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிகிச்சைக்கு வரும் நிமோனியா பாதிப்பு சார்ந்த நோயாளிகளின் விபரங்களை ஒருங்கிணைந்த நோய்த்தொற்று கண்காணிப்பு தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது இடங்களில் நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குழந்தைகளுக்கு அதிகளவு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வருமாறு ஒரு சில தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் மீண்டும் முக கவசம் அணிந்து பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். இந்த நடைமுறை தனியார் பள்ளிகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. எனவே இதனை அரசு பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது மதுரையில் பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்து வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல், உடல் வலி, சளி, தொடர் இருமல் போன்ற பாதிப்புகளால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த வாரம் மட்டும் 17 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று 15 பேருக்கும், இன்று 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை நகரில் நாளுக்குநாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மாநகராட்சியும் இணைந்து மதுரையில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய இடங்களில் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வார்டு வாரியாக கொசுமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனாலும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்து நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

    ×