search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trains delayed"

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். #EgmoreRailwayStation #TrainsDelayed
    சென்னை:

    சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் தண்டவாள பாயிண்ட் பராமரிப்பு பணி நள்ளிரவு முதல் நடைபெற்றது. இந்த பணியை அதிகாலைக்குள் முடிப்பதற்கு தொழில் நுட்ப பணியாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    ஆனால் அந்த பணி நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. பணியை முடிக்க நேரம் நீடித்ததால் எழும்பூர் நிலையத்திற்கு வரும் ரெயில்கள் உள்ளே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    சேலம் எக்ஸ்பிரஸ், பாண்டியன், மலைக்கோட்டை ஆகிய ரெயில்கள் வந்து சேர்ந்தன. அதன் பின்னர் வந்த தென்மாவட்ட ரெயில்கள் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. தண்டவாளத்தை பிரித்து ஒவ்வொரு பிளாட்பாரத்திற்கும் ரெயில்களை அனுப்பக் கூடிய ‘பாயிண்ட்’ சரி செய்யும் பணி முடிப்பதற்கு நேரம் அதிகமானதால் ரெயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கூடுவாஞ்சேரியிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் காட்டாங்கொளத்தூரிலும், ராமேஸ்வரம், பொதிகை, முத்துநகர், அனந்தபுரி ஆகிய ரெயில்கள் வழியிலும் நிறுத்தப்பட்டன.

    ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்ட பின்னர் எப்போது புறப்படும், எதற்காக நிறுத்தப்பட்டது என்ற எந்த தகவலையும் நிர்வாகம் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து விட்டு மின்சார ரெயிலில் ஏறி தாம்பரம், எழும்பூருக்கு சென்றனர்.

    நெல்லை எக்ஸ்பிரசில் 150 மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்தனர். அவர்களை அந்த ரெயிலில் வந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கி மின்சார ரெயிலில் ஏற்றி விட்டனர். தாம்பரம் ரெயில் நிலையத்திலும் அவர்களை பாதுகாப்பாக இறக்கி விட்டனர்.

    இதற்கிடையில் பராமரிப்பு பணி விரைவாக முடிக்கப்பட்டு ரெயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டன. ஆனாலும் வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் எழும்பூர் வந்து சேர்ந்தன. இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். #EgmoreRailwayStation #TrainsDelayed
    வேலூர் விரிஞ்சிபுரம் ரெயில் நிலைய நடை மேடையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் அருகே விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் நடைமேடைகள் சீரமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று விரிஞ்சிபுரம் ரெயில் நிலையம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் 1-வது பிளாட்பாரத்தில் மண் ஏற்றி வந்த லாரி எதிர் பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அப்போது, அவ்வழியே ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து விரிஞ்சிபுரம் ரெயில் நிலைய மேலாளர் காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர், காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரி மீட்கபட்டது.

    இதனால், ஜோலார்பேட்டை மார்க்கமாகச் செல்லும் சங்கமித்ரா, பெங்களூரு, யஸ்வந்த்பூர், திருப்பதி இன்டர்சிட்டி உள்ளிட்ட 8 விரைவு மற்றும் வாராந்திர ரெயில்கள் சுமார் 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

    இந்த விபத்தால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு மேல் சென்னை மார்க்கத்திலிருந்து எந்த ரெயிலும் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை மார்க்கத்தில் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    தோவாளை அருகே தண்டவாளம் விரிசல் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை மார்க்கமாக செல்லும் ரெயில்களும், நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரும் ரெயில்களும் தாமதமானது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

    தோவாளை அருகே ரெயில் சென்றபோது பயங்கர சத்தம் கேட்டது. இந்த ரெயில் சென்ற சிறிது நேரத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலும் இந்த வழியாக சென்றது.

    அப்போதும் தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. இது வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் தோவாளையில் ரெயில் தண்டவாளத்தையொட்டி உள்ள தோட்டங்களில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    தோட்ட தொழிலாளர்கள் சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று தண்டவாளத்தை பார்த்தனர். அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டனர். உடனடியாக தொழிலாளிகள் இதுபற்றி தோவாளை மற்றும் நாகர்கோவில் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தோவாளை பகுதிக்கு விரைந்து வந்து தண்டவாளத்தை சோதனை செய்தனர். இதில் தண்டவாளம் விரிசல் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதனை சரி செய்யும் பணி நடந்தது.

    தண்டவாள விரிசல் காரணமாக நடு வழியில் நின்ற ரெயில்.

    ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை சீரமைக்கும் பணியை தொடங்கும் முன்பு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு கோவை செல்லும் பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு விட்டது. அந்த ரெயிலை அதிகாரிகள் வழியிலேயே நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.

    இதுபோல விரிசல் ஏற்படும் முன்பு சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மும்பை ரெயில் தோவாளையை தாண்டி சென்றதால் அதிர்ஷ்டவசமாக அந்த ரெயில்களும் தப்பியது.

    தண்டவாளம் விரிசல் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை மார்க்கமாக செல்லும் ரெயில்களும், நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரும் ரெயில்களும் தாமதமானது.

    பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வள்ளியூரில் நிறுத்தப்பட்டது. தண்டவாள சீரமைப்பு பணி முடிந்த பின்பு சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு ரெயில்கள் நாகர்கோவில் வந்தது.
    செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னைக்கு வரும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்தது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் - காட்டாங்கொளத்தூர் இடையே உள்ள தண்டவாளத்தில் இன்று அதிகாலை 5.40 மணியளவில் திடீரென விரிசல் ஏற்பட்டது.

    அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரெயில் சென்றது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் இதுபற்றி செங்கல்பட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதே போல செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டது.

    ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாள விரிசலை சரி செய்தனர். காலை 6 மணிக்கு பின்னர் ரெயில் போக்குவரத்து சீரானது.

    தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலில் சேது எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், அனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    ×