search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை"

    • ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.
    • மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலும் கொளுத்தி வருவதால், பொதுமக்கள் யாரும் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவானது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை அனலாக கொளுத்தியது. இரவிலும் காற்று குறைந்து வெப்ப அலை வீசியது. இதனால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று 1.30 மணி அளவில் இடியுடன் கூடிய கன மழை பெய்த தொடங்கியது. இந்த மழை மதியம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கன மழையால் சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புறநகர் பகுதிகளான எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, தேவூர், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, அரசிராமணி, கல்வடங்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் காற்றினால் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தது.

    ஏற்காடு, ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.

    பல நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. வெப்ப சலனம் நீங்கி இரவில் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது.

    மேட்டூரில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மாலை 3 மணிக்கு மேட்டூர், ஆர்.எஸ்.புரம், பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள 60 ஆண்டு பழமையான பெரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து சாலையில் சென்ற அரசு பஸ் மீது விழுந்தது. இந்த பஸ் சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஆகும்.

    மரம் சாய்ந்து விழுந்ததில் பஸ்சின் முன்புற கண்ணாடிகள் உடைந்தன. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சாலையோரம் மின் கம்பத்தில் உள்ள மின் கம்பி மீதும் வேப்பமர கிளைகள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    நடுரோட்டில் பஸ்சின் மீது இந்த வேப்பம் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து சேலம், தர்மபுரி செல்லும் வாகனங்கள் தங்கமாபுரி பட்டணம், சிட்கோ, கருமலைக்கூடல் வழியே உள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேட்டூர் தீயணைப்பு குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ராசிபுரம், புதுச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் குமாரபாளையத்தில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் குமாரபாளையம் நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளான எம்.ஜி.ஆர். நகர், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், ஆல ங்காட்டு வலசு, கல்லாங்காடு வலசு, சத்யா நகர், தட்டான் குட்டை, வேமன் காட்டு வலசு, வளையக்காரனூர், வட்டமலை, சடைய ம்பாளையம், சாமிய ம்பாளையம், கத்தேரி மற்றும் புளியம்பட்டி உள்பட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்ததையொட்டி பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர். பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நகரில் மின்சாரம் தடைபட்டது. 

    • மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது.
    • வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. 110 டிகிரி வரை தற்போது வெயில் தாக்கி வருகிறது.

    இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.

    இதை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • மலை உச்சியில் இருந்தபடி பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தனர்.
    • கோடை விழாவையொட்டி பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன.

    சேலம்:

    ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, பிரசித்தி பெற்ற கொல்லிமலை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குடும்பம், குடும்பமாக வருகின்றனர்.

    தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக சாரல் மழை விட்டு விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு குளிர்ச்சியான சீசனாக மாறியுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். ஏற்காடு மலையில் உள்ள காட்சிமுனைப் பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் உள்ளிட்ட இடங்களை பார்த்து மகிழ்ந்தனர். அவர்கள் மலை உச்சியில் இருந்தபடி பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தனர்.

    அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா என பூங்காக்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் மிகுந்துள்ளது. ஏற்காடு ஏரியில் உள்ள படகு துறையில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் திரண்டனர். இதனால் ஏரியில் பகல் முழுவதும் படகுகள் தொடர்ச்சியாக உலா வந்தன.


    சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்திலும் சிறு கடைகள், நொறுக்குத் தீனி கடைகள், பழச்சாறு கடைகள், பரிசுப் பொருட்களின் கடைகள் என ஏராளமான கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதனிடையே சுற்றுலாப் பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் பெரும்பாலானவை நிரம்பி வழிந்தன.

    சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் வந்ததால் ஏற்காடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. எனினும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்ததால் போக்குவரத்து பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கோடை காலம் முடியும் வரை ஏற்காடு திருவிழாக் கோலத்தில் இருக்கும் என்பதால், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை விழாவையொட்டி பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூக்கத் தொங்கி உள்ளன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.


