search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்துருஜி"

    புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி செய்ததில் முக்கிய குற்றவாளியான சந்துருஜி 80 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். #ATMFraud
    புதுச்சேரி:

    புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி செய்ததில் முக்கிய குற்றவாளியான சந்துருஜி 80 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னையில் இருந்த அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மும்பை, டெல்லி என வடமாநிலங்களில் சுற்றித் திரிந்த சந்துருஜி தனது நண்பர்கள் மற்றும் வேண்டியவர்களுடன் வாட்ஸ்-அப் மூலம் தகவல்களை பரிமாறுவது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதை சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் மூலம் கண்காணித்த போலீசார் தென் சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரை சந்திக்க வருவதை கண்டுபிடித்தனர்.

    அவரை எதிர்பார்த்து ரகசியமாக காத்து இருந்த போலீசாரிடம் சந்துருஜி சிக்கினார். அவரை நேற்று புதுவைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது இந்த மோசடி தொடர்பாக பல்வேறு புதிய தகவல்களையும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

    ஏ.டி.எம்.மோசடியில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இப்போது சந்துருஜியும் கைதானதை அடுத்து இதன் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த மோசடியில் மேலும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? என்று சந்துருஜியிடம் விசாரித்தனர். ஆனால், அவர் இன்னும் முழுமையான விவரங்களை சொல்லவில்லை.

    இன்று சந்துருஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அடுத்ததாக காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது மற்ற குற்றவாளிகள் யார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும்.

    போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதற்கு 2 முறைகளை கையாண்டு உள்ளனர். ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை ரகசியமாக பொருத்தி அதன் மூலம் ஏ.டி.எம். கார்டில் உள்ள ரகசிய குறியீடுகளை பெற்று போலி கார்டுகளை தயாரித்து இருக்கிறார்கள்.

    சர்வதேச கும்பல் ஒன்று மற்றவர்களின் ஏ.டி.எம். கார்டு குறியீடுகளை கம்ப்யூட்டர் ஹேக்கிங் மூலம் பெற்று அவற்றை மோசடி கும்பலுக்கு விற்று வருகிறார்கள்.

    அந்த கும்பலிடம் இருந்தும் இணையதளம் மூலம் ஏ.டி.எம். கார்டு ரகசியங்களை தலா 4 டாலர் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். அதன் மூலமும் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்துள்ளனர்.

    பெரும்பாலான ஏ.டி.எம். கார்டுகள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையதாகும். வெளிநாடுகளில் ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுக்கும் போது அதற்கான எஸ்.எம்.எஸ். தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு வராது.

    மேலும் ஏ.டி.எம். கார்டில் பணம் திருட்டு போனால் சம்பந்தப்பட்ட வங்கிகளே அந்த பணத்தை வாடிக்கையாளருக்கு திருப்பி கொடுத்து விடும்.

    எனவே, பணத்தை இழந்தவர்கள் புகார் செய்ய மாட்டார்கள். இதனால் நமக்கு சிக்கல் வராது என்று கருதியே வெளிநாட்டினரை குறிவைத்து மோசடி செய்து இருக்கிறார்கள்.

    இதுவரை 140 போலி ஏ.டி.எம். கார்டுகளை அவர்கள் தயாரித்து மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில், 4 கார்டுகள் மட்டுமே இந்தியர்களுடையது. மற்ற அனைத்து கார்டுகளுமே வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கார்டு ஆகும்.

    அமெரிக்கா, சவுதி அரேபியா, ஜப்பான், சுவீடன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் பல நூறு இருக்கலாம் என கருதப்படுகிறது. அது விசாரணைக்கு பின்னரே கண்டுபிடிக்க முடியும்.

    ஏ.டி.எம். கார்டுகளை ஸ்வைப்பிங் எந்திரத்தில் தேய்த்து அதன் மூலம் பொருட்கள் வாங்கியது போல் காட்டி தங்களது வங்கி கணக்குக்கு பணமாக மாற்றி இருக்கிறார்கள்.

    மேலும் கோவை- சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் இந்த போலி கார்டுகளை பயன்படுத்தி விமான டிக்கெட்டுகளை வாங்கி பின்னர் அதை சலுகை விலையில் விற்று அதன் மூலமும் பல கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளனர்.

    எவ்வளவு பணம் மோசடி செய்து இருக்கிறார்கள் என்ற விவரங்களை தற்போது சேகரித்து வருகிறார்கள்.

