search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pondicherry"

    மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் சரவணன் நகர் கொண்டாரெட்டி தெருவை சேர்ந்தவர் தாஜன் (வயது52). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    மதுகுடிக்கும் பழக்கம் உள்ள தாஜன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் கேட்டு மதுகுடித்து வந்தார். அதுபோல் தாஜன் நேற்றும் வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால் லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த தாஜன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரிய மார்க்கெட்டில் நூதன முறையில் போலி லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி லாட்டரியை முற்றிலும் ஒழிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவை ஏற்று கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் போலி லாட்டரி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற் கொண்டு செய்து வருகிறார்.

    நேற்று ஒதியஞ்சாலை பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் பெரிய மார்க்கெட்டில் நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் குலுக்கலில் ஒரு நம்பர் விழுந்தால் ரூ.50-ம், 2 நம்பர் விழுந்தால் ரூ. 500-ம், 3 நம்பர் விழுந்தால் ரூ.13 ஆயிரம் பரிசு தருவதாக ஒருவர் தினமும் பெரிய மார்க்கெட் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு மாறனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பெரிய மார்க்கெட்டில் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டனர்.

    அப்போது பூக்கடை பகுதியில் ஒருவர் கையில் துண்டு சீட்டுகளை வைத்து கொண்டு செல்போனில் பேசியபடி இருந்ததை போலீசார் கண்டனர்.

    அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் சிறு வியாபாரிகளுக்கு நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் அவர் கடலூரை சேர்ந்த சண்முகம் (வயது 43) என்பதும், அவர் தினமும் கடலூரில் இருந்து புதுவை பெரிய மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 நம்பர் போலி லாட்டரி சீட்டுகள், விற்பனை பணம் ரூ. 14,500 மற்றும் செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைது செய்தனர்.

    புதுவை அருகே பன்றி காய்ச்சலால் 9 மாத கர்ப்பிணி இறந்த சம்பவம் கீழ்கூத்தபாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் தாலுகா கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாபகேசவன் (வயது 35). புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் சுகன்யா மீண்டும் கர்ப்பமானார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை உறவினர்கள் புதுவை ராஜீவ்காந்தி மகளிர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுகன்யாவை மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சுகன்யாவை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சுகன்யா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி சுகன்யா உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் இறந்து போனது. தாயும், சிசுவும் இறந்ததை அறிந்து சுகன்யாவின் கணவர் பஞ்சாப கேசவன் குடும்பத்தினர் கதறி அழுதனர். பன்றி காய்ச்சலால் 9 மாத கர்ப்பிணி இறந்த சம்பவம் கீழ்கூத்தபாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் காரணமாக இதுவரை 39 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #MeteorologicalDepartment
    சென்னை:

    தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரையில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் வெப்ப சலனம் காரணமாகவும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.



    அடுத்த 3 நாட்களுக்கு அநேக இடங்களிலும் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 8 செ.மீ., கோவையில் 6 செ.மீ, வால்பாறையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    நீலகிரி ஜி.பஜார், பீளமேடு, சூளகிரி, பரமத்தி, கோவை தெற்கு, ஈரோடு ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும் தாளவாடி, தளி, அரவாக்குறிச்சி, ஏற்காட்டில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. #Rain #MeteorologicalDepartment

    ஆந்திர கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #ChennaiRain
    சென்னை:

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் தூறிக்கொண்டே இருந்தது.

    இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-



    மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு விட்டு, விட்டு மழை பெய்யும்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலம், வால்பாறை, சேந்தமங்கலத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. சின்னக்கல்லார், செங்கோட்டை, மற்றும் தேவலாவில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், சேலம், திருவாரூர், கொல்லிமலை, பாபநாசம், பெருந்துறை, கூடலூர், தொண்டி, தென்காசி, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், உத்தமபாளையம், சென்னை வடக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புழல் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #ChennaiRain
    புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BusFareHike
    புதுச்சேரி:

    புதுவையில் மாநில அரசுக்கு தனியாக பஸ் போக்குவரத்து கழகம் இருந்தாலும் இங்கு குறைவான பஸ்களே உள்ளன. இந்த பஸ்கள் பெரும்பாலும் புதுவை மாநிலத்துக்குள்ளேயே இயக்கப்படுகிறது.

    புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதிகளுக்கு தமிழக அரசு பஸ்களே அதிக அளவில் இயக்கப்படுகிறது. மேலும் தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளூர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுச்சேரி மாநில போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், புதுச்சேரியில் உள்ளூர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி குறைந்த பட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து 7 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து 14 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரின் பிரதான பகுதிகளில் சாராய கடைகள் இருக்க கூடாது. இதற்காக நகரில் உள்ள 4 சாராய கடைகள் நிரந்தரமாக மூட புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. #SmartCityproject

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் 100 நகரங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படுகிறது.

    ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் புதுவை நகரமும் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு மற்றும் பிரான்சு நாட்டு நிதி உதவியுடன் ரூ.1800 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுவை நகரில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்க முகாமை என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் திட்ட பணிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது.


    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரின் பிரதான பகுதிகளில் சாராய கடைகள் இருக்க கூடாது. இதற்காக நகரில் உள்ள 4 சாராய கடைகள் நிரந்தரமாக மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதன்படி புதுவை ஆட்டுப்பட்டி, முத்தியால்பேட்டை, முத்தையா முதலியார் பேட்டை, காட்டாமணிக் குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 சாராய கடைகளை வருகிற ஜூலை 1-ந் தேதியில் நிரந்தரமாக மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதோடு வம்பாகீரப் பாளையத்தில் கடற்கரை சுற்றுலா திட்டம் செயல் படுத்தப்படுவதால் வழியில் உள்ள திப்புராயபேட்டை சாராய கடை நிரந்தரமாக மூடப்படுகிறது. மேலும், பொரையூர் கிராமத்தில் உள்ள சாராயக்கடைக்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த கடையும் நிரந்தரமாக மூடப்படுகிறது. #SmartCityproject

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஜெயலலிதா நடத்திய சட்ட போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாக காத்து நிற்கின்றன. ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பிலும், தமிழக முதல்-அமைச்சர் பதவியிலும் இருந்து நடத்திய சட்ட போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்தியும், மத்திய அரசிடம் வலியுறுத்தி பேசியும், உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்றுள்ளது.

    இது அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். உடனடியாக காவிரி நீர் பங்கீட்டை தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனை ஜெயலலிதாவின் நிர்வாக திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். தமிழக அரசு, காவிரி தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது.

    காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகின்ற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் ஜூலை 11-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலிலும் ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    திருவாரூரில் 17-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், மயிலாடுதுறையில் 18-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள் அனைத்து அணியினருடனும் இணைந்து பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து அதன் விவரங்களை தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு காரில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியாங்குப்பம்:

    பாகூர் அருகே ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது50). புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தும் தொழில் செய்து வந்த இவர் ஏற்கனவே 2 முறை காரில் சாராயம் கடத்தி கடலூர் கலால் பிரிவு போலீஸ் பிரபுவை கைது செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிரபு மீண்டும் புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்துவதாக கடலூர் கலால் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கலால் போலீசார் ரகசியமாக பிரபுவை கண்காணித்து வந்தனர்.

    இன்றுகாலை பிரபு ஒரு காரில் அபிஷேகப்பாக்கத்தில் இருந்து டி.என்.பாளையம் வழியாக சாராயம் கடத்தி வந்த போது கடலூர் கலால் போலீசார் காரை நிறுத்தி பிரபுவை கைது செய்தனர். காரில் கடத்தி வரப்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுவை ஏ.டி.எம். மோசடியில் முக்கிய குற்றவாளியான சந்துருஜியை மும்பையில் போலீசார் கைது செய்தனர். அவரை புதுவை அழைத்து வருவதற்காக கூடுதல் படை மும்பை விரைந்துள்ளது. #ATMscam
    புதுச்சேரி:

    புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா, அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜியின் தம்பி மணிசந்தர் உள்பட இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில், முக்கிய குற்றவாளியான சந்துருஜி மும்பையில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தனிப்படையினர் மும்பை விரைந்தனர்.

    அவர்கள் சந்துருஜியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் அங்குள்ள ஓட்டலில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவரை புதுவை கொண்டு வருவதற்காக கூடுதல் படை மும்பை விரைந்துள்ளது.

    ஏ.டி.எம். மோசடியில் புதுவையை சேர்ந்த வங்கி அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ஏனென்றால், ஏ.டி.எம். மோசடி கும்பல் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அந்த கார்டுகளை கடைகளில் பயன்படுத்தும் ஸ்வைப்பிங் எந்திரத்தில் தேய்த்து தங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி உள்ளனர்.

    இதற்காக 50-க்கும் மேற்பட்ட ஸ்வைப்பிங் எந்திரங்களை சொந்தமாக வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இந்த ஸ்வைப்பிங் எந்திரங்களை யாரும் எளிதாக வாங்கி விட முடியாது.

