search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை: 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்
    X

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை: 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்

    • ஒரு வருட கால பயிரான வாழை பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
    • முறிந்து விழுந்துள்ள வாழை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோரக்காட்டூர், கடுக்காம் பாளையம், அய்யம் பாளையம், வெள்ளியங்காடு, குள்ளம்பாளையம், வெள்ளாங்கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாழை பயிரிட்டு உள்ளனர். இங்கு செவ்வாழை, மொந்தன், நேந்திரன், கதளி, ரஸ்தாளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிடப்பட்டு உள்ளது.

    ஒரு வருட கால பயிரான வாழை பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கடுக்காம் பாளையம், அய்யம் பாளையம், கோரக்காட்டூர், வெள்ளியங்காடு, வெள்ளாங்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள மொந்தன், கதளி, செவ்வாழை ரக வாழைகள் முறிந்து விழுந்து முழுமை யாக சேதமடைந்தது. ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த ஆயிரம் வாழைகளில் 400 முதல் 500 வாழை மரங்கள் முறிந்து விழுந்து உள்ளது. காற்றுக்கு சேதமடையாமல் இருக்க வாழைமரங்கள் ஒன்றுடன் ஒன்று கயிறு மூலம் கட்டப்பட்டிருந்த நிலையில் பாதி வாழை மரங்கள் முறிந்து விழுந்தாலும், கயிறுகளால் கட்டப்பட்டு உள்ளதால் மற்ற வாழைமரங்களும் முறிந்து விழுந்து வருகிறது.

    ஒரு வாழைக்கு சுமார் 150 முதல் 200 ரூபாய் வரை செலவு செய்து ஒரு வருடம் வரை வளர்க்கப்பட்டு அறுவடைக்கு சில நாட்களே உள்ள நிலையில் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.70 லட்சம் அளவிற்கு சேதமடைந்துள்ளது. அதே நேரத்தில் முறிந்து விழுந்துள்ள வாழை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

    பயிர் காப்பீடுக்கு என குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் காப்பீடு நிறுவனங்களுக்கு விவசாயிகள் செலுத்தி வந்தாலும், இது வரை காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கியதில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்தும் பயனில்லாத நிலையே உள்ளது. இதனால் வாழைக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கிடைக்கும் இழப்பீட்டு தொகையை வைத்து முறிந்து விழுந்து வாழையை அப்புறப்படுத்த பயன்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×