    இந்த பணத்தை பயன்படுத்தி ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    முக்கிய குற்றவாளி சந்துருஜி இவ்வளவு நாளும் தலைமறைவாக இருந்ததற்கு பலரும் உதவி இருக்கிறார்கள்.

    ஆரம்பத்தில் புதுவையையொட்டி உள்ள தமிழக நகரங்களில் தான் தங்கி இருந்துள்ளார். அதன் பிறகு பெங்களூர் சென்ற அவர், பின்னர் மும்பை, டெல்லி என சுற்றி திரிந்துள்ளார்.

    அவர் தொடர்ந்து புதுவையை சேர்ந்த பலருடன் தொடர்பில் இருந்துள்ளார். டெலிபோன் மூலம் அவர்களுடன் பேசி வந்துள்ளார். இவர்களில் பலர் சந்துருஜி ரகசியமாக தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர்.

    அவர்கள் யார்? என்ற பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். சந்துருஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் போதும், இதுபற்றி முழுமையாக விசாரிக்க இருக்கிறார்கள்.

    அப்போது அடைக்கலம் கொடுத்த நபர்களின் முழு விவரங்களும் தெரிய வரும். அவர்களையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சந்துருஜியிடம் விசாரணை நடத்திய பிறகு மேலும் குற்றவாளிகள் இதில் இருப்பது தெரியவந்தால் கைது செய்யப்படுவார்கள்.

    அதன் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை தீவிரமாக நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள். #ATMFraud
    புதுவை ஏ.டி.எம். மோசடியில் முக்கிய குற்றவாளியான சந்துருஜியை மும்பையில் போலீசார் கைது செய்தனர். அவரை புதுவை அழைத்து வருவதற்காக கூடுதல் படை மும்பை விரைந்துள்ளது. #ATMscam
    புதுச்சேரி:

    புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா, அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜியின் தம்பி மணிசந்தர் உள்பட இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில், முக்கிய குற்றவாளியான சந்துருஜி மும்பையில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தனிப்படையினர் மும்பை விரைந்தனர்.

    அவர்கள் சந்துருஜியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் அங்குள்ள ஓட்டலில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவரை புதுவை கொண்டு வருவதற்காக கூடுதல் படை மும்பை விரைந்துள்ளது.

    ஏ.டி.எம். மோசடியில் புதுவையை சேர்ந்த வங்கி அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ஏனென்றால், ஏ.டி.எம். மோசடி கும்பல் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அந்த கார்டுகளை கடைகளில் பயன்படுத்தும் ஸ்வைப்பிங் எந்திரத்தில் தேய்த்து தங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி உள்ளனர்.

    இதற்காக 50-க்கும் மேற்பட்ட ஸ்வைப்பிங் எந்திரங்களை சொந்தமாக வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இந்த ஸ்வைப்பிங் எந்திரங்களை யாரும் எளிதாக வாங்கி விட முடியாது.

    ஸ்வைப்பிங் எந்திரம் தேவைப்படுவோர் வங்கிகளில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். அவர்கள் எந்த நிறுவனம் நடத்துகிறோம் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும். அதனுடைய வர்த்தகம் பற்றிய விவரங்களையும், ஒரு நாளைக்கு எவ்வளவு வர்த்தகம் நடைபெறும் என்ற விவரங்களையும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.

    அவர்களுக்கு ஸ்வைப்பிங் எந்திரம் கண்டிப்பாக தேவை என வங்கி முடிவு செய்தால் தான் ஸ்வைப்பிங் எந்திரத்தை வழங்கும். அதிலும் ஒன்று அல்லது இரண்டு ஸ்வைப்பிங் எந்திரங்கள் மட்டும்தான் வழங்கப்படும். மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக இருந்தால் பல ஸ்வைப்பிங் எந்திரங்களை வாங்கி கொள்ளலாம்.

    இந்த விதிமுறைகளை மீறி யாருக்கும் ஸ்வைப்பிங் எந்திரங்களை வழங்காது. ஆனால், புதுவை ஏ.டி.எம். மோசடி கும்பல் எந்த வர்த்தகமும் செய்யாமலே 50-க்கும் மேற்பட்ட ஸ்வைப்பிங் எந்திரங்களை வாங்கி இருக்கிறார்கள்.

