search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi"

    • சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • பேரணியில் மாணவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பேரணியில் மாணவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு சீருடை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    • விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர்.
    • மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான ‘அ' என்னும் எழுத்தை எழுதினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான 'அ' என்னும் எழுத்தை எழுதினர். மழலையர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாடப்புத்தகங்களை மழலையர்களுக்கு வழங்கி வாழ்த்தினர்.

    • வில்சன் சாலமன் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப் பட்டணம் கிராமத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக இருந்து வருபவர் வில்சன் சாலமன் (வயது 58).

    கார் மோதி விபத்து

    இவர் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக பாவூர்சத்திரம் நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    12 மோட்டார்கள் சேதம்

    இதில் 12 மோட்டார் சைக்கிள்கள் சேத மடைந்தன. வில்சன் சாலமன் ஒட்டி வந்த காரும் பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி வில்சன் சாலமன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
    • 10-வது நாளான விஜயதசமி அன்று “அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா” நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த வருட நவராத்திரி விழா 15-ந் தேதி முதல் நேற்று வரை கொண்டாடப்பட்டது.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு படிகளில் கொலுமேடை உருவாக்கப்பட்டது.

    நவராத்திரி பூஜையை மேலும் அழகாக்கும் வகையில் பள்ளியில் உள்ள லோட்டஸ், மார்னிங் குளோரி, ரைசிங் டைஸீ, சன் பிளவர் எனும் நான்கு அணி மாணவர்களும், இந்தியாவின் நான்கு திசைகளின் முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களின் பாரம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டு வகைகளை தனித்தனியே அவற்றின் தனித்தன்மை விளக்கும் விதமாக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். மார்னிங் குளோரி அணி மேற்கு இந்திய மாநிலங்களையும், சன் பிளவர் அணி தென்னிந்திய மாநிலங்களையும், லோட்டஸ் அணி வட இந்திய மாநிலங்களையும், ரைசிங் டைஸி அணி கிழக்கு இந்திய மாநிலங்களையும், மையமாக வைத்து அவற்றின் பாராம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் தோன்றிய விதம், சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியதோடு அவற்றை அணி மாண வர்களே மாணவர்களுக்கும் கொலுவை காண வந்தவர்களுக்கும் விளக்கிக் காட்டினர்.

    மேலும் ஆசிரியைகளும், கொலுவினை தினமும் வித்தியாசமாகக் காட்டும் விதத்தில் அவற்றினை அலங்காரப்படுத்தியதும், அந்தந்த நாளுக்குரிய கோலங்கள், மலர்கள், பிரசாதங்களை அவர்களே தயார்செய்து வந்து அன்றாட பூஜையை அந்நாட்களுக்குரிய வண்ண உடை உடுத்தி, மாண வர்களோடு இணைந்து வழிபாடு செய்தனர்.

    9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.10-வது நாளான விஜயதசமி அன்று "அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா" நடைபெற்றது. அதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உடன் வாழை இலை, பச்சரிசி, மஞ்சள் ஆகியவற்றை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை தொடங்கி வைத்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன், ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தார்.

    • முகாமில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்களுக்கு இயற்கை உரங்களை விதைத்து நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் இயற்கை முறை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம் இலஞ்சி குமார கோவில் அருகே உள்ள வயல்வெளி பகுதிகளில் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்திய மக்களின் உயிர்நாடி விவசாயம் என்பதை உணர்த்தும் வகையில் வேளாண்மை தொழிலில் பயிர் செய்யும் முறை பற்றியும், பயிர் பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றியும், பயிர் விளைச்சலில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினை களை பற்றியும் எடுத்து ரைக்கும் விதமாக மாணவ- மாணவிகள் விவசாயம் செய்வதற்கு பாரம்பரிய ஆடை யினை அணிந்து வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்க ளுக்கு இயற்கை உரங்களை விதைத்தும், தண்ணீர் பாய்ச்சு தல் போன்ற வேளாண் செயல்களை தங்களின் நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    விழிப்புணர்வுக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.
    • பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில், மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி பேசுகையில், அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்த உதவிய சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    அடுத்ததாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோ சனைகள் வழங்கினார்.மேலும் பாராளுமன்ற தேர்தலுக்காக தெருமுனை பிரசாரங்களை மேற்கொள்ள தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.

    • தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாலிபன்பொத்தை, டி.என்.எச்.பி காலனி, மேலமுத்தாரம்மன் கோவில் தெரு, களக்கோடித் தெரு, பாறையடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    கலெக்டர் திறந்து வைத்தார்

    இதில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) ஜோஸ்பின் சகாய பிரமிளா, உதவி செயற் பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப்ரியா, கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரன், கார்த்திகா, நாகூர் மீரான், ரெஜினா, சீதாலெட்சுமி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்கலநாயகி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அரங்கில் நடைபெற்றது
    • அசுர வேகத்தில் செல்லும் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு , காவல்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தென்காசி புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே கார்களை நிறுத்துவதற்கு பன்னடுக்கு கார் நிறுத்தம் கட்ட வேண்டும். பாவூர்சத்திரம் ஸ்டேட் வங்கி அருகே தடுப்புகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும், நகர் பகுதிகளில், அசுர வேகத்தில் செல்லும் அரசு பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் - ஆவுடையானூர் மற்றும் நாட்டார்பட்டி - பூவனூர் - திரவியநகர் சாலைகளை சீரமைக்க வேண்டும். தென்காசி நடு பல்கில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். கழுகுமலை - சங்கரன்கோவில், சுரண்டை - பாவூர்சத்திரம் சாலையில் உள்ள வேகத்தடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உறுப்பினர்கள் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தார்.

    இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ளதைப் போல தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே பன்னடுக்கு கார் நிறுத்தும் வசதி குறித்து பரிசீலிப்பதாகவும், தென்காசி நகர் பகுதிக்குள் ஏற்படும் வாகன நெருக்கடியை குறைக்க புறவழிச் சாலை பணிகள் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகளும் உறுதி அளித்தனர். அப்போது பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் எனவும், ஆலங்குளம்- தென்காசி இடைய 4 வழிச்சாலை பணிகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தொடங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அப்துல் ரஹிம் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், ஐவேந்திரன், கிருஷ்ண ராஜ், சுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
    • சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்தபோது,ரம்யா திடீரென மண்எண்ணையை குடித்துவிட்டார் என விசாரணையில் தெரியவந்தது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஆய்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ரம்யா என்ற மகள் உள்ளார்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து கர்ப்பமான அவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் நேற்று பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரம்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஆய்குடி போலீசார் ரம்யா உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். ரம்யா குழந்தை பெற்றதில் இருந்து சற்று மனதளவில் பாதிப்படைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்தபோது, திடீரென மண்எண்ணையை குடித்துவிட்டார்.

    இதனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பார்க்குமாறு கூறி அவரது கணவர் ரம்யாவை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து ரம்யாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் தான் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முடிவடையாத காரணத்தினால் தென்காசி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட உள்ளது.

    • போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    தென்காசி:

    இடைகால் சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சதுரங்க போட்டி சிவகிரி பாரத் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இந்த போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி, தரணி மெட்ரிகுலேஷன் பள்ளி,கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி , வாசுதேவநல்லூர் அகஸ்தியா பள்ளி, இடைகால் அரசினர் பள்ளி, ஏ.ஆர்.எஸ் மதார் குருகுலம் பள்ளி,ஆகிய பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    சதுரங்க போட்டியில் கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக நடக்கும் போட்டியில் ஆனந்தன் பேசியதாவது:-

    அடுத்த ஆண்டுக்குள் தென்காசி மாவட்டத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டராக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் குழந்தைகளை உருவாக்குவோம், அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளின் சிந்தனை திறன்களை வளர்க்கும் விதமான புத்தகங்கள், பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராமப்புற குழந்தைகள் தங்களது அடுத்த கட்ட சிந்தனை சார்ந்த போட்டிகளுக்கு தயாராகவும் , மிகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

    போட்டியில் குழந்தை களும் , ஏராளமான பெற்றோர்களும் பொதுப் பிரிவில் ஆர்வமாக பங்கேற்று தங்களின் திறமையை வெளிக்காட்டி பரிசுகளை தட்டிச் சென்றனர். பள்ளி தாளாளர் டாக்டர் எஸ். எஸ். செண்பகவிநாயகம், விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முருகேசன், ஐ.பி.எம். இந்திய தனியார் நிறுவனர் மாரிமுத்து, நடுவர்கள் பிரகாஷ்,சிவகணேஷ், மகாராஜன் உணவு பாதுகாப்பு வழங்கல், நெடுஞ்சாலை துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன், சேகர் கிராமப்புற ஆய்வாளர், சிவராமன் ஸ்ரீ குமரன் குரூப் ஆப் கம்பெனி, மருத்துவர் ரம்யா, மிரில்லா, தேவி ஆசிரியை ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியினை ஒருங்கினைப்பாளர் இசக்கி முத்து ஏற்பாடு செய்திருந்தார்.

    போட்டி நடந்த இடத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான சிறு பிரசாரமும் வழங்கப்பட்டது. அத்துடன் சணல் மூலம் தயாரிக்கப்பட்ட மக்கும் பைகள் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத முறையில் தேவிகா மகளிர் சுய உதவி குழு மூலம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்பு அவை மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
    • தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரெயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பி னருமான ராஜா எம்.எல்.ஏ. சென்னை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறியுள்ளதாவது:-

    விஜயதசமி விடுமுறைகள், தீபாவளி விடுமுறையும் நெருங்கி வருகின்றன. எனவே அந்த நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் தென்காசி வழியாக அக்டோபர் 24, 25 மற்றும் நவம்பர் 13,14, (திங்கள், செவ்வாய் )விடப்பட்டால் கூட்ட நெரிசலைக் குறைக்கும். மேலும் விஜயதசமி மற்றும் தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும். இதேபோல் விஜயதசமி மற்றும் தீபாவளிக்கு தாம்பரம் - நாகர்கோவில் - சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரெயில்களிலும் தென் தமிழகத்தில் இருந்து காத்திருப்புப் பட்டியல்களின் எண்ணிக்கை 1500-க்கு மேல் உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் பயணிகளுக்கு பெரிதும் உதவும், எனவே இதை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×