search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை மரங்கள் சேதம்"

    • தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    சூறைக்காற்றால் வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்ட காஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.

    சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி தீபு (வயது 35) என்பவரின் 700 நேந்திரம் வாழைகள், சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழைகள், ராசு என்பவரின் 1000 வாழைகள், தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின் 1000 வாழைகள் என மொத்தம் 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது.

    அதேபோல தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல் ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலை பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒருபுறம் மழை வந்து சந்தோசம் இருந்த போதும் சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைகாற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாளபுரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராமத்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    • ஒரு வருட கால பயிரான வாழை பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
    • முறிந்து விழுந்துள்ள வாழை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோரக்காட்டூர், கடுக்காம் பாளையம், அய்யம் பாளையம், வெள்ளியங்காடு, குள்ளம்பாளையம், வெள்ளாங்கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாழை பயிரிட்டு உள்ளனர். இங்கு செவ்வாழை, மொந்தன், நேந்திரன், கதளி, ரஸ்தாளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிடப்பட்டு உள்ளது.

    ஒரு வருட கால பயிரான வாழை பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கடுக்காம் பாளையம், அய்யம் பாளையம், கோரக்காட்டூர், வெள்ளியங்காடு, வெள்ளாங்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள மொந்தன், கதளி, செவ்வாழை ரக வாழைகள் முறிந்து விழுந்து முழுமை யாக சேதமடைந்தது. ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த ஆயிரம் வாழைகளில் 400 முதல் 500 வாழை மரங்கள் முறிந்து விழுந்து உள்ளது. காற்றுக்கு சேதமடையாமல் இருக்க வாழைமரங்கள் ஒன்றுடன் ஒன்று கயிறு மூலம் கட்டப்பட்டிருந்த நிலையில் பாதி வாழை மரங்கள் முறிந்து விழுந்தாலும், கயிறுகளால் கட்டப்பட்டு உள்ளதால் மற்ற வாழைமரங்களும் முறிந்து விழுந்து வருகிறது.

    ஒரு வாழைக்கு சுமார் 150 முதல் 200 ரூபாய் வரை செலவு செய்து ஒரு வருடம் வரை வளர்க்கப்பட்டு அறுவடைக்கு சில நாட்களே உள்ள நிலையில் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.70 லட்சம் அளவிற்கு சேதமடைந்துள்ளது. அதே நேரத்தில் முறிந்து விழுந்துள்ள வாழை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

    பயிர் காப்பீடுக்கு என குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் காப்பீடு நிறுவனங்களுக்கு விவசாயிகள் செலுத்தி வந்தாலும், இது வரை காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கியதில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்தும் பயனில்லாத நிலையே உள்ளது. இதனால் வாழைக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கிடைக்கும் இழப்பீட்டு தொகையை வைத்து முறிந்து விழுந்து வாழையை அப்புறப்படுத்த பயன்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    • சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் வருவாய், தோட்டக்கலை த்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
    • கணக்கெடுப்பு குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்த பின்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    அவினாசி:

    திருப்பூா் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் அவிநாசி பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அவினாசி, சேவூா், புதுப்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், கருவலூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காற்று வீசியதால் இப்பகுதிகளில் சுமாா் 50 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

    சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் வருவாய், தோட்டக்கலை த்துறையினா் ஈடுபட்டுள்ளனா். கணக்கெடுப்பு குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்த பின்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    சூறாவளி காற்றால் சாய்ந்த வாழைகள், பயிரிட்ட 15 மாதங்கள் கழித்து அறுவடை செய்யும் பயிராகும். ஒரு வாழைக்கன்றை ரூ.40 முதல் ரூ.50 வரை வாங்கி பயிரிட்டோம். இந்த கன்றை நடுவதற்கு முன்பு உழவு செய்ய வேண்டும். அதற்கு ஒரு கன்றுக்கு ரூ.10 செலவு ஆகிறது.

    உழவுக்கு பின் கன்று நடுவதற்கு ரூ.10 ஆகிறது. மொத்தம் 70 ரூபாய் கன்று நடும் போதே செலவு ஆகிறது. அதன் பின் 15 மாத காலங்களில் உரம், பூச்சி மருந்துகளுக்கு செலவாகும். ஒரு வாழை மரத்திற்கு ரூ.150 வரை செலவு ஆகிறது. 1 ஏக்கரில் 1000 வாழைகள் நடுகிறோம். இந்த நிலையில் 1 ஏக்கருக்கு சுமார் ரூ.1½ லட்சம் செலவு ஆகிறது.

    குலை தள்ளி அறுவடைக்கு குறைந்த நாட்களே இருக்கும் போது இயற்கை சீற்றத்தால், சூறாவளி காற்றால் அனைத்து வாழை மரங்களும் சாய்ந்து எங்களது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. வருவாய் துறையினர் ஒவ்வொரு முறையும் கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவதாக தெரிவிக்கிறார்கள்.

    ஆனால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு எந்தவித இழப்பீடு தொகையோ, நிவாரண தொகையோ எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி தற்போது சேதமடைந்துள்ள வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×