search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி புறவழிச் சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் -சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை
    X

    தென்காசி புறவழிச் சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் -சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை

    • தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அரங்கில் நடைபெற்றது
    • அசுர வேகத்தில் செல்லும் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு , காவல்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தென்காசி புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே கார்களை நிறுத்துவதற்கு பன்னடுக்கு கார் நிறுத்தம் கட்ட வேண்டும். பாவூர்சத்திரம் ஸ்டேட் வங்கி அருகே தடுப்புகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும், நகர் பகுதிகளில், அசுர வேகத்தில் செல்லும் அரசு பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் - ஆவுடையானூர் மற்றும் நாட்டார்பட்டி - பூவனூர் - திரவியநகர் சாலைகளை சீரமைக்க வேண்டும். தென்காசி நடு பல்கில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். கழுகுமலை - சங்கரன்கோவில், சுரண்டை - பாவூர்சத்திரம் சாலையில் உள்ள வேகத்தடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உறுப்பினர்கள் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தார்.

    இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ளதைப் போல தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே பன்னடுக்கு கார் நிறுத்தும் வசதி குறித்து பரிசீலிப்பதாகவும், தென்காசி நகர் பகுதிக்குள் ஏற்படும் வாகன நெருக்கடியை குறைக்க புறவழிச் சாலை பணிகள் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகளும் உறுதி அளித்தனர். அப்போது பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் எனவும், ஆலங்குளம்- தென்காசி இடைய 4 வழிச்சாலை பணிகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×