    இதுபோல் மேட்டூருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்த அவர்கள் பின்னர், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அணை பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள மீன் காட்சியகம், மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்புப் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 2 நாட்களகாக வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
    • நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை பொதுமக்கள் தவிர்ப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஆண்டிபட்டி, வருசநாடு, கூடலூர், பெரியகுளம், தேனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது. மழை தொடர்ந்து பெய்தால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக உள்ளது 3 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடி திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.59 அடியாக உள்ளது. 50 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 2.6, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 7.4, சண்முகாநதி அணை 19.4, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 23, வீரபாண்டி 24, ஆண்டிபட்டி 6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.

    இந்த நிலையில், அடுத்த சில தினங்களில் தென்னிந்தியாவில் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் மே 7 வரையிலான காலகட்டத்தில் 23.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 74.9 மி.மீ ஆகும். ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட 69% குறைவாக பெய்துள்ளது.

    • வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
    • இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.

    இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரி வித்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 1 முதல் மே 6 வரையிலான காலகட்டத்தில் 19.8 மி மீ மழை பதிவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 71.4 மி மீ ஆகும். ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட 72% குறைவாக பெய்துள்ளது.

    • வாட்டி வதைக்கும் வெப்ப அலை தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
    • வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

    வாட்டி வதைக்கும் வெப்ப அலை தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் கோடையை குளிர்விக்க மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் கூறியுள்ளார். மே முதல் வாரத்திற்கு பின் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    TNL04010524: தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமை யான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்றும் பகலில் சுட்டெரித்தது. இந்நிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் திடீரென வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்றும் பகலில் சுட்டெரித்தது.

    இந்நிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் திடீரென வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.

    சிறிது நேரத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. அதே நேரத்தில் கொளுத்திய கோடை வெயிலால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடி யில் 29 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசியில் 16.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளை பொறுத்த வரை கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயரும் அளவிற்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றாலும், மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது.

    85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் கோடை வெயிலால் வேகமாக குறைந்து வருகிறது. அந்த அணையில் தற்போது 27.40 அடி நீர் மட்டுமே இருக்கிறது.

    ராமநதி அணையின் நீர் மட்டம் பாதியாக குறைந்துள்ளது. அதாவது 84 அடி கொண்ட அந்த அணையில் 41.50 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மேலும் 72.10 அடி கொண்ட கருப்பாநதியில் 39.37 அடி நீர் இருப்பும், மிகச்சிறிய அணையான குண்டாறு அணையின் நீர் இருப்பு 15.250 அடியாகவும் உள்ளது.

    • தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    சூறைக்காற்றால் வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்ட காஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.

    சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி தீபு (வயது 35) என்பவரின் 700 நேந்திரம் வாழைகள், சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழைகள், ராசு என்பவரின் 1000 வாழைகள், தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின் 1000 வாழைகள் என மொத்தம் 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது.

    அதேபோல தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல் ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலை பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒருபுறம் மழை வந்து சந்தோசம் இருந்த போதும் சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைகாற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது.
    • விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது.

    சென்னை:

    துபாயில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் துபாய் நகரம் வெள்ளத்தில் சிக்கி தவித்தது. வரலாறு காணாத மழை காரணமாக துபாய் விமான நிலையம் பாதிப்புக்குள்ளானது. விமான ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து துபாய்க்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது. அதன் பிறகு துபாய்க்கு விமான போக்குவரத்து தொடங்கியது.

    சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று விமான போக்குவரத்து தொடங்கியது. சென்னையில் இருந்து இன்று காலை துபாய்க்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 267 பயணிகள் பயணம் செய்தனர்.

    • வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராம த்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

    • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 தினங்களுக்கு பல்வேறு இடங்களில் பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தூத்துக்குடியில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதே போல ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை முதலே மிதமான மழை பெய்தது.

    இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர். கார்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஏரல் பகுதியில் இன்று சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×