    ஸ்வைப்பிங் எந்திரம் தேவைப்படுவோர் வங்கிகளில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். அவர்கள் எந்த நிறுவனம் நடத்துகிறோம் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும். அதனுடைய வர்த்தகம் பற்றிய விவரங்களையும், ஒரு நாளைக்கு எவ்வளவு வர்த்தகம் நடைபெறும் என்ற விவரங்களையும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.

    அவர்களுக்கு ஸ்வைப்பிங் எந்திரம் கண்டிப்பாக தேவை என வங்கி முடிவு செய்தால் தான் ஸ்வைப்பிங் எந்திரத்தை வழங்கும். அதிலும் ஒன்று அல்லது இரண்டு ஸ்வைப்பிங் எந்திரங்கள் மட்டும்தான் வழங்கப்படும். மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக இருந்தால் பல ஸ்வைப்பிங் எந்திரங்களை வாங்கி கொள்ளலாம்.

    இந்த விதிமுறைகளை மீறி யாருக்கும் ஸ்வைப்பிங் எந்திரங்களை வழங்காது. ஆனால், புதுவை ஏ.டி.எம். மோசடி கும்பல் எந்த வர்த்தகமும் செய்யாமலே 50-க்கும் மேற்பட்ட ஸ்வைப்பிங் எந்திரங்களை வாங்கி இருக்கிறார்கள்.

    இதில், ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு மட்டுமே 19 ஸ்வைப்பிங் எந்திரங்களை வங்கி வழங்கி உள்ளனர். பொதுவாக கம்ப்யூட்டர் சென்டரில் புரவுசிங் செய்வோர்கள் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை இண்டர்நெட் பயன்படுத்துவார்கள்.

    இது, மிக குறைவான தொகை என்பதால் அவர்கள் நிச்சயமாக ஸ்வைப்பிங் எந்திரத்தில் பணம் செலுத்த மாட்டார்கள். எனவே, கம்ப்யூட்டர் சென்டருக்கு ஸ்வைப்பிங் எந்திரமே தேவையில்லை.

    அப்படி தேவை என்றாலும் கூட ஒன்று அல்லது இரண்டு ஸ்வைப்பிங் எந்திரம் வழங்கி இருக்கலாம். ஆனால், 19 எந்திரம் வழங்கி இருப்பதால் இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

    அங்கு மோசடி நடப்பது தெரிந்தே வங்கி அதிகாரிகள் தாராளமாக ஸ்வைப்பிங் எந்திரங்களை வழங்கி இருக்கிறார்கள். அதாவது, வங்கி அதிகாரிகளும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

    அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஸ்வைப்பிங் எந்திரத்தில் பெரும்பாலானவை தனியார் வங்கிகளில் இருந்தே பெறப்பட்டுள்ளது.

    எனவே, தனியார் வங்கி அதிகாரிகள் பலர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.



    ஸ்வைப்பிங் எந்திரம் வாங்குவதற்குள்ள கட்டுப்பாடுகள் குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது:-

    ஒரு வர்த்தக நிறுவனம் ஸ்வைப்பிங் எந்திரம் வாங்க வேண்டும் என்றால் முறைப்படி எங்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் வியாபாரம் தொடர்பான பல விவரங்களை விண்ணப்பத்தில் நாங்கள் கேட்டு இருப்போம். அதில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

    அவர்கள் குறிப்பிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து எங்களுடைய வங்கி கள அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்வார்கள். அது சரியாக இருந்தால் மட்டும்தான் ஸ்வைப்பிங் எந்திரம் வழங்கப்படும்.

    ஒன்றிரண்டு எந்திரங்களுக்கு மேல் வழங்க மாட்டோம். அதற்கு மேல் தேவைப்பட்டால் அந்நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக இருக்க வேண்டும். அதற்கான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

    ஸ்வைப்பிங் எந்திரம் மூலம் தினமும் எவ்வளவு வர்த்தகம் நடைபெறும் என்பதையும் நாங்கள் கண்காணிப்போம். திடீரென அதிக பணம் பரிமாற்றம் இருந்தாலும் நாங்கள் அது பற்றி ஆய்வு செய்வோம்.

    எனவே, ஸ்வைப்பிங் எந்திரத்தை தவறாக பயன் படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாமலேயே வங்கிகள் எல்லா நடைமுறைகளையும் பின்பற்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் ஒரு நபர் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலே வருமான வரித்துறைக்கும், மற்ற அரசு புலனாய்வு துறைகளுக்கும் வங்கியில் இருந்து தகவல் சென்று விடும்.

    ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்ட நபர்கள் வங்கி கணக்குக்கு திடீரென கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது. அதுபற்றிய தகவல்களை வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு வங்கி அதிகாரிகள் சரியாக தெரிவித்தார்களா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    2017-ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது, அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் இருந்து எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் இருந்தன. ரூ. 4 ஆயிரத்து மேல் யாரும் பணம் எடுக்க முடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    ஆனால், அந்த நேரத்தில் இந்த மோசடி கும்பலிடம் தாராளமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழங்கி உள்ளது. மேலும் ரூ.500, ரூ. 1000 நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த பல நபர்கள் இந்த மோசடி கும்பல் மூலம் ரூ. 2 ஆயிரமாக மாற்றி இருக்கிறார்கள்.

    இவர்களுக்கு மட்டும் ரூ. 2 ஆயிரம் எப்படி கிடைத்தது? என்பதிலும் மர்மம் நிலவுகிறது. இதிலும் வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்து அவர்களுக்கு உதவி இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதனால் வங்கி அதிகாரிகளுக்கும், மோசடி கும்பலுக்கும் இருந்த தொடர்பு குறித்து போலீசார் இப்போது விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இதில் வங்கி அதிகாரிகள் பலர் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ATMscam
    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 1330 அடி நீள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரையும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் வனம் மற்றும் வனவிலங்கு துறையும், புதுவை சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தேங்காய்திட்டு அரசு கழிமுக மீன் பண்ணையில் 1330 அடி நீள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரையும் போட்டி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாரியப்பன், ஜி.ஆர். சண்முகம், டாக்டர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். வினோத்குமார் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக புதுவை வனத்துறை தலைமை வன காப்பாளர் குமார், புதுவை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மோகன்குமார், மீன்வளத்துறை துணை இயக்குனர் மீரா சாகிப் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவிய போட்டியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கந்தசாமி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    செம்படுகை நன்னீரகம் ராமமூர்த்தி, ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றிச்செல்வம், பூவுலகின் நண்பர்கள் சீனு.தமிழ்மணி, எம்.ஜி.ஆர். பொதுநல பேரவை சிவா, கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் ராஜா, தமிழ்கனல் ராமகிருஷ்ணன், தமிழ்பணி மன்றம் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    புதுவையில் பஸ்கள் முற்றிலும் ஓடாததால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டது.

    அதே போல் புதுவையிலும் முழு அடைப்பு நடத்தப்படும் என்று தி.மு.க.வினர் அறிவித்து இருந்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

    அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. புதுவையில் கடைகள் நிறைந்து காணப்படும் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, மி‌ஷன் வீதி, சின்ன சுப்புராயப் பிள்ளை வீதி, பாரதி வீதி, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, எஸ்.பி. பட்டேல் சாலை, புஸ்சி வீதி, கடலூர் சாலை, விழுப்புரம் சாலை, வழுதாவூர் சாலை என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    அதேபோல் பெரிய மார்க்கெட், முத்தியால் பேட்டை மார்க்கெட், சின்னக்கடை மார்க்கெட், முதலியார் பேட்டை மார்க்கெட் ஆகியவையும் மூடப்பட்டு இருந்தன.

    ஒரு சில இடங்களில் மட்டும் பெட்டிக்கடைகள் திறந்து இருந்தன. அனைத்து கடைகளையும் மூடும்படி வற்புறுத்தி தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிளில் வீதி, வீதியாக சென்றனர். இதனால் திறந்து இருந்த ஒன்றிரண்டு சிறு, சிறு கடைகளும் மூடப்பட்டன.

    காமராஜர் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இதை பார்த்த தி.மு.க.வினர் பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. இதன் பிறகு அந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

    இதே போல் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன.

    புதுவையில் இன்று முற்றிலும் பஸ்கள் ஓடவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தமிழக அரசு பஸ்கள் நேற்று இரவே நிறுத்தப்பட்டன.

    சென்னையில் இருந்து புதுவை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படும். இன்று அவையும் நிறுத்தப்பட்டன. தமிழக அரசு பஸ்கள் எதுவுமே புதுவைக்கு வரவில்லை.

    அதே போல் புதுவையில் அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்களும் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

    பஸ்கள் முற்றிலும் ஓடாததால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள்.

    ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல முடியாம் மிகவும் சிரமப்பட்டனர். முழு அடைப்பையொட்டி அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பினால் புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது.
    ×