    இதில், ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு மட்டுமே 19 ஸ்வைப்பிங் எந்திரங்களை வங்கி வழங்கி உள்ளனர். பொதுவாக கம்ப்யூட்டர் சென்டரில் புரவுசிங் செய்வோர்கள் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை இண்டர்நெட் பயன்படுத்துவார்கள்.

    இது, மிக குறைவான தொகை என்பதால் அவர்கள் நிச்சயமாக ஸ்வைப்பிங் எந்திரத்தில் பணம் செலுத்த மாட்டார்கள். எனவே, கம்ப்யூட்டர் சென்டருக்கு ஸ்வைப்பிங் எந்திரமே தேவையில்லை.

    அப்படி தேவை என்றாலும் கூட ஒன்று அல்லது இரண்டு ஸ்வைப்பிங் எந்திரம் வழங்கி இருக்கலாம். ஆனால், 19 எந்திரம் வழங்கி இருப்பதால் இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

    அங்கு மோசடி நடப்பது தெரிந்தே வங்கி அதிகாரிகள் தாராளமாக ஸ்வைப்பிங் எந்திரங்களை வழங்கி இருக்கிறார்கள். அதாவது, வங்கி அதிகாரிகளும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

    அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஸ்வைப்பிங் எந்திரத்தில் பெரும்பாலானவை தனியார் வங்கிகளில் இருந்தே பெறப்பட்டுள்ளது.

    எனவே, தனியார் வங்கி அதிகாரிகள் பலர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.



    ஸ்வைப்பிங் எந்திரம் வாங்குவதற்குள்ள கட்டுப்பாடுகள் குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது:-

    ஒரு வர்த்தக நிறுவனம் ஸ்வைப்பிங் எந்திரம் வாங்க வேண்டும் என்றால் முறைப்படி எங்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் வியாபாரம் தொடர்பான பல விவரங்களை விண்ணப்பத்தில் நாங்கள் கேட்டு இருப்போம். அதில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

    அவர்கள் குறிப்பிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து எங்களுடைய வங்கி கள அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்வார்கள். அது சரியாக இருந்தால் மட்டும்தான் ஸ்வைப்பிங் எந்திரம் வழங்கப்படும்.

    ஒன்றிரண்டு எந்திரங்களுக்கு மேல் வழங்க மாட்டோம். அதற்கு மேல் தேவைப்பட்டால் அந்நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக இருக்க வேண்டும். அதற்கான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

    ஸ்வைப்பிங் எந்திரம் மூலம் தினமும் எவ்வளவு வர்த்தகம் நடைபெறும் என்பதையும் நாங்கள் கண்காணிப்போம். திடீரென அதிக பணம் பரிமாற்றம் இருந்தாலும் நாங்கள் அது பற்றி ஆய்வு செய்வோம்.

    எனவே, ஸ்வைப்பிங் எந்திரத்தை தவறாக பயன் படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாமலேயே வங்கிகள் எல்லா நடைமுறைகளையும் பின்பற்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் ஒரு நபர் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலே வருமான வரித்துறைக்கும், மற்ற அரசு புலனாய்வு துறைகளுக்கும் வங்கியில் இருந்து தகவல் சென்று விடும்.

    ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்ட நபர்கள் வங்கி கணக்குக்கு திடீரென கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது. அதுபற்றிய தகவல்களை வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு வங்கி அதிகாரிகள் சரியாக தெரிவித்தார்களா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    2017-ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது, அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் இருந்து எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் இருந்தன. ரூ. 4 ஆயிரத்து மேல் யாரும் பணம் எடுக்க முடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    ஆனால், அந்த நேரத்தில் இந்த மோசடி கும்பலிடம் தாராளமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழங்கி உள்ளது. மேலும் ரூ.500, ரூ. 1000 நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த பல நபர்கள் இந்த மோசடி கும்பல் மூலம் ரூ. 2 ஆயிரமாக மாற்றி இருக்கிறார்கள்.

    இவர்களுக்கு மட்டும் ரூ. 2 ஆயிரம் எப்படி கிடைத்தது? என்பதிலும் மர்மம் நிலவுகிறது. இதிலும் வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்து அவர்களுக்கு உதவி இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதனால் வங்கி அதிகாரிகளுக்கும், மோசடி கும்பலுக்கும் இருந்த தொடர்பு குறித்து போலீசார் இப்போது விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இதில் வங்கி அதிகாரிகள் பலர் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ATMscam
    ×