என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நிலக்கோட்டை அருகே சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் 2000 வாழை மரங்கள் சேதம்
- சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
- வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் தற்போது வாழை, தென்னை மரங்களை சாகுபடி செய்து இருந்தார். இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மேலும் மிளகாய்பட்டி, ஆண்டிபட்டி, முசுவனூத்து உள்ளிட்ட கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டு இருளில் மூழ்கி கிடந்தன. இந்நிலையில் மின்சார வாரியத்துறையின் நடவடிக்கையால் மீண்டும் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மீண்டும் திடீரென இப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்தில் இருந்த சுமார் 2000 வாழை மரங்களின் நடுப்பகுதி முறிந்து தரையில் சாய்ந்தது. இதைப் பார்த்த விவசாயி ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.
மேலும் இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திர சீசனில் மழை பெய்வது ஆறுதலாக இருந்த போதிலும், சூறாவளி காற்றுடன் பெய்த மழை பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை, பழனி, சத்திரப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. எனவே வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களில